Tuesday, March 31, 2009

வந்தா மவராசி


வாய கட்டி
வவுத்த கட்டி

காடு கழனி
ஏறி இறங்கி

காசு பணம்
நான் சேத்தேன்

காசு பணம்
நான் சேத்து

குடிச போட்டேன்
நிலஞ் சேத்தேன்

வந்தா மவராசி
அன்பு செஞ்சா

குடும்பம்காத்தா
குலம் காத்தா

பசு ஒன்னு
காள ரெண்டு

காள சேத்து
பசு சேத்து

கஞ்சிக்காக அலையுறேங்க...

Monday, March 30, 2009

இருக்கும் இடத்தில் இல்லாதது


அய்யா பத்திரம் விக்கிற கடை தானாங்க இது என்று விசாரித்தார் கிராமத்து பெரியவர்.

இல்லீங்க அதோ அந்த கடைதாங்க என்று கைக்காட்டினார் கடைக்காரர்.

பணம் கொடுங்கனுங்க கொடுக்க முடியல அதனால என் நிலத்த எழுதி கொடுங்கறங்க அதுக்குதானய்யா பத்திரம் வாங்க வந்தேன். அங்க கிடைக்குங்கல..

கட்டாயம் கிடைக்கும் போயி கேளுங்க..

கையெடுத்து கும்புட்டு அப்போ வர்றேங்கய்யா அவ்விடம் அகன்றார் பெரியவர்.

அந்த பெரியவருடைய எதார்த்த இயல்பு நன்றி தெரிவித்த குணம்என் மனதை அசைத்தது.

இருக்கும் இடத்தில் இல்லாதது, இல்லாத இடத்திலும் இருக்கும்.

Sunday, March 29, 2009

ஒட்டேரி நரி

அதான் சாரி கேட்டாச்சுல்ல.. அப்புறம் என்ன

நீ பிரேக் போட வேண்டியதான பிரேக் போடாம வந்து இடிச்சுட்டு சாரின்னா.. எலாசொல்லுடா..

சரி வுடு என்று போக எத்தனித்தான் பள்ளிகூட மாணவன்.

என்னது போறியா நில்லுடா..என்று சொன்னான் குடிக்கார சிறுவன். கண்கள் சிவந்து போய் பள்ளிகூட சிறுவனின் சைக்கிளை பிடித்தவாறு நின்றுகொண்டிருந்தான்.

அந்தசமயம் பள்ளிகூட சிறுவனுக்கு தெரிந்தவர் வர என்னடா..விடுடா அவன என்றார்.

சைக்கிளை பிடிந்திருந்தவன் முறைந்தான் இவரை என்னடா பாக்குற என்று அவர் கேட்க..

என்ன சேதி தெரியுமா ..என்னா என்று முறைத்தவாறு இவரிடம் நெருங்கினான் சிறுவன்.

எல தம்பி நீ போடா டியூசனுக்கு என்று அவனிடம் சொன்னார்.

பள்ளிகூட சிறுவன் நகர்ந்தான் .

எலா பதில் சொல்லுடா என்று கத்தினான் சிறுவன்.

சிறுவன் அங்கிருந்து நகர்ந்தான்.

யோவ் உன்னாலதான்ய்யா அவன் ஓடிப்போயிட்டான் என்று இவரிடம் பாய்ந்தான் குடிக்கார சிறுவன்.

டேய் போடா என்று பொறுமையாய் சொன்னார்.

எலா என்னடா என்று சிறுவன் கேட்க..

இவர் அவனை உதைக்க ஆரம்பித்தார்.

இருடா இந்தா வர்றேன் சொல்லியபடி ஓடினான் சிறுவன்.

இவர் அந்த இடம் விட்டு அகன்றார்.

கொஞ்ச நேரம் கழித்து மொட்டை அரிவாளுடன் வந்தான் அடிவாங்கிய இடம் வந்தான் சிறுவன்அவன வெட்டமா உட மாட்டேன் என்று அந்த இடம் அலைந்தான் சிறுவன்.

சிறிது நேரத்திற்கெல்லாம் காவலர் இருவர் டூவீலரில் வந்தார்கள். எலா ..கம்மானாட்டி ஏர்ற வண்டியில என்று குடிக்கார சிறுவனை அழைத்து சென்றார்கள்.

ஒட்டேரிநரி என அழைக்கப்படும் அந்த சிறுவன் படிக்க வைக்க வசதியில்லாமல் ஹோட்டல்களில் வேலைப் பார்த்தவன்.

Saturday, March 28, 2009

உண்மையின் முகம் என்ன?

நிமிடங்களுக்குள்
ஓர் முகம்
நீ காட்ட
உனது உண்மையின்
முகம் தான்
என்ன?

விநாடிக்குள் பிளவுபட்டு
உடன் விளைவு தந்தாய்
உனது உண்மையின்
முகம் தான்
என்ன?

ஆடம்பரம்
அலட்சியம் ஆட்டிவைத்த
உனது பொருளாதாரம்
வரும்
போகும்

அன்பு தேடி
அமைதி தேடுவாய்
உண்மைகள் மறந்த
உன் இதயத்தில்
பொய்மையின் அரசாட்சியில்

உனது உண்மையின்
முகம் தான் என்ன?

பெண் வேண்டாம் பெண்ணோட தோழி போதும்.

மணலூருல பாப்பைய்யன் பொண்டாட்டி செத்துப்போச்சுன்னு துக்கம் சொல்ல சொன்னாங்க..

என்னது…

பாப்பைய்யன் பொண்டாட்டிங்க…

நாற பு… அவ மவலால ஏதோ செஞ்சுட்டு செத்துபோயிட்டா போலிருக்கு..

பக்கத்து வீட்டு பொண்ணுக்கு கல்யாணமா இவன் பொண்ணு போயி அலங்கார செய்ய போனாய்யா..

மாப்பிள்ளகாரன் அப்பயே இவள கணக்கு பண்ணிபுட்டான் கல்யாணமுடிஞ்ச கையோட அவளோடு வாழமா இவள இழுத்துகிட்டு ஓடி போயிட்டான். அதிலிருந்தே பாப்பைய்யன் பொண்டாட்டி என்னமோ மாதிரி இருந்திச்சிசான் ரெண்டு நாளக்கு முன்னடி தான் சொல்லிட்டு இருந்தான்.

நான் தொலச்சு தல முழுவிட்டு போங்கய்யா சொல்லிட்டு வந்தேன் என்றார்.

அதான் ஏதோ செஞ்சிட்டு செத்து போயிட்ட போலிருக்கு என்றவாறு துக்கம் விசாரிக்க கிளம்பினார் அந்த பெரியவர்.

Friday, March 27, 2009

ஒரு மனிதனின் மலர்ச்சி ஒரு விதி அல்ல.

மனிதனின் உணர்வு நிலை நூற்றாண்டுகளாக வளர்ச்சியடையவில்லை. எப்போதாவது ஒரு முறை தான் ஒரு மனிதன் மலர்ச்சி அடைகிறான்.

லட்சக்கணக்கான மக்களில் ஒரே ஒரு மனிதனின் மலர்ச்சி ஒரு விதி அல்ல. அது விதி விலக்கு. அவன் தன்னந்தனியாக இருப்பதால் கும்பலால் அவனை ச் சகித்துக் கொள்ளமுடியாது.

அவன் ஒருவிதமான அவமானச் சின்னமாகத் தெரிகிறான். அவன் ஒரு மனிதனாக இருப்பதே அவமரியாதையாகி விடுகிறது.ஏனென்றால் அவன் உன் கண்களைத் திறக்கிறான்.உன் ஆற்றலையும் உங்கள் எதிர்காலத்தையும் உணர வைக்கிறான்.

அதனால் தான் ஒரு கௌதம புத்தரோ ஒரு கபீரோ சுவாங்தஸ்வோ உங்களை நோகடிக்கிறார். காரணம் அவர் மலர்ச்சி அடைந்திருக்கிறார்.

ஓஷோ

Thursday, March 26, 2009

நெளிந்தாள் அந்த பெண்.

சிறுநீர் பரிசோதனை செய்ய மருத்துவரின் பரிந்துரைப்படி நடுத்தரவயது உடையவர் பரிசோதனை நிலையம் சென்றார். அங்கு இருபது வயது பெண் வேலைப் பார்த்தது.

அண்ணா பெயர் வயசு சொல்லுங்க.. அந்த பெண் கேட்க

வயசு நாற்பத்தஞ்சு பேரு பாலு என்றார் இவர்.

சரிப்பா போயி வேல எதும் இருந்தா முடிச்சுட்டு வாங்க ரிசல்ட் வாங்கிக்கலாம் அந்த பெண் சொல்ல

இவர் அதிர்ந்து போய் என்னம்மா ..
அண்ண….பேருஎன்ன வயசு கேட்ட

வயச கேட்டுபுட்டு அப்பான்னு சொல்லிட்ட..

அடுத்த தடவ வந்தா தாத்தா கூப்புடுவியாம்மா என்று கேட்க..

இல்லண்ண என்று நெளிந்தாள் அந்த பெண்.

படித்தது

நல்ல தோழமை தான் நல்வாழ்க்கை வழிகாட்டி. நட்பை தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனம் வேண்டும். கூடா நட்பு கேடாய் முடியும்.

Wednesday, March 25, 2009

மனைவியை கோபமாய் முறைத்து பார்த்தான்கணவன்.

தன் மனைவியிடம் அரிவாளை எடுத்து வரச்சொன்னான் கணவன்.

அரிவாளை கொண்டு வந்து கையில் கொடுத்தப்படி எதுக்கு இது? என்றாள் மனைவி.

மர கிளைகளை கழிக்க வேண்டும் என்றான் கணவன்.

மர கிளைகளை வெட்ட தொடங்கினான் கணவன்.

பாத்துங்க..

வெட்டி கொண்டிருந்தான்.

எங்க ..எங்க ..பாத்துங்க..

சும்மா இருடீ..பேசாதடீ..

வெட்டி விட்டு இறங்கினான்.

இன்னொரு மரம் கழிக்க தாவினான்.

அங்கு என்னங்க பண்ண போறீங்க? என்ற கேள்வி வைத்தாள் மனைவி.

மனைவியை கோபமாய் முறைத்து பார்த்தான்கணவன்.

பார்வை கோபத்தை தாங்க முடியாது அவளது முகம் சோகமானது.

வேலை முடியவில்லை இவனுக்கு பாதி மனது வேலையிலும் பாதிமனது என்னடா அவளிடம் கோப பட்டு விட்டோமே என்ற மனதாய்மரம் வெட்டி கொண்டிருந்தான்.

Tuesday, March 24, 2009

தஞ்சையை ஆண்ட பெண்ணரசி

தஞ்சையை ஆண்ட பெண்ணரசிஒரே ஒருவர் தான். கி.பி. 1736-37 ஒரே ஆண்டு மட்டும் மன்னராக திகழ்ந்த பாவாசாகிப் எனும் இரண்டாம் ஏகோஜியின் மனைவியான ராணி சுஜான்பாய் தான் அந்த பென்னரசி .

தமக்கு மகப்பேறு இல்லாததால் தம் கணவரின் மரணத்திற்குப் பின்பு தாமே அரியணை ஏறினார்.

பாவாசாகிப் இறந்தவுடன் காட்டுராசா எனத் தன்னை கூறிக்கொண்ட சாகுஜி தானே மராட்டிய அரசுக்கு முறையான வாரிசு என கூறி சித்தோஜி துளஜி துக்காஜி சுப்பாசெட்டி போன்ற உயர்பதவி வகித்தவர்கள் ஆதரவுடன் கஜான்பாய்க்கு எதிராக சூழ்ச்சிகள் செய்தார்.

கோட்டையின் ராணுவப் பாதுகாப்புத் தலைவனாக பதவி வகித்த சையத் ராணுவத்தினரைத் தனக்கு சாதகமாக்கிக் கொண்டு சுஜான்பாயை கைது செய்ய முற்பட்டான்.

சுஜான்பாய் தாமே வாளேந்தி போரிட்டு வீரமரணம் அடைந்தார்.

இவரது ஓவியங்கள் தஞ்சை பெரிய கோயிலில் முருகன் சன்னதி அருகே உள்ள ஒரு அறையில் கம்பீரமாக காட்சியளிக்கிறது.

புகைப்பட தொகுப்பு







பனங்கள்ளு குடிக்க வர்றீங்களா..

கிராமத்து நண்பனிடம் அவனுடைய நண்பர்கள் குழு மாப்ள நாளக்கு காலையிலே வர்றோம் கலப்படம் இல்லாத கள்ளா வாங்கி வைங்க என்றார்கள்.

சொன்னபடி காலை ஆறு மணிக்கெல்லாம் சங்கமம்ஆனார்கள் அந்த நண்பர்கள் குழு அங்கிருந்து கிராமத்து நண்பனுடைய வீட்டிற்கு சென்றது.

கள்ளை நண்பனுடைய தாத்தா வாங்கி வந்தார். பெரிய சட்டியில் அசடுடன் நுரைத்து இருந்தது கள். ஏற்கனவே கள் குடித்த அனுபவ நண்பன் ஒருவன் சட்டியை எடுத்து நுரையை ஊதி ஊதி தெளிவான கள்ளை சொம்பில் ஊற்றி கொடுத்தான்.

கள் சாப்பிடுவதற்கு வசதியாக சுண்டல் எலி கறி வைக்கப்பட்டிருந்தது. தேவை தக்கவாறு குத்தார்கள். முன் எச்சரிக்கை உள்ளவர்கள் அளவுடன் குடித்தார்கள். குடித்து அனுபவபட்டவர்கள் தயக்கம் இல்லாத மற்றவர்களை விட நிறைய குடித்தார்கள்.

முன் பின்னாய் ஒவ்வொருவரும் ஏப்பம் விட்டார்கள் . கண்கள் சிவ்வென்று இருக்க லேசான கிறக்கம் அங்கிருந்த பெரியவர் கள்ளின் மருத்துவ குணங்கள் மற்றும் அவர்கள் முன்காலத்தில் குடித்த விதம் பற்றி விளக்கி கொண்டிருந்தார்.

பெண்களுக்கு வரும் வெள்ளைபடுதல் என்ற நோயை தினமும் ஒரு டம்ளர் வீதம் நாற்பது நாட்கள் குடித்து வந்தால் தீர்ந்து விடும் ஆஸ்துமா நோய் குணமாகி விடும் என்றெல்லாம் சொல்லி கொண்டிருந்தார்.

நேரம் ஆகியதும் உட்காரமறுத்த கால்கள் பேச்சை நிறுத்தி வெளி கிளம்பின சிறு தள்ளாட்டத்துடன் கேலி பேச்சுகளுடன் தங்கள் சங்கமித்த இடம் நோக்கி அந்த நண்பர்கள் குழு புறப்பட்டது.

Saturday, March 21, 2009

மனித நேயம் அறவே இல்லாத விசாரணை

அதிகாலை 4.10 அந்த வீடு ஆழ்ந்த உறகத்தில் இருந்தது.

பாப்பக்கா..பாப்பக்கா… என்று வழக்கமாய் பையன் கூப்பிடும் குரல்.

பாப்பக்கா எனப்படும் அந்த பெண் எழுந்து கதவை திறந்தாள்.

தப..தப வென்று காவலர்கள் உள்ளே நுழைந்தார்கள். கூடத்தில் படுந்திருந்தவர்களை எழுப்பி விசாரித்தார்கள்.

வீட்டின் அனைத்து அறைகளையும் கேட்டறிந்து சோதனையிட்டார்கள். எந்த அறையையும் விட்டு வைக்கவில்லை. சோதனையிட்டார்கள் விபரம் அறிந்தவுடன் சென்றார்கள்.

வீட்டினுடைய சொந்தகாரர் வழக்கொன்றிற்காக விசாரணை என்ற பெயரில் நடந்த கூத்து இது. விசாரிக்கபட்ட வீடு கலவரப்பட்டது.

எதேச்ச அதிகாரம் என்னவென்று அப்பொழுது தான் உறைத்தது . மனித நேயம் அறவே இல்லாத அப்பாவி மக்கள் துன்ப படும் அதிகார ஆளுகையில் இரக்கமாவது கருணையாவது அந்த தோட்டத்தில் செடிகளும் கொடிகளும் வாழ்ந்தால் என்ன? அழிந்தால் என்ன?

Friday, March 20, 2009

தான் இறக்கபோவது தெரியாது.

நடுத்தர வயது பெண் தன்னுடைய பெண் ணுடன் மலையி்ல் குடியிருக்கும் சிவனை தரிசிக்க தன் ஊரிலிருந்து செல்பவர்களுடன் சேர்ந்து சென்று சிவனை தரிசித்து இறங்கினாள்.

இயல்பில் தெய்வ பக்தி மிகுந்தவளாக வெளியில் தெரியும் . உள்ளேயும் பக்தியுடன் இருந்திருப்பாள் என்று நம்புவோம். இப்போது அவள் இல்லை.

சிவனை தரிசித்துவிட்டு ஊருக்கு வந்தவுடனே அவளுடைய பெண்ணுக்கு அம்மை போட்டது. அம்மை வந்தால் மருத்துவரின் மருத்துவத்தை விட அம்மைக்காக இவர்களின் தெய்வ சடங்கு முக்கியமானது.

உடனடியாக அம்மனுக்கு பாலாபிஷேகம் வேண்டிகொண்டு ஒருநாள் காலை பக்கத்திலிருக்கும் அம்மன் கோவில் போய் பாலாபிஷேகம் செய்து விட்டுஅபிஷேக பாலுடன் வீடு திரும்பினாள்.

பஸ் ஸ்டாப்பிலிருந்து நடந்து செல்லும் தூரமே அவளுடைய வீடு . ஓரமாய் நடந்து வந்து கொண்டிருந்தாள் அவள் வந்த திசையிலே கார் ஓன்று பள்ளத்துக்காக ஒதுக்கியதில் நிலை தடுமாறி இவள் மேல் மோதியது. தூக்கியெறியப்பட்டு அதே இடத்தில் இறந்தாள்.

இறந்த காலை எத்தனை விதமான எண்ணங்கள் மனதில் ஓடியிருக்கும் . வாழ்க்கையோடு தன்னை மேன்மேலும் இணைத்து கொள்ள தான் இறக்கபோவது தெரியாது எத்தனை விதமான செயல்கள் செய்திருப்பாள்.

அவள் காலையில் அவிழ்த்து விடும் நாய்குட்டி இன்னமும் அவிழ்க்கபடாமல் …

ராகுகாலம் பார்க்க கடிகாரம்

சுவிஸ் நாட்டின் கடிகார தயாரிப்பு நிறுவனமான “பர்காட்” பிரத்யேக கைக்கடிகாரம் தயாரித்துள்ளது. ராகு காலம் பார்த்து வேலை செய்பவர்களுக்கு வசதியாக அறிமுகப்படுத்தியுள்ளது.

தினமும் ராகு காலம் வரும் நேரத்தில் கடிகார டயலில் வண்ணம் மாறிவிடும் முடிந்த பின் பழைய நிறத்திற்கு வந்துவிடும் .விலை மாடலை பொருத்து ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை.

எம கண்டம் பார்ப்பவர்களுக்கு என்னங்க செய்யறது?

முடிச்சவங்க வாங்கிருவாங்க.. முடியாதவங்க இருக்கவே இருக்கு காலண்டர் விடுங்க கவலை.

Thursday, March 19, 2009

அனாதை

திக்கற்று திசையற்று
அலையும் மனது

நன்றும் தீதும்
அறியா அறிவு

இன்பமோ துன்பமோ
தன்னோடு

அன்பை தேடும்
இதயமாய்

நெஞ்சம் கதறி
நெஞ்சம் இறுகி

துளிர்க்கும் கண்ணீரை
மறந்த கண்கள்

புன்னகை மறந்த
இறுகிய முகமாய்

“அனாதை”

பொய் இல்லா வாழ்வு ஏது?

காலேஜ் இளைஞன் தன் நண்பர்களுடன் நின்று கொண்டிருந்தான் வீட்டுக்கு போக மனசு இல்லை . அவனுடைய செல்பேசி ஒலித்தது யார் அழைப்பது என்ற கேள்வியுடன் செல்பேசி பார்த்தான் “ காலிங்..அப்பா..” என்று வந்தது ..

அப்பா..என்னப்பா..

எங்கடா இருக்க ..

முக்கியமான குறிப்பேடு வாங்க ப்ரெண்ட்ஸ் வீட்டுக்கு போய்கிட்டிருக்கேன்.

அப்படியா..சரி நீ போ..

என்னப்பா விசயம்..

முக்கியமான சேதி தான்..சரி நீ போ..
நான் பாத்துக்கிறேன்.

இவன் நின்று கொண்டிருந்தது தன் நண்பர்களுடன்.

காலேஜ் விட்டு வந்தவுடன் முகம் கை கால் அலம்பி டீ குடித்து நோட்ஸ் எழுதப்போறேன் கூப்படாத என்று அம்மாவுக்குகட்டளையிட்டபடி தன்னுடைய அறைக்குள் நுழைந்தாள் யுவதி.

நுழைந்த கையோடு கைகள் பரபரத்தது தன்னுடைய செல்போன் நம்பர் பேடில் மிஸ்டு கால் ஒன்று கொடுத்து கட் பண்ணினாள்.

மறுநிமிடமே அவளுடைய செல்பேசி அவளோடு ஒட்டி கொண்டது.

இரவு சாப்பாடு என்ன செய்யவேண்டும் என்பதற்காக தன் பெண்ணுடைய அறைக்கதவை தட்டினாள் தாய்..

நான் சொல்லிட்டு தான போனேன் . தொந்தரவு பண்ணிகிட்டே இருக்கியே ஏன்? உக்கிரமாய் கத்தினாள் பெண்.

பேசி கொண்டிருந்தாள் எழுதவில்லை.

தெரியாதனமா பாரதி எழுதிபுட்டாருங்க..

பொய் இல்லாவிட்டால் பார்வை நேராகும் கவனி!
பொய் தீர்ந்தால் நேரே பார்க்கலாம்

பயம் தீர்ந்தால் நேரே பார்க்கலாம் கவனி!
பொய் தீர்ந்தால் பயம் தீரும்!
பயம் தீர்ந்தால் பொய் தீரும்!

Wednesday, March 18, 2009

என் வீட்டு பொம்பள சரியில்லங்க

ஆணுக்கு பெண் தேவை. பெரியவர் ஒருவர் சொன்னார்
“அவ வந்தாங்க..அந்த லெட்சுமி வந்தாங்க எனக்கு எல்லா வந்துச்சு குடும்பம் விருத்தியாச்சுங்க எம்புள்ளங்களுக்கு எல்லா செஞ்சுபுட்டங்க ” என்றார்.

இன்னொருத்தர் சொன்னார்“ என் வீட்டு பொம்பள சரியில்லங்க நான் என்ன செய்ய நாம கஷ்டபட்டு வேல செஞ்சு கொண்டு வந்து தரதாங்க முடியும் குடும்பம் நிக்கறதும் நிக்காததும் எல்லாம் அவ கையிலதாங்க” என்றார்.

முன்னது வாழ்வித்தது பின்னது அழிவுக்கு காரணமாயிருந்தது.

வாழ்க்கை என்ற கடலை கடக்க பெண் என்ற படகு அவசியம் தேவை புத்தகம் சொன்னது.
இதையே மாத்தி “ வாழ்க்கை என்ற படகை ஓட்ட கவிழ்க்க பெண் என்ற படகோட்டி தேவை ” என்பது சரியாய் இருக்குமாங்க..

Tuesday, March 17, 2009

சுகப்பிரசவம் பிள்ளைப்பேறு வேண்டுபவர்கள்


சுகப்பிரசவம் பிள்ளைப்பேறு வேண்டுபவர்கள் அந்த கோயிலை தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. பாடல் பெற்றதலமான தஞ்சை மாவட்டம் திருகருக்காவூரில் எழுந்தருளியுள்ள கர்ப்பரட்சாம்பிகை கோவில் தான் அது.

வசதியானவர்கள் மட்டுமே வழிப்பாடு செய்ய ஏற்ற திருத்தலம் அது. தமிழகத்தின் எல்லா பகுதிகளிலிருந்தும் வட மாநிலங்களிலிருந்தும் வந்து கொண்டே இருப்பார்கள்.

எப்படியெல்லாம் காசை வாங்கலாமோ வாங்கிவிட துடிக்கும் நிர்வாகம் ஒருபுறம் காசுக்காகவே வாழும் அர்ச்சகர்கள் வியாபாரிகள் மறுபுறம்.

இதற்கிடையில் நம் பிரார்த்தனை நாம் செலுத்த வேண்டும். எப்படியோ காசை செலுத்தி முண்டியடிக்கும் கூட்டம் ஒன்று பிரார்தனை செலுத்தும்.

பிள்ளைப்பேறு வேண்டுபவர்கள் அர்ச்சனை சீ்ட்டு பிள்ளைவரம் வேண்டுபவர்கள் வேண்டுதல் செய்ய வேண்டுதல் உபகரணங்களுடன் தனிக்கட்டண சீட்டு என கலர் கலராய்கட்டண சீட்டுகளை கையில் வைத்திருக்க வேண்டும்.

திருத்தலத்தில் வழிப்பட்டு குழந்தை பெற்றவர்கள் கோவிலுக்கு வந்து வழிப்பட்டு தன் குழந்தையை தங்க தொட்டில் வெள்ளி தொட்டில் வைத்து சவாரி விட பெருந்தொகை வேண்டும். வசதியானவர்களுக்கு உரித்தானது. நடுத்தர மக்கள் சேமிப்பை கரைக்க வேண்டும் அல்லது கடன் கட்டாயம் வாங்கி வர வேண்டும்.

கர்ப்பகிரக்கத்திலிருந்து வெளிவந்த அர்ச்சகர் தீப தட்டுடன்வந்து தீபம் காண்பித்து பணம் வைத்தால் தான் நீங்கள் அங்கே குங்குமம் திருநீறு பூசி கொள்ளலாம் இல்லாவிடில் பணம் படைத்தவர்கள் வாங்கி வைத்திருக்கும் திருநீறு குங்குமத்தை வாங்கி பூசி கொள்ளலாம்.

சைக்கிள் வியாபாரி “ அம்பாளுக்கு அரளி முல்லைவனநாதருக்கு முல்லைப்பூ முழம் பத்து ரூபா” என்று கத்தினார் டாடா -சுமோ விலிருந்து வெளியூரிலிருந்து வந்தவர்கள் இறங்கி கொண்டிருந்தார்கள்.

காசேதான் கடவுளப்பா…

Monday, March 16, 2009

மரண வாக்குமூலம் புனிதமானது.

மரணப் படுக்கையில் இருப்பவர் ஆழ்ந்த அமைதியான நிலையில் தனது வாக்குமூலத்தை தருகிறார். இந்த வாக்கு மூலம் புனிதமானது.

இதில் அடங்கியுள்ள உண்மையை நம்புவதற்கு சட்டத்தில் இடம் உண்டு இதன் காரணமாகவே மரண வாக்குமூலம் அளிக்கும்போது சத்திய பிரமாணம் எடுப்பதும் குறுக்கு விசாரணை செய்வதும் தவிர்க்கப்படுகிறது.

மிக அபூர்வமாகவே மரண வாக்குமூலம் பொய்யாகி விடுகிறது. ஏனெனில் மிக கொடுமையான குற்றத்தில் பாதிக்கப்பட்டவர் மட்டுமே நேரில் பார்த்த சாட்சியாக உள்ளார்.

மரணவாக்குமூலம் ஓப்பிப்பது போலவோ கற்பனையாகவோ இருத்தல் கூடாது. மரண வாக்குமூலம் சந்தேகத்துக்கு இடமின்றி நீதிமன்றம் நம்பினால் மேற்கொண்டு அதை உறுதிப்படுத்துவதற்கு சான்றுகள் தேவையில்லை.
மரணப்படுக்கையில் மிக அபூர்வமாகவே ஒருவர் பொய் சொல்வார் என்று உச்ச நீதிமன்றம் கருத்து கூறியுள்ளது.

Sunday, March 15, 2009

பிளேபாய் அவுட்


பெண்களின் நிர்வாணப் படங்களுடன் வெளியாகும் “பிளேபாய்” பத்திரிக்கை அதோட புகழ் உங்களுக்கு தெரியுங்க ..

இன்னமும் வியாபாரம் படு ஜோர்! உலக அளவில் ஏற்ப்பட்ட பொருளாதார நெருக்கடியால் இதோட நிறுவனர் ஹக் ஹெப்னர் இவரும் பாதிப்பு அடைந்துள்ளார். இதனால் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஹோம்பை ஹில்ஸ்மேன்சன் வீட்டை விற்க முடிவு செய்துள்ளார்.

வீட்டோட விலை ரூ.140 கோடிங்க எல்லா நேரதாங்க..

Saturday, March 14, 2009

உங்க காலத்திலேயே கிலோ முப்பதுன்னா

தந்தை பையன் வீட்டு கூடத்தில் உட்கார்ந்து பேசி கொண்டிருந்தார்கள். தாத்தாவும் உட்காந்திருந்தார். தாத்தா வாத்தியார் தொழில் பார்த்து ஓய்வு பெற்றிருந்தார்.பையனுக்கு அங்கே இங்கே அலைந்து திரிந்து அவரையும் ஆசிரியர் பணியில் அமர்த்திவிட்டார்.

சார் …அரிசி என்று வீட்டு வாசலில் குரல் கேட்டது.
போய் வாங்கிட்டு வாடா என்று பேரனை விரட்டினார் தாத்தா.

வாங்கி வந்து இறக்கி வைத்த கையோடு கிலோ எவ்வளப்பா என்றான்.

அரிசி ஒரு கிலோ முப்பது வரும் என்றார்.

உங்க காலத்திலேயே கிலோ முப்பதுன்னா எங்க காலத்துல கிலோ முன்னுறோ…மூவாயிரமோ தெரியல..

நீங்க பாட்டுக்கு எனக்கு வெறும் வீட்ட மட்டும் சொத்தா எழுதி வைச்சுபுடாதீங்க அஞ்சாறு லட்சம் பணமா
வைச்சுட்டு செத்துபோங்க என்று பையன் சொல்ல..

அதிர்ந்து போய் எதுவும் பேசாமல் அப்பாவும் தாத்தாவும் மௌனமாய்..

Friday, March 13, 2009

பனங்கள்ளு


இழுத்து மடித்து கோவணமாய் கட்டபட்ட கைலி மேலே பனியன் இடுப்பில் கைலியின் முடிச்சு நழுவாதவாறு பெல்ட் திடகாத்திரமான அந்த மனிதர் பனை மரம் ஏறுவதற்காக தன்னுடைய கருவிகளான பனை நுங்கு சீவும் அரிவாள்ஒரு பிளாஸ்டிக் குடம் இணைக்கப்பட்ட பனை நாரினால் கயிற்றை இறுக கட்டி கொண்டு மரம் ஏற ஆரம்பித்தார்.

இரண்டு மூன்று பானைகள் கட்ட பட்ட மரத்தின் உச்சிக்கு ஏறி ஒரு பானை எடுத்து வடிதிருந்தகள்ளைதன்னுடைய இடுப்பிலிருந்த பிளாஸ்டிக் குடத்தில் கவிழ்த்து கொண்டார். பனை நுங்கு காய்க்கும் தண்டை திரும்பவும் சீவி பானையை தண்டில் மாட்டிவிட்டார். வடியும் கல்லை திரும்பவும் சேகரிக்க மாட்டி விட்டு அடுத்த பானைக்கு தாவினார்.

எல்லா பானைகளிலிருந்த கள்ளை சேகரித்து விட்டு பாதி மரம் இறங்கியிருப்பார் கீழிருந்த கூட்டம் பர பரக்க ஆரம்பித்தது.

டேய் ..போடா..போயி அஞ்சு சொம்பு வாங்குடா..

எண்ண எனக்கு ரெண்டு சொம்பு கொடுங்க...

இருங்க ..இருங்க இன்னும் பாக்கி மரம் ஏறனும் எல்லாருக்கும் தர்றேன் அவசர படுத்ததியோ என்றபடி தான் சேகரித்த கள்ளை குடிசைக்குள் கொண்டு சென்றார்.

எண்ண காசு வேணாலும் கூட வாங்கி நல்ல கள்ளா கொடுண்ண..

எல்லா நல்ல கள்ளுதாங்க நான் என்னங்க செய்ய நானும் வார மாமூல் கட்டனுங்க இல்லாட்டின்னு டான்னு வந்துருவாங்க என்றபடி அடுத்த மரம் ஏற தயாரானார்.

Thursday, March 12, 2009

ஒற்றைத் தலைவலி





ஒற்றைத் தலைவலி எனப்படும் “மைகிரேன்” துன்புறுவோர் பலர். வலியால் அவதிபடுவோர் எதுவுமே செய்ய இயலாது.சிலருக்கு இரண்டு மூன்று நாள் வரை நீடிக்கும்.

தலையில் நீர் கோர்ப்பதால் இந்த தலைவலி வருவதாக கூறப்பட்டாலும் தட்ப வெப்ப நிலை மாறுதல் போதிய காற்று இன்மை மைகிரேன் தலைவலி வரும் என்பது ஆராய்ச்சி முடிவு.

மைகிரேன் தலைவலியை அதிகரிக்கும் காரணங்களில் சில வகை உணவு மற்றும் மதுப்பழக்கம் மட்டுமின்றி மனஇறுக்கமும் காரணம் என்பது ஆராய்ச்சி முடிவு.

வானம்

நட்சத்திரங்கள்
சிதறிய வானம்

இடைவெளியாய்
வெகுதூரம் ஒளிர்ந்த
விண்மீன்கள்

ஆயிரம் ஆயிரம்
ரகசியங்கள்
அதன் உள்ளே

அறிவாய் பார்க்க
மனித மனம்
தெரிந்ததாய் சில
தெரியாததாய் பல

அமைதியாய்வானம்
எங்கும் இருள்
வெளிச்சப் புள்ளிகளாய்
விண்மீன்கள்.

Wednesday, March 11, 2009

விஜய் மல்லைய்யாவின் பெருந்தன்மையும் இந்திய அரசின் அற்பதனமும்.






காந்தியின் உடைமைகள் ஒரு மூக்குக் கண்ணாடி இரண்டு பாத்திரங்கள் காலணி ரூ . 9.3 கோடிக்கு ஏலம் போனது.

ஏலத்தை எடுத்தவர் இந்தியத் தொழிலதிபர் விஜய் மல்லைய்யாஇவர் தான் கடந்த 2005 ம் ஆண்டில திப்பு சுல்தானின் வீரவாளையும் நாட்டுக்கு மீட்டு கொடுத்தார்.

“இந்திய அரசு சார்ப்பில் யாரும் என்னிடம் பேசவில்லை இது முழுக்க முழுக்க எனது சொந்த முடிவு” என்று குறிப்பிட்டுள்ளார்.

காந்தியின் உடைமைகளை ஏலத்தில் எடுப்போம் என்று கூறிய மத்திய அமைச்சர் அம்பிகா சோனி அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பேச்சு வார்த்தை மட்டுமே நடந்தது பொருள்களை மீட்க தீவிரம் இல்லை.

பெருந்தன்மையின் காலடியில் தான் அரசு .

Tuesday, March 10, 2009

சுடுக்காட்டு காதல்

அந்த காலேஜ் பையனுக்கு வீட்டில் பயங்கர நெருக்கடி. கல்லூரி இல்லாத நாட்களில் செல்போன் தான் அன்றைய வாழ்வு. கல்லூரி உள்ள நாட்களில் மாலை ஐ ந்து மணி முதல் செல்போன் அவனோடு ஒட்டி கொண்டு விடும்.

அவனுடைய வீடு கண்டிப்பு நிறைந்தது. முதலில் நண்பர்களுடன் செல்போனில் பேசிக்கொண்டிருக்கிறான் என்று நினைத்துள்ளார்கள். நாள் ஆக ஆக அவனுடைய வீட்டில் இவனிடம் விசாரணை அதிகமானது.

பேசுவதற்கு நெருக்கடி அதிகமானவுடன் வீட்டை விட்டு வெளியே சென்று பேச ஆரம்பித்தான். மாலை ஐந்து மணி ஆகி விட்டால் போதும்தன்னுடைய பைக் எடுத்து கொண்டு பக்கத்திலுள்ளகிராம சாலைகளுக்கு சென்று பேசி கொண்டே இருப்பான்.

கிராமத்திலிருந்து வருவோர் போவோர் இவனை வித்தியசமாக பார்த்தபடி செல்வார்கள்.

இரண்டு நாட்கள் ஒரு தடவை சாலைகள் மாறிகொண்டேயிருக்கும். அதில் ஒரு சாலை சுடுக்காட்டுக்கு செல்லும் பாதை .

அந்த பாதையில் போய் சுடுக்காட்டிற்கு அருகில் போய் பேசுவான் பொழுது சாய்ந்தவுடன் அங்கிருந்து கிளம்புவான்.

வார நாட்களில் மூன்று நாட்களில் அந்தசாலையில் பார்த்து விடலாம்.

சுடுக்காட்டு காதலாக இருக்குமோ இது...

Monday, March 09, 2009

மது அருந்துமிடம்.

கிராமம் நகரமும் சார்ந்த இடத்தில் அமைந்த மது அருந்துமிடம். மாலை ஆறு மணி குடிப்பவர்கள் வருவதும் போவதுமாய் ஆரவாரமாய் இருந்தது.

உள் நுழைந்தவர்களை ஏறிட்டு பார்த்த கண்கள் தன்னுடைய எண்ணங்களுக்கு ஏற்றவாறுஅவர்களை வடிவமைத்து கொண்டார்கள்.

எல்லா மேசைகளிலும் குவார்ட்டர் பிராந்தி பாட்டில்கள் முக்கிய இடம் பெற்றிருந்தன. பீர் பாட்டில்களுக்கு இரண்டாவது இடம். மேசைகளில் இருந்த தட்டுகளில் வருகடலை சுண்டல் மேசையில் பாதியும் தட்டுகளில் பாதியும் இரைந்து கிடந்தன.

பாட்டில் மூடிகள் சிகரெட் துண்டுகளும் தரையை ஆக்கரமித்தன.

இருவர் மூவர் நால்வராய் உள்நுழைந்தார்கள் வெளியேறினார்கள்.

எலா..பு…மவனே ..நான் சொல்லறத கேளுடா..நீ இன்னம அவன்கிட்ட போவாத..

என்னடா நான் சொல்றது ரைட்டா ..தப்பா…

என அன்றைய வேளையில் ஏற்ப்பட்ட கஷ்டங்கள் ஏமாற்றங்கள் சந்தோசங்களில் விவாதம் தொடங்கி இறந்தகாலம் எதிர்காலம் என நீண்டது.

யேவ்..இங்க வா..

எண்ணண்ண.. சரக்கு சோடா வாங்கி குடுப்பவர்

கணக்குடு..

இந்தாங்க எல்லா போவ பாக்கி அம்பது இருக்கு என நீட்டினார்.

இந்தா பத்த ரூவா..

யாருங்க இந்த மேசக்கு..

இந்தா வர்றேண்ண என்றபடி நகர்ந்தார் சரக்கு வாங்கி தருபவர்.

Saturday, March 07, 2009

ஃப்ளோசரன்ட் பல்புகளில் மறைந்துள்ள ஆபத்து

ஃப்ளோசரன்ட் விளக்குகள் குறைவான மின்சாரம் எடுத்து கொண்டு அதிக வெளிச்சம் தருவதால் சமீபகாலமாக அதனுடைய
பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகமாகி உள்ளது.

மின்சேமிப்புவழிகோலும் அதே வேளையில் கரியமில வாயுவின் (கார்பன்) வெளிப்பாடு இல்லாமல் இருப்பதே இதன் வரவேற்புக்கு முக்கிய காரணம்.

இது மிகப்பெரிய ஆபத்தையும் உள்ளடக்கியுள்ளது. இந்த பல்புகள் பயன் முடிந்து தூக்கி எறியப்படும்போதுதான் அந்த அபாயம் வெளிப்படுகிறது. நச்சு ரசாயனமான பாதரசத்தை இந்தச் செயலிழந்த பல்புகள் உள்ளடக்கி இருப்பதைப் பற்றி நாம் கவலைப்படுதில்லை .

சுற்றுச்சூழலில் பாதரசம் என்கிற ரசாயனம் மிகக் கடுமையான உடல்நலக் கேடுகளை உருவாக்கும் தன்மையது. சில வருடங்களுக்கு முன்னால் ஜப்பானில் பாதரசம் கலந்த தண்ணீரில் பிடித்த மீன்களை உட்கொண்டதால் ஆயிரக்கணக்கானோர் நரம்புமண்டல பாதிப்பைச் சந்திக்க நேர்ந்தது. மூளைக் காய்ச்சல் உள்பட பல நரம்புசம்பந்தமான் நோய்களை ஏற்படுத்தும் தன்மையது பாதரச உலோகம்.

சமூகக் கட்டுப்பாடு அதிகம் இல்லாத நாடுகளில் எல்லா குப்பைகளையும் ஒன்றாக கொட்டுவது வழக்கம். இதில் பயன் பாடு முடிந்த ஃப்ளோசரன்ட் பல்புகள் உடைந்து அதிலுள்ள பாதரசம் மண்ணிலோ காற்றிலோ கலந்து சுற்றுச்சுழல் பாதிக்கப்பட்டு ரசாயனத்தின் பாதிப்பு மனிதர்களை தாக்குவது எதிர்பார்க்க வேண்டிய விபத்து.

உடனடியாக விழித்துக் கொண்டு செயல்பட வேண்டிய தருணம் இது. விஞ்ஞான வளர்ச்சியின்ஆபத்துகளிலிருந்து தப்பித்து கொள்ள தயங்குவது விவேகமல்ல!

நிம்மதியாய் நீ தூங்கு

உன்னில்
ஆயிரம் கவலைகள்

நகராமல் நடுவே
நிற்கும் கல்லாய்
உனது வேதனைகள்

தவிர்க்க முடியா
வாழ்க்கையின்
ஓர் அங்கமாய்

உருண்டோடும்
வாழ்க்கையின் சக்கரம்
சுழன்றபடி
இருக்க...

நின்று விட்டால்
வாழ்க்கை ஏது?
முகவரி ஏது?

நிம்மதியாய்
நீ தூங்கு.

Friday, March 06, 2009

ரூபாய்க்கு குறியீடு கண்டுபிடித்தால் பரிசு ரூ.2.5 லட்சம்


அமெரிக்க டாலர் ஐரோப்பிய யூரோ இங்கிலாந்தின் பவுண்டு ஜப்பானினன் யென் ஆகிய கரன்சிகளுக்கு குறியீடு இருப்பது போல இந்திய ரூபாய்க்கும் குறியீடு உருவாக்கித் தருபவர்களுக்கு ரூ.2.5 லட்சம் பரிசு அறிவித்துள்ளது மத்திய அரசு.

சின்னத்தை அனுப்புபவர்கள் இந்திய ரூபாயை அது எந்த வகையில் பிரதிபலிக்கிறது என்பதையும் விளக்க வேண்டும்.

ஏப்ரல் 15 ம்தேதி கடைசி மேலும் விபரங்களுக்கு
http://finmin.nic.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

Thursday, March 05, 2009

தற்கொலை செய்தால் ரூபாய் 2 லட்சம்.


உலக வர்த்தக மயம் வறட்சி கடன் தொல்லை ஆகிய காரணங்களால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திராமகாராஷ்டிரா மாநிலங்களில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இதையடுத்து விவசாயக் கடன்களைதள்ளுபடி செய்வதாக மத்திய அரசு அறிவித்தது.

பஞ்சாப் அரசு ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. பஞ்சாப் விவசாயிகளின் நிலைமை கேள்விகுறியாக உள்ளது. பஞ்சாப் அரசும் மத்திய அரசு உதவித்தொகையை நிராகரித்துவிட்டது.

கடந்த சில ஆண்டுகளாக பஞசாப்பில் விவசாயிகள் தற்கொலை செய்வது அதிகரித்து வருகிறது.

கடந்த திங்கள் கிழமை கூடிய பஞ்சாப் மாநில அமைச்சரவை கூட்டத்தில் “விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டால் அவர்கள் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரணத்தொகை அளிக்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் நலன் காக்கும் அரசின் அறிவிப்பைப் பார்த்தீர்களா..

Wednesday, March 04, 2009

எப்படி வந்தது ? என்ற வினா

தெளிவாய் தெரியும் அவனது பலவீனம். தன் செயல் எப்படி உளளதோ என்று நினையாமல் பிறர் செயல்களை அறியும் ஆர்வம்.

அவனோடு பழகுபவர்களில் சிறு மாற்றம் நிகழ்ந்தாலும் அதைப்பற்றி அறிந்து கொள்ளும் பண்பு அந்நிகழ்வோடு தன்னை ஒப்பிட்டு பார்த்தல்.

அவன் மனதுடன் தொடர் சண்டை யும் தொடர் விசாரணையும் நடக்க அமைதி இழந்தவன் ஆனான்.எப்படி வந்தது ? என்ற வினா
ஏன்? என்று உருமாற்றம் பெற்றது.

பிறர்க்கு அமைந்தது நமக்கு அமையவில்லையே என்ற ஏக்கத்தின் வெளிப்பாடா அல்லது நமக்கு அமைந்தது பிறர்க்கு அமையகூடாது என்ற குணத்தின் வெளிப்பாடா
தெரியவில்லை.

Monday, March 02, 2009

என்னடி..என்ன உடம்புக்கு..

டேய்..தம்பீ..புது சட்ட வேணுமாடா.. தந்தை

வேணாம்..எப்பா ஒரு பேட் வாங்கி தாப்பா..

மறுநாள் புது பேட் வாங்கி பையனிடம் நீட்டினார் தந்தை

ஹைய்யா என்று வாங்கி கொண்டு நண்பனிடம் காட்ட ஓடினான் பையன்

அவனது நண்பன் கேட்டான் யாருடா வாங்கி கொடுத்தது

எங்கப்பா..

எங்கப்பா எம்மேல எவ்வளவு பாசமா தெரிமா இருப்பாரு..நான் எத கேட்டாலும் வாங்கி கொடுத்துடுவாரு..

அன்றைக்கு கடுமையான வேலை வீட்டில் அவளுக்கு வேலை சென்று திரும்பி வந்த கணவன் இவள்உடல் வலியுடன் படுத்திருப்பதை பார்த்துவிட்டு

என்னடி..என்ன உடம்புக்கு..

ஒன்னுமில்லங்க..உடம்ப வலிக்குது..

ஏதும் மாத்தர முழுங்கிறியா..இல்ல எதாச்சும் தைலம் தேச்சு விடுவா என்று கேட்டான்.

மனசு குளிர்ந்து போய் என் புருசன் மாதிரி உண்டா என்று பக்கத்து வீட்டுகாரியிடம் புகழாரம்.

பிறர் நலன் தொடர் கவனம் அன்பின் விளக்கமாய் இது போன்று பல விசயங்களை சொல்லலாம்.

அன்புள்ள காதலா அன்புடன் 5

அவனுடன் ஆரம்பித்த
எனது உறவு

என்னில் எழும்
புதிய மாற்றம்

நிறைய பேசினேன்
நிறைய சிந்தித்தேன்
அவனைப்பற்றி..

ஒன்றாய் நடந்தோம்
என் தோள் மீது
அவனது கரம் தவழ..

தட்டிவிடா முடியா
இனிய மகிழ்ச்சி
என்னுள்

கைகள் சேர்க்க
எண்ணுகிறேன்
வேண்டும் மனது
வேண்டாம் என
தடைபோட

அனிச்சையாய்
கைகள் சேர்க்க

என் காதலனாய்…

அன்பு

பிறர் நலன்
தொடர் கவனம்
அன்பு.

Sunday, March 01, 2009

இவன் வீட்டு அடுப்பை பற்ற வைக்கமால்

அமெரிக்கா பொருளாதாரம் படு பாதாளம் அடுத்ததாக பிரிட்டன் நிலைமை கவலைக்கிடமாய் இருக்கிறது. மொத்தமாய் ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரம் மந்தம்.

நிலைமை சீரடைய இன்னும் பல வருடங்கள் பிடிக்கும் என்பது பொருளாதார நிபுணர்களின் கருத்து.

வெளிநாடுகளில் போய் வேலை பார்த்தவர்களின் கதி நடு ஆற்றில் நிற்கும் நிலைமை. ஐரோப்பிய நாடுகளோடு வர்த்தக பரிவர்த்தனை செய்த அத்தனை நாடுகளின் கதியும் அதோ கதி.

பன்னாட்டு நிறுவனங்களில் வேலைப் பார்த்தவர்களும் கடன் நிறைய வாங்கி வீடு கட்டி கல்யாணம் பண்ணி வேலைப் பார்த்து வங்கி கடனை அடைத்து விடலாம் என்ற நினைவுகள் கனவாகி விடுமோ என்ற பயம்.

ஒரு நாட்டினுடைய பாதிப்பு இந்தளவிற்கு மொத்த உலக நாடுகளின் பொருளாதாரத்தை பாதிப்பது மிகவும் வியப்பிற்குரியது.

அது ஏன்? எவ்வாறு?

அரசன் சோறு போட்டு விடுவான் என்று இவன் வீட்டு அடுப்பை பற்ற வைக்கமால் போனவன் கதியாகி விட்டது உலக நாடுகளின் நிலைமை.

LinkWithin

Related Posts with Thumbnails