Sunday, May 16, 2010

ஓர் நாயின் இறுதி



கம்பி சுருக்கை கழுத்தில் போட்டு  சுருக்கி  அந்த நாய் அங்கும் இங்கும் நகராதபடி இழுத்து பிடித்தார்கள்  கழுத்து பகுதியில் இடம் பார்த்து விஷ ஊசி சொருகி விஷத்தை உள்செலுத்தி மூன்று அல்லது நான்கு நிமிடங்கள் பிடித்தபடியே நின்றார்கள். நாயின் உடல் தளர ஆரம்பிக்க  அப்படியே  விட்டு விட்டு அடுத்த நாயை  துரத்த ஆரம்பித்தார்கள்.

மூன்று குட்டிகளை ஈன்ற அந்த பெண்நாய் கால்கள் பரப்பி தரையில் கிடந்தது. அலைதல் இல்லா  கண்கள் வெறித்தப்படியே இருக்கவாய் எச்சில் வழிந்து தரை தொட்டது. மூச்சின் இயக்கம் தடைப்பட்டு தடைப்பட்டு வந்துகொண்டிருக்க இறுதிகாலத்தின் கடைசி நிமிடங்களில் அது.

உறவிற்காக அதோடு  சுற்றி வந்தவைகள் காணாமல் போயிருக்கஇதற்கென்று ஒரு வீடு இல்லாத  தெருநாயாக இருந்ததால் வந்த வினை.

உரிமம் பெற்று  கழுத்தில் வில்லையுடன்  தூர  நின்று இன்னொரு நாய் இதனுடைய மரணத்தைபார்த்து கொண்டிருந்தது . குரைத்தது   அதற்கு பாதுகாப்பான எல்லையில்நின்று இங்கும் அங்கும் அலைந்தது.கிட்டே வராது இதனுடைய நிச்சயிக்கப்பட்ட மரணத்தை  தடுக்கமுடியாது பார்த்து கொண்டிருந்தது . காதுகள் விடைக்க கூர்ந்து பார்ப்பது பிறகு  ஓடுவதுமாக இருந்தது.

செத்து கொண்டிருந்த நாயின் பக்கதிலிருந்த மனிதன் இந்த நாய் இனி தப்பிக்க முடியாது என்ற நம்பிக்கையுடன் அடுத்தநாய் பிடித்த இடத்திற்கு செல்ல  உரிமம் பெற்றது ஓடி கிட்டே சென்று முகர்ந்து முனுகியது.

வெறித்தகிடந்த விழிகளில் உயிர்ப்பு முனுகிய நாயின்
விழிகளை பார்த்தப்பின் தன் இறுதி மூச்சை விட்டது அந்த நாய்.

இறந்த நாய் ஈன்ற ஆண் குட்டி தான்  உரிமம் பெற்ற நாய்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails