Thursday, October 21, 2010

அறிவியல் நேர்மை சம்பந்தப்பட்டது.

ரிச்சர்ட் ஃபெயின்மன் கால்டெக்-இல் 1974இல் செய்த சொற்பொழிவிலிருந்து. 'Surely You 're Joking, Mr. Feynman! ' புத்தகத்திலிருந்து. இறுதிப்பகுதி
இப்போது, இவைகளில் எது முக்கியமான இல்லாத விஷயம் என்பதை நான் சொல்லவேண்டும். ஆனால், தெற்கு கடல் தீவுகளில் இருப்பவர்களிடம் அவர்களது கார்கோ விமானதளங்களில் எதை மாற்றுவது மூலம் அவர்களது அமைப்புக்குள் செல்வம் வரும் என்று விளக்குவது போல கடினமானது. அவர்களது ஹெட்போன்களை எப்படி மாற்றவேண்டும் என்று விளக்குவது போல எளிதான விஷயமில்லை. ஆனால், இந்த வானத்திலிருந்து மூட்டை விழும் அறிவியல் சமாச்சாரங்களில் பொதுவாக இல்லாமல் இருக்கும் விஷயம் என்ன என்று விளக்கமுடியும். இதனை நாம் வெளிப்படையாகப் பேசாமல் இருந்தாலும், பல அறிவியல் பரிசோதனைகள் மூலம் நாம் இதனை உணர்ந்து கொள்ளலாம். இது முக்கியமாக அறிவியல் நேர்மை சம்பந்தப்பட்டது. உதாரணமாக, நாம் ஒரு பரிசோதனை செய்தால், இந்தப் பரிசோதனை முடிவு தவறாக இருக்கலாம் என்று நாம் நினைக்கக் தேவையான எல்லா சுற்றுப்புற விஷயங்களைப் பற்றியும் ஒன்றுவிடாமல் எழுதுவது. நாம் செய்த பரிசோதனை முடிவு சரியாக இருக்கிறது என்று நாம் நினைக்கத் தேவையான விஷயங்களைப் பற்றி மட்டும் எழுதுவதல்ல. எப்படி அந்த பரிசோதனை வேலை செய்தது என்பதை எழுதுவதன் மூலம் மற்றவர்கள் எந்த விஷயத்தை தவிர்க்க வேண்டும் என்று தெளிவாகத் தெரிந்து கொள்வதும் முக்கியம்.
உங்களுக்குத் தெரிந்திருந்தால், உங்களது பரிசோதனை முடிவுகள் என நீங்கள் நினைப்படஹியும், கூடவே சந்தேகப்படக்கூடிய எல்லா விஷயங்களைப் பற்றியும் கட்டாயம் எழுதவேண்டும். நீங்கள் ஒரு தேற்றம் எழுதினால், அந்த தேற்றத்தோடு ஒத்துவராத எல்லா விஷயங்களைப் பற்றியும் கட்டாயம் எழுதவேண்டும். அதனோடு ஒத்துப் போகும் விஷயங்களைப் பற்றி மாத்திரம் எழுதக்கூடாது. அதை விட இன்னும் ஒரு நுண்ணிய விஷயம் இருக்கிறது. பல கருத்துக்களைக் கோர்த்து ஒரு பெரிய தேற்றம் எழுதினால், அதன் விளக்கம் எல்லா விஷயங்களைப் பற்றியும் இருக்க வேண்டும். உங்களுக்கு இந்த தேற்றம் என்ற கருத்து வரக் காரணமான விஷயங்களைப் பற்றி மாத்திரம் எழுதக்கூடாது. அதே போல, இந்தத் தேற்றத்தின் விளைவாக இன்னொரு விஷயமும் வெளிவரவேண்டும். அந்த விஷயம் பரிசோதனை செய்து பார்க்கக் கூடியதாக இருக்கவேண்டும்.
சுருங்கச்சொன்னால், உங்களது பங்களிப்பை மற்றவர்கள் எல்லோரும் எடை போடத் தேவையான எல்லா விஷயங்களையும் தரவேண்டும். அவர்களை ஒரு புறம் சார்புகொள்ளத் தேவையான விஷயங்களை மட்டும் எழுதக்கூடாது.
ஒரு கருத்தை விளக்க எளிய வழி, அதனை இன்னொரு கருத்தோடு முரண்படுத்துவது. விளம்பரங்களைப் பாருங்கள். சென்ற இரவு உணவில் ஊறாது என்று காய்கறி எண்ணெய் விளம்பரம் வருகிறது. அது உண்மைதான். அது நேர்மையற்ற விஷயம் அல்ல. ஆனால் நான் பேசும் விஷயம் வெறும் நேர்மை மட்டும் அல்ல, அது அறிவியல் நேர்மை சம்பந்தப்பட்டது. அது இன்னொரு தளத்தில் இருக்கிறது. அந்த விளம்பரத்தோடு இன்னொரு வரியைச் சேர்த்திருக்கவேண்டும். ஒரு குறிப்பிட்ட தட்பவெப்பத்தில் உணவைச் செய்தால், எந்த எண்ணெயும் உணவில் ஊறாது என்பது சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். இன்னொரு தட்பவெப்பத்தில் அந்த உணவைத் தயாரித்திருந்தால், எல்லா எண்ணெயும் உணவில் ஊறத்தான் செய்யும். ஆகவே சொன்னது சரிதான். ஆனால் அறிவியல் நேர்மை அல்ல அது. இந்த இரண்டுக்கும் உள்ள வித்தியாசம்தான் நாம் எதிர்கொள்ளவேண்டியது.
நம் அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்டது என்னவென்றால், உண்மை எப்படியும் வெளிவந்தே ஆகும் என்பதுதான். பல பரிசோதனையாளர்கள் உங்களது பரிசோதனையைத் திரும்பிச்செய்யும்போது நீங்கள் சரியா தவறா என்பதைச் சொல்லிவிடுவார்கள். இயற்கை உங்களது தேற்றத்தோடு ஒத்துப்போகும் அல்லது மறுதலிக்கும். தற்காலிகமாக உங்களுக்குப் பெயரும் புகழும் வந்தாலும், உங்களது வேலையில் கவனமில்லாமல் இருந்தால், நீண்டகாலத்துக்கு ஒரு அறிவியலறிஞர் என பெயர் உங்களுக்கு இருக்காது. இது போன்றதொரு நேர்மைதான், இது போன்றதொரு தன்னைத்தானே முட்டாளாக்கிக்கொள்ளாத அக்கறைதான், இந்த வானத்திலிருந்து மூட்டை விழும் அறிவியல் செய்பவர்களிடம் இருக்கிறது.
இதில் மிகவும் கடினமான விஷயம், எந்த விஷயத்தை ஆராய்கிறோமோ அந்த விஷயமும், அந்த விஷயத்தில் அறிவியல் முறையைப் பயன்படுத்துவதில் இருக்கும் சிக்கல்களும் தான். இருப்பினும், அது மட்டும் கடினமான விஷயம் என்று சொல்லிவிட முடியாது. விமானங்கள் தரை இறங்காததன் காரணம் அதுதான். அந்த விமானங்கள் தரை இறங்காது என்பதே ஒரு பெரிய சிக்கல்.
நம்மை நாமே முட்டாளடித்துக்கொள்ளும் வழிகளிலிருந்து நம்மைக் காத்துக்கொள்வது எப்படி என்பதை நாம் அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்டிருக்கிறோம். உதாரணமாக, மில்லிகன் என்பவர் ஒரு எலக்ட்ரானின் சார்ஜ் எவ்வளவு என்பதை உதிரும் எண்ணெய்த் துளிகளை பரிசோதித்து கண்டறிந்தார். அவருக்குக் கிடைத்த விடை சரியானதல்ல என்பது நாம் அறிந்ததுதான். அதற்குக் காரணம், காற்றின் விஸ்கோஸிட்டி(என்ணெய்ப்பசைத்தன்மை) என்று அவர் எண்ணியிருந்த எண் தவறானது. மில்லிகனுக்குப் பிறகு எலக்ட்ரான் சார்ஜை அறியும் பல பரிசோதனைகள் நடந்திருக்கின்றன. அந்த விடைகளைப் பார்ப்பது சுவாரஸ்யமானது. ஒவ்வொரு எண்ணும் முந்தைய எண்ணுக்கு கொஞ்சம் அதிகமாக அதிகமாக, இறுதியில் இப்போதைய விடையை எல்லோரும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் ஏன் அந்த இறுதி எண்ணை அப்போதே கண்டுபிடிக்கவில்லை ? இதைப் பற்றி அறிவியலாளர்கள் வெட்கப்படுவதில்லை. அதற்குக் காரணம், மற்றவர்கள் மில்லிகனின் பரிசோதனையை திருப்பிச் செய்தபோது, அதிகமான எண் கிடைத்தது. ஆனால் அவர்கள் நம் பரிசோதனையில்தான் ஏதோ தவறு இருக்கிறது என்று கருதினார்கள். என்ன காரணத்தால் தன் விடை தவறாக இருக்கிறது என்று தேடினார்கள். ஆனால் மில்லிகனின் எண்ணுக்கு அருகாமையில் கிடைத்த எண்ணுக்கு அவ்வளவாக தவறு என்று நினைத்து காரணம் தேடவில்லை. அந்தத் தவறுகளிலிருந்து நாம் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டிருக்கிறோம். அப்படியே (முன் நடந்த சோதனைகளை) நம்புகிற வியாதி இப்பொது நம்மிடம் இல்லை.
ஆனால் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளாமலிருக்கும் கலையைக் கைக்கொள்ளும் திறனுக்கு நீண்ட வரலாறு இருக்கிறது - அதாவது அப்பழுக்கற்ற அறிவியல் நேர்மை. ஆனால், இந்த விஷயத்தை நாம் எந்தப் பாடத்திலும் முக்கியமாகச் சேர்த்துபேசுவதில்லை என்பதை வருத்தத்துடன் தான் கூறவேண்டியிருக்கிறது. நாங்கள் ஏதோ, ஆஸ்மாஸிஸ் (சவ்வூடு பரவல்) போல உங்களுக்கு இந்த விஷயம் வந்து சேர்ந்து விடும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம்.
முதல் அடிப்படைக் கொள்கை உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளக்கூடாது என்பது. ஏனெனில், உங்களால் ஏமாற்றுவதற்கு மிக எளிய ஆள் நீங்களேதான். ஆகவே நீங்கள் அதில் மிகவும் அக்கறையாக இருக்க வேண்டும். உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளவில்லை என்றால், மற்ற விஞ்ஞானிகளை ஏமாற்றுவது இன்னும் கடினமானது. ஆகவே, பேசாமல் நேர்மையாகவே இருந்து தொலைத்துவிடலாம்.
அறிவியலுக்கு மிகவும் தேவையில்லாத ஒரு விஷயத்தைச் சேர்க்க விரும்புகிறேன். அதாவது ஒரு விஞ்ஞானி இல்லாத சாதாரண மனிதரை, நீங்கள் விஞ்ஞானி என்ற ஸ்தானத்திலிருந்து ஏமாற்றக்கூடாது என்று நம்புகிறேன். உங்கள் மனைவியை ஏமாற்றுவதைப்பற்றியோ, அல்லது காதலியை ஏமாற்றுவதைப்பற்றியோ, ஒரு சாதாரண மனிதனாக இருக்கும் சமயத்தில் நீங்கள் என்ன செய்யவேண்டும் என்று நான் சொல்ல வரவில்லை. அது உங்களுக்கும் உங்கள் மதகுருவிற்கும் - அல்லது மனசாட்சிக்கும் - இடையேயான விஷயம். நீங்கள் அறிவியலாளராக இருக்கும்போது உங்களது நேர்மை பற்றிய விஷயம் வேறு விதமானது. நீங்கள் தவறு செய்திருக்கவும் கூடும் என்ற கூடுதல் எச்சரிக்கை இருக்க வேண்டும். இது மற்ற விஞ்ஞானிகளுக்கு நீங்கள் செய்யவேண்டிய கடமை மட்டுமல்ல, சாதாரண மனிதர்களுக்குச் செய்யவேண்டிய கடமையும் கூட.
உதாரணமாக, ரேடியோவில் பேசப்போகும் என்னுடைய நண்பரிடம் நான் பேசிக்கொண்டிருந்தபோது ஆச்சரியமடைந்தேன். அவர் வேலை செய்வதோ வானவியலிலும், பிரபஞ்ச அறிவியலிலும். இந்த அறிவியலுக்கு என்ன பிரயோசனம் இருக்கும் என பேசப்போகிறீர்கள் எனக் கேட்டேன். 'ஆமாம் இதற்கு ஒன்றும் நடைமுறை உபயோகம் கிடையாது ' என்றார். 'ஆனால் உண்மையைச் சொன்னால், இது போன்ற விஞ்ஞான ஆராய்ச்சி செய்ய பணம்கிடைக்காது ' என்று சொன்னார். இது ஒரு நேர்மையற்ற விஷயம் என்று நினைக்கிறேன். நீங்கள் விஞ்ஞானியாக இருந்தால், அந்த விஷயம் தெரியாத ஒருவருக்கு நீங்கள் உண்மையைச் சொல்லவேண்டும். அதனை அவர்கள் ஆதரிக்கவில்லை என்பது அவர்களது முடிவு.
அடிப்படைக் கொள்கையின் இன்னொரு உதாரணம், நீங்கள் ஒரு தேற்றத்தை பரிசோதனை செய்திருந்தீர்கள் என்றால், அதன் முடிவு என்னவாக இருந்தாலும் அதனைப் பிரசுரம் செய்யவேண்டும். விவாதத்தின் ஒரு பக்கத்துக்கு ஆதரவான விளைவுகளை மட்டும் பிரசுரிப்பது என்பது சரியல்ல. எல்லா பரிசோதனை முடிவுகளையும் வெளியிடவேண்டும்.
அரசாங்கத்துக்கு அறிவுரை தருவது என்பதிலும் இதே போன்ற முக்கியத்துவம் இருக்கவேண்டும் எனக்கூறுகிறேன். ஒரு எம்.பி (செனட்டர்) தன்னுடைய தொகுதியில் ஆழ்குழாய் கிணறு போடலாமா என்று கேட்டால், நீங்கள் இன்னொரு தொகுதியில் செய்தால் நல்லது என்று நினைத்தீர்கள் என்றால், அதனை வெளியிடவேண்டும். அப்படிப்பட்ட பரிசோதனை செய்து முடிவில் அதனை வெளியிடவில்லை என்றால் உங்களை அவர்கள் தம் நலனுக்காகப் பயன்படுத்திக்கொண்டார்கள் என்றுதான் அர்த்தம். அரசாங்கமோ, எம்.பியோ தேவைப்பட்டால் உங்களது பரிசோதனை முடிவை உபயோகப்படுத்திக்கொள்வார்கள். அவர்களுக்குச் சாதகமாக இல்லை என்றால் அதனை பிரசுரிக்க மாட்டார்கள். அவர்களுக்குச் சாதகமான யோசனை, அறிவியல் அறிவுரை அல்ல.
மனவியல் துறை (psychology department)மாணவர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். அதில் ஒரு மாணவி, ஒரு பரிசோதனை செய்யவிரும்பினாள். ஒரு குறிப்பிட்ட 'எக்ஸ் ' சூழ்நிலையில் எலிகள் ஒரு வேலை செய்கின்றன என்று ஏற்கெனவே மற்றவர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். அவள் அந்த சூழ்நிலையை 'ஒய் ' ஆக மாற்றி அதே வேலையை எலிகள் செய்கின்றனவா என்று அறிய விரும்பினாள்.
நான் அவளிடம், முதலில் அதே 'எக்ஸ் ' சூழ்நிலையை மீண்டும் உருவாக்கி அந்த எலிகள் அதைத்தான் செய்கின்றனவா என்று பார்ப்பது முக்கியம் என்று சொன்னேன். அந்த வேலையை அவை செய்கின்றன என்று தீர்மானம் ஆனவுடன், அந்தச் சூழ்நிலையை 'ஒய் ' ஆக மாற்றி அந்த வேலையை அந்த எலிகள் செய்கின்றனவா என ஆராயலாம் என்று சொன்னேன். அப்போதுதான் அந்த சூழ்நிலை அவள் கட்டுக்குள் இருக்கும் என்று விளக்கினேன்.
அவள் மிகவும் ஆர்வமாக இந்த புதிய கருத்தை எடுத்துக்கொண்டு அவளது பேராசிரியரிடம் சென்றாள். ஏற்கெனவே அந்த எக்ஸ் பரிசோதனை செய்யப்பட்டுவிட்டதால், மீண்டும் அதனைச் செய்வது வெட்டிவேலை என்று பேராசிரியர் சொல்லிவிட்டார். 1947ஆம் வருடம் என்று நினைக்கிறேன். மனவியல் பரிசோதனைகளை மீண்டும் செய்யக்கூடாது என்று அப்போது பொதுவான கொள்கை இருந்ததது. ஆனால், சூழ்நிலைகளை மாற்றினால் தான் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம் என்றும் கொள்கை இருந்தது.
அதே போன்றதொரு விஷயம் இப்போதும் நடப்பதற்தான அபாயம் இருக்கிறது- பரிசோதனை நேர்மைகுப் புகழ் பெற்ற பெளதீகவியலில் கூட. தேசிய ஆக்ஸலரேடர் பரிசோதனைச்சாலையில் பளுவான ஹைட்ரஜனைக் கொண்டு பரிசோதனை செய்யப்போவதாக ஒருவர் சொன்னார். அவரது பரிசோதனை முடிவுகளை இன்னொருவர் பளுகுறைந்த ஹைட்ரஜனைக்கொண்டு இன்னொரு உபகரணத்தில் செய்த முடிவுகளோடு ஒப்பிடப்போவதாகச் சொன்னார். ஏன் என்று கேட்டபோது, பளு குறைந்த ஹைட்ரஜனைக்கொண்டு இந்த விலையுயர்ந்த உபகரணத்தில் பரிசோதனை செய்ய நேரம் கிடைக்க வில்லை என்று சொன்னார். இந்த பரிசோதனைச்சாலையை தொடர்ந்து நடத்த வேண்டும், அதற்கு அதிகமான பிரயோசனமான விளைவுகளை உற்பத்தி செய்யவேண்டும் என்ற ஆர்வத்தில், அந்த பரிசோதனைகளின் அடிப்படை நேர்மையையே அழிக்கவும் முடிவு செய்திருக்கிறார்கள் இந்த பரிசோதனைச்சாலையை நடத்துபவர்கள்.
மனவியல் பரிசோதனைகள் எல்லாமே இப்படிப்பட்டவை அல்ல. பல சிக்கலான சுற்றுவழிகளின் (Mazes) ஊடே செல்லும்படிக்கு எலிகளைத் தூண்டும் பல பரிசோதனைகள் செய்யப்பட்டிருக்கின்றன. எதிலும் உருப்படியான விளைவு கிடைத்ததில்லை. ஆனால், 1937இல் யுங் (Young) என்ற ஒருவர் சுவாரஸ்யமான பரிசோதனை செய்தார். ஒரு பக்கம் பல கதவுகளிலிருந்து எலிகள் வருகின்றன. மறுபுறம் பல கதவுகள். அதில் ஒரு சில கதவுகளுக்குப் பின்னர் உணவு. இந்த எலிகளை எப்போதும் மூன்றாவது கதவுக்கே செல்லும்படி தூண்டமுடியுமா என்று பரிசோதனை செய்தார். ஆனால் எலிகள் எப்போதும் முன்னர் எந்த கதவுக்குப் பின்னால் உணவு இருந்ததோ அந்த கதவுக்கே சென்றன.
கேள்வி என்னவென்றால், எப்படி எலிகளுக்குத் தெரியும் என்பதுதான். ஒரே மாதிரியான கதவுகள் இருந்தால் ஒருவேளை அவைகளை முட்டாளடிக்கலாமா ? ஆகவே எல்லா கதவுகளையும் ஒரே மாதிரியாக நுணுக்கமாக வரைந்து எல்லா கதவுகளும் ஒரே மாதிரியாக இருக்கும் படிச் செய்து பரிசோதனை செய்தார். இருப்பினும் எலிகள் எந்த கதவுக்குப்பின்னால் முன்னர் உணவு இருந்தது என்பதை சரியாகக் கண்டுபிடித்துவிட்டன. ஒருவேளை உணவை எலிகள் மோந்து வரலாம் என்று நினைத்து வேதிப்பொருட்களைக் கொண்டு வாசனையை மாற்றினார். இருப்பினும் எலிகள் சரியாகச் சொல்லமுடிந்தன. ஒருவேளை மேலே பரிசோதனைச் சாலையைப் பார்த்து அதனை மையமாகக் கொண்டு கதவைக் கண்டுபிடிக்கின்றன என்று விளக்கை அணைத்து செய்துபார்த்தார். இருப்பினும் எலிகள் கண்டுபிடித்துவிட்டன.
இறுதியில் அந்த கதவின் மீது ஓடும்போது வரும் ஒலியைக்கொண்டு அவைகள் அடையாளம் காண்கின்றன என்று கண்டறிந்தார். அந்த கதவுகளை மணலில் வைத்து சப்தத்தை அழிக்கும்போதுதான் அந்த எலிகளை முட்டாளடித்து மூன்றாவது கதவுக்குப் போக வைக்க முடிகிறது. இதில் ஏதாவது ஒரு சுற்றுச்சூழலை மாற்றினாலும், அந்த எலிகளால் அடையாளம் காண முடியும்.
அறிவியல் நிலைப்பாட்டிலிருந்து, இது ஒரு ஏ-நம்பர்-ஒன் - பிரமாதமான - பரிசோதனை. இது எலிகளை கொண்டு செய்யும் பரிசோதனைகளை அறிவுப்பூர்வமாக ஆக்குகிறது. இது எலிகள் எந்த எந்த உபாயங்களைப் பயன்படுத்துகின்றன என்று தெளிவாக்குகிறது.
இந்த ஆராய்ச்சியில் அப்புறம் நடந்த வரலாற்றைப் பார்த்தேன். அதன் பின் மற்றவர்கள் செய்த எந்த பரிசோதனையும் யுங் அவர்களது பரிசோதனையை மேற்கோள் காட்டவில்லை. அவர் சொன்னது போல மணலின் மீது எலிகள் ஓடும் மேஜையை வைக்கவில்லை. பழைய படியே அவர்கள் எலிகளை ஓடவிட்டு பரிசோதனை பண்ணிக்கொண்டிருந்தார்கள். சொல்லப்போனால் அவர் எலிகளைப் பற்றிய முக்கியமான கண்டுபிடிப்புகளை எல்லாம் செய்திருக்கிறார். இப்படிப்பட்ட பரிசோதனைகளை கண்டுகொள்ளாமல் இருப்பது வானத்திலிருந்து மூட்டை விழும் அறிவியலுக்கு நல்ல உதாரணம்.
ரைன் இன்னும் பலர் செய்த தொலை உணர்வு பரிசோதனைகள் (Extra Sensory Perception) நல்ல உதாரணம். பலர் இதனை பலவாறு விமர்சித்து இருக்கிறார்கள். தங்கள் பரிசோதனைகளையே பலரும் விமர்சித்து இருக்கிறார்கள். பாரா- சைக்காலஜி என்னும் இந்த துறையில் திரும்பத்திரும்ப செய்யக்கூடிய, ஒரே விடையைத் தரும் பரிசோதனையைத் தேடிக்கொண்டு இருக்கிறார்கள். ஒருமுறை செய்தால் ஒரு விடை மறுமுறை செய்தால் புள்ளிவிவரம் மாறிவிடுகிறது. இப்போது திரும்பத்திரும்ப செய்தால் ஒரே விடையைத் தரும் பரிசோதனை என்பதே தேவையற்ற கோரிக்கை என்று ஒருவர் சொல்கிறார். இது அறிவியலா ?
ஆகவே, நான் சொன்னபடியுள்ள நேர்மையை உபயோகப்படுத்தும்படியான ஒரு இடத்தில் நீங்கள் இருக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களது இடத்தைக் காப்பாற்றிக்கொள்ள, அல்லது உங்களது வருமானத்தைக் காப்பாற்றிக்கொள்ள உங்களது அறிவியல் நேர்மை இழக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லாத ஒரு சுதந்திரமான இடத்தை அடைய என் வாழ்த்துக்கள். உங்களுக்கு அந்த சுதந்திரம் கிடைக்கட்டும்.
****

1 comment:

கையேடு said...

இன்னும் அதே புத்தகத்தில் உங்களுக்கு ஆர்வமூட்டிய பிற பகுதிகளையும் தொகுக்கலாமே.

தனது சிந்தனையின் நேர்மையில் மீதுதான் அறிவியல் சிந்தனை தோன்றுகிறது. அதனால் நேர்மையைப் புறந்தள்ளிவிட்டு அறிவியல் கண்டுபிடிப்பு என்பது சாத்தியமில்லாதது.

LinkWithin

Related Posts with Thumbnails