Thursday, February 21, 2013

காவிரி பிரச்சனையின் பின்னணி (1891 முதல் 1990 வரை) பகிர்வு



தமிழ்நாட்டின் ஜீவாதார உரிமைப் பிரச்சனையாக விளங்குவது காவிரி நதிநீர்ப் பிரச்சனை. 1892 ஆம் ஆண்டு மற்றும் 1924 ஆம் ஆண்டைய ஒப்பந்தங்கள் காவிரியில் தமிழ்நாட்டிற்கு உள்ள உரிமையை தெள்ளத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. 1924-ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளை பின்பற்றாமல், 1960-களின் பின் பகுதியிலும், 1970-களின் தொடக்கத்திலும், மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமலும், காவிரி நதியில் உரிமையுள்ள மாநிலங்களை கலந்து ஆலோசிக்காமலும், தன்னிச்சையாக பல்வேறு அணைக்கட்டுகளை கர்நாடக அரசு கட்டியது. ஆண்டுக்காண்டு விவசாய நிலங்களின் பரப்பினையும் கர்நாடகா அதிகரித்துக் கொண்டே சென்றது. இதனையடுத்து, 1956-ஆம் ஆண்டைய மாநிலங்களுக்கிடையே ஆன நதிநீர்த் தாவா சட்டத்தின்படி நடுவர் மன்றமொன்று உருவாக்கப்பட வேண்டும் என்று 1986 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு ஒரு கடிதத்தினை அனுப்பியது.
இந்தக் கடிதத்தின் மீதும் மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 1986 ஆம் ஆண்டு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் ஆட்சிக்காலம். இந்தச் சூழ்நிலையில், தமிழ்நாடு காவிரி நீர்ப்பாசன விளைபொருள்கள் விவசாயிகள் நல உரிமை பாதுகாப்புச் சங்கத்தினால் தொடுக்கப்பட்ட வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்றம், உணர்வுப் பூர்வமான இந்தப் பிரச்சனை குறித்து நடுவர் மன்றத்தை ஏற்படுத்துமாறு 1990 ஆம் ஆண்டு ஓர் உத்தரவினை பிறப்பித்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவினைத் தொடர்ந்து, 1986-ஆம் ஆண்டு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில், தமிழக அரசால் அனுப்பப்பட்ட கடிதத்திற்கு உயிர் ஊட்டும் வகையில், நடுவர் மன்றத்தை ஜூன் 1990 ஆம் ஆண்டு மத்திய அரசு உருவாக்கியது.
நடுவர் மன்ற தீர்ப்பு (1991)
இந்த காவிரி நடுவர் மன்றம், 25.6.1991 அன்று பிறப்பித்த இடைக்கால ஆணையில், மேட்டூர் அணைக்கு 205 டி.எம்.சி. அடி நீர் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், கர்நாடகா தனது நீர்த் தேக்கங்களிலிருந்து தண்ணீரை திறந்துவிட வேண்டுமென்றும், கர்நாடகா தனது பாசனப் பரப்பை 11.20 லட்சம் ஏக்கருக்கு மேல் விரிவாக்கம் செய்யக்கூடாது என்றும், இடைக்கால ஆணையில் குறிப்பிட்டுள்ளபடி, மாதாந்திர மற்றும் வாராந்திர அடிப்படையில் தமிழகத்திற்கு நீர் விடுவிக்க வேண்டும் என்றும், இந்த இடைக்கால ஆணை இறுதித் தீர்ப்பு அளிக்கும் வரை நடைமுறையில் இருக்கும் என்றும் தீர்ப்பளித்துள்ளது.
காவிரி நடுவர் மன்றத்தால் அளிக்கப்பட்ட இந்த இடைக்கால ஆணை தமிழகத்திற்கு சாதகமாக இல்லை என்ற போதிலும், காவிரி பாசன விவசாயிகளின் உடனடி நலன் கருதியும், மாநிலங்களுக்கிடையே நல்லுறவு நிலவ வேண்டும் என்ற எண்ணத்தோடும், இறுதி ஆணையில் கூடுதலாக நீர் கிடைக்கும் என்ற நம்பிக்கையிலும், தமிழ்நாடு அரசு இடைக்காலத் தீர்ப்பினை ஏற்றுக்கொண்டது.
ஆனால், கர்நாடக அரசோ, காவிரி நடுவர் மன்ற ஆணை கர்நாடகத்தை கட்டுப்படுத்தாது என்று தெரிவித்து, இடைக்கால ஆணையினை அவமதிக்கும் வகையில் ஓர் அவசரச் சட்டத்தினை இயற்றியது. அதனை எதிர்த்து, எனது தலைமையிலான தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், காவிரி நடுவர் மன்றம் பிறப்பித்த இடைக்கால ஆணை செல்லும் என்றும், கர்நாடக அரசின் அவசரச் சட்டம் செல்லாது என்றும் 22.11.1991 அன்று மத்திய அரசுக்கு கருத்துரை வழங்கியது. பின்னர் எனது தலைமையிலான அரசின் உறுதியான நடவடிக்கை காரணமாக 10.12.1991 அன்று காவேரி நடுவர் மன்றத்தின் இடைக்கால ஆணையை மத்திய அரசிதழில் மத்திய அரசு வெளியிட்டது.
நடுவர் மன்ற தீர்ப்பை மதிக்காத கர்நாடகா அரசு!
இருப்பினும், காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்கால ஆணைப்படி ஒருமுறை கூட கர்நாடகா நமக்கு தண்ணீரை விட்டதில்லை. மாறாக, உபரி நீரை மட்டுமே கர்நாடகா விடுவித்து வந்தது. கர்நாடக அரசின் பிடிவாதப் போக்கு காரணமாக, மரபுரிமைப்படி இயல்பாக நமக்குக் காவிரி நதி நீரில் பாசனத்திற்குக் கிடைக்க வேண்டிய தண்ணீரை நாம் வற்புறுத்திக் கேட்டுப் பெறுகின்ற சூழ்நிலைக்கும், நீதிமன்றங்களுக்குச் சென்று ஆணையைப் பெறுகிற சூழ்நிலைக்கும் அவ்வாறு பெற்ற ஆணை மதிக்கப்படாத நிலையில், பயிர்களைக் காப்பாற்ற மத்திய அரசை வற்புறுத்தி நமது உரிமைகளைப் பெறுகிற சூழ்நிலைக்கும் தமிழ்நாடு பலமுறை தள்ளப்பட்டு இருக்கிறது.
இந்தச் சூழ்நிலையில், 5.2.2007 அன்று காவிரி நடுவர் மன்றம் தனது இறுதி ஆணையை வெளியிட்டதோடு, இந்த ஆணையை நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவாக, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைக்கவும் பரிந்துரை செய்துள்ளது. நான் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், 14.6.2011 அன்று பிரதமரை புதுடெல்லியில் நேரில் சந்தித்து, காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும் என்றும், இந்த ஆணையை நடைமுறைப்படுத்த காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றினை அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினேன்.
கெஜட்டில் வெளியிடாத மத்திய அரசு
இதனைக் கடிதங்கள் வாயிலாகவும் பிரதமரை நான் பலமுறை வலியுறுத்தி இருக்கிறேன். காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிட தடை இல்லாத சூழ்நிலையில், "உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு வந்தபிறகு தான் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிட முடியும்" என்று மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது.
நடுவர் மன்றத் தலைவரை நியமிக்காத அலட்சியம்
இந்தச் சூழ்நிலையில், நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிடவும், மேலாண்மை வாரியம் மற்றும் நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை ஏற்படுத்தவும் மத்திய அரசுக்கு உத்தரவிடுமாறு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், உச்ச நீதிமன்றத்தில் உள்ள மேல் முறையீட்டு மனுவை விசாரணைக்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காவிரி நடுவர் மன்றத்தில் காலியாக உள்ள தலைவர் பதவியை நிரப்ப வேண்டியதன் அவசியத்தை பலமுறை வலியுறுத்தியும் மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வேதனைக்குரியது.
அதிமுக அரசும் காவிரி விவகாரமும்
இந்தச் சூழ்நிலையில், கர்நாடகா தனது கோடைக்கால பாசனத்திற்காக கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹேமாவதி மற்றும் ஹாரங்கி நீர்த் தேக்கங்களிலிருந்து தண்ணீரை பயன்படுத்தி வருகிறது. கர்நாடக அரசின் இந்த நடவடிக்கை மூலம் தமிழகத்தின் குறுவைப் பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்காது என்பதைக் கருத்தில் கொண்டு, 21.3.2012 அன்று உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு ஒன்றினை எனது தலைமையிலான அரசு தாக்கல் செய்தது. இந்த மனுவில், கர்நாடகா கோடைப் பாசனத்திற்கு தனது 4 அணைகளிலிருந்து தண்ணீர் விடுவிப்பதை தடை செய்ய வேண்டும் என்றும், இறுதி ஆணையில் குறிப்பிட்டுள்ளபடி இந்த 4 நீர்த் தேக்கங்களிலிருந்து 103.24 டி.எம்.சி. அடி நீருக்கு மேல் கர்நாடகா பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாமல், கர்நாடக அரசு அதன் கோடைக்கால பாசனத்திற்காக 1.2.2012 முதல் நீரை உபயோகித்துள்ளது என்றும், நீர்த்தேக்கங்களுக்கு வரக்கூடிய நீர்வரத்தினை தேக்கி வைத்துக் கொண்டு, நீர்தேக்கங்கள் நிரம்பும் நிலையில் மட்டுமே நீரை கர்நாடகா விடுவித்து வருவதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து குறைந்து குறுவை சாகுபடி பாதிப்புக்கு உள்ளாகிறது என்றும் சுட்டிக்காட்டி, விரைந்து காவிரி நதிநீர் ஆணையக் கூட்டத்தினை கூட்டுமாறு பிரதமரை 18.5.2012 நாளிட்ட கடிதத்தின் மூலம் நான் கேட்டுக் கொண்டேன். ஆனால், பிரதமர் இதற்கு செவி மடுக்கவில்லை.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு....
இதனையடுத்து, தமிழ்நாட்டுடன் குறிப்பிட்ட விகிதாச்சாரப்படியான அளவில் நீரைப் பகிர்ந்து கொள்ள கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், காவிரி கண்காணிப்புக் குழுவினால் இறுதி செய்யப்பட்டுள்ள இடர்ப்பாடு பங்கீட்டு முறைக்கு ஒப்புதல் வழங்கும் வகையில் காவிரி நதிநீர் ஆணையக் கூட்டத்தினை கூட்ட உத்தரவிட வேண்டியும் உச்ச நீதிமன்றத்தில் 21.7.2012 அன்று எனது தலைமையிலான அரசு ஓர் இடைக்கால மனுவினை தாக்கல் செய்தது. தமிழகத்தில் நிலவும் இடர்ப்பாட்டினை சுட்டிக்காட்டி, குறுவை சாகுபடியை தமிழக விவசாயிகள் இழந்துவிட்ட நிலையில், குறைந்தபட்சமாக ஒரு போக சம்பா சாகுபடியையாவது விவசாயிகள் மேற்கொள்ள ஏதுவாக, தமிழகத்திற்குரிய நீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு அறிவுரை வழங்குமாறு பிரதமரை 23.8.2012 நாளிட்ட கடிதம் வாயிலாக கேட்டுக் கொண்டேன்.
எனது தலைமையிலான அரசு எடுத்த உறுதியான தொடர் நடவடிக்கையினை அடுத்து, உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டின் காரணமாக காவிரி நதிநீர் ஆணையக் கூட்டம் 19.9.2012 அன்று புது டெல்லியில் கூட்டப்பட்டது.12.9.2012 முதல் காவேரி நதிநீர் ஆணையக் கூட்டம் நடைபெறும் வரை நாள்தோறும் வினாடிக்கு 10,000 கன அடி தண்ணீரை கர்நாடகா தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் 10.9.2012 அன்று ஆணைப் பிறப்பித்தது.
நதிநீர் ஆணையக் கூட்டம்
19.9.2012 அன்று புதுடெல்லியில் நடைபெற்ற நதிநீர் ஆணையத்தின் கூட்டத்தில், இடர்ப்பாடு காலத்தில் நீரை பகிர்ந்து கொள்ளுதல் கணக்கீட்டுப்படி, தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய நீரில் குறைபாடான 48 டி.எம்.சி. அடி நீரை நாளொன்றுக்கு 2 டி.எம்.சி. அடி வீதம் 24 நாட்களுக்கு உடனடியாக திறந்துவிட வேண்டுமென்றும், நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பின்படி கர்நாடகா தொடர்ந்து நீரை விடுவிக்க ஆணை பிறப்பிக்குமாறும் நான் வலியுறுத்தினேன். கர்நாடகா இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது.
இந்தக் கூட்டத்தில் இரு தரப்பினரிடையே ஒத்த கருத்து ஏற்படாத சூழ்நிலையில், 20.9.2012 முதல் 15.10.2012 வரை நாளொன்றிற்கு வினாடிக்கு 9,000 கன அடி வீதம் கர்நாடகா தமிழகத்திற்கு நீரை விடுவிக்க வேண்டுமென்றும், அதன் பிறகு கண்காணிப்புக் குழு 15.10.2012 அன்று கூடி சம்பந்தப்பட்ட மாநிலங்களை கலந்தாலோசித்து 15.10.2012-க்கு பிறகு நீர் விடுவிப்பது குறித்து முடிவெடுக்கலாம் என்றும் காவிரி நதிநீர் ஆணையத்தின் தலைவரான பிரதமர் அறிவித்தார்.
ஆனால், கர்நாடக அரசு இதனை ஏற்க மறுத்தது. தமிழகத்திற்கு சாதகமான முடிவினை பிரதமர் அறிவிக்காததைக் கருத்தில் கொண்டும், பிரதமர் அறிவித்த குறைந்தபட்ச தண்ணீரைக் கூட விடுவிக்க முடியாது என்று கர்நாடகா அறிவித்ததை கருத்தில் கொண்டும், எனது எதிர்ப்பினைத் தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தை மீண்டும் அணுகுவதைத் தவிர வேறு வழியில்லை என்று நான் அறிவித்தேன்.
இதனையடுத்து, நாளொன்றிற்கு 2 டி.எம்.சி. அடி வீதம் 48 டி.எம்.சி. அடி தண்ணீரை அடுத்த 24 நாட்களுக்கு கர்நாடகா தமிழகத்திற்கு விடுவிக்க வேண்டும் என்றும் நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பின்படி கர்நாடகா தமிழகத்திற்கு நீரை விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், காவேரி நதிநீர் ஆணையத்தின் தலைவர் பிறப்பித்த உத்தரவை கர்நாடக அரசு செயல்படுத்த வேண்டும் என்று 28.9.2012 அன்று தீர்ப்பளித்தது. இதன்படி, 29.9.2012 முதல் நீரினை விடுவிக்கத் துவங்கிய கர்நாடகா, திடீரென்று தன்னிச்சையாக 8.10.2012 அன்று தண்ணீர் விடுவிப்பதை நிறுத்திவிட்டது.
நீதிமன்ற அவதூறு வழக்கு
இந்திய கூட்டாட்சித் தத்துவத்திற்கு ஊறுவிளைவிக்கும் வகையிலும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை அவமதிக்கும் வகையிலும் நடந்து கொண்ட கர்நாடக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை 10.10.2012 அன்று எனது தலைமையிலான அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்தச் சூழ்நிலையில் 11.10.2012 அன்று காவிரி கண்காணிப்புக் குழுவின் கூட்டம் புதுடெல்லியில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில், தலைமைச் செயலாளர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், நீர்விடுவிப்பதில் ஏற்பட்டுள்ள குறைபாட்டு நீரான 48 டி.எம்.சி. அடி நீரை நாளொன்றுக்கு 2 டி.எம்.சி. அடி வீதம் 24 நாட்களுக்கு திறந்துவிட வேண்டுமென்றும், கர்நாடக அரசு உச்ச நீதிமன்ற ஆணையை மதிக்காததால், உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டிய கட்டாயம் தமிழகத்திற்கு ஏற்பட்டது என்றும், இடர்ப்பாடு ஆண்டிலும் கர்நாடக அரசு நீரை அதன் நீர்த்தேக்கங்களிலிருந்து தனது பயன்பாட்டிற்காக விடுவித்துள்ளது என்றும் தெரிவித்து, தமிழ்நாட்டின் சம்பா பாசனத்திற்காக 15.10.2012 முதல் 16.2.2013 வரை சுமார் 145 டி.எம்.சி. அடி நீர் தேவைப்படும் என்று தமிழகத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
எனினும், கர்நாடகத்தின் 4 அணைகளில் போதுமான நீர் இருப்பு இருந்தபோதிலும், தமிழகத்திற்கு மேலும் தண்ணீர் வழங்க இயலாது என கர்நாடகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
கண்காணிப்புக் குழு கூட்ட முடிவுகள்
இருப்பினும், 16.10.2012 முதல் 31.10.2012 வரையிலான காலத்திற்கு 8.85 டி.எம்.சி. அடி நீரை கர்நாடகா தமிழகத்திற்கு விடுவிக்க வேண்டும் என்று காவிரி கண்காணிப்புக் குழுவின் தலைவர் தனது முடிவினை அறிவித்தார். இந்த முடிவு தமிழகத்திற்கு எதிரானது என்றும், இடர்ப்பாடு காலத்தில் தமிழ்நாட்டிற்குரிய பங்கான 48 டி.எம்.சி. அடி குறைபாடு நீரை கணக்கில் கொள்ளாமல் 15 நாட்களுக்கு மட்டும் நீரை அளிக்க உத்தரவிட்டது சரியானது அல்ல என்றும் தமிழகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இந்த குறைந்தபட்ச நீரை கூட கர்நாடகா விடுவிக்க மறுத்துவிட்டது. இந்தச் சூழ்நிலையில், கர்நாடகத்தின் பிடிவாதப் போக்கை எதிர்த்து தமிழகத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு 30.10.2012 அன்று விசாரணைக்கு வந்தபோது, இது தொடர்பான அனைத்து அம்சங்களையும் பரிசீலனை செய்து பரிந்துரை செய்ய வேண்டும் என காவிரி கண்காணிப்புக் குழுவிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து, 31.10.2012 அன்று புது டெல்லியில் நடைபெற்ற காவிரிகண்காணிப்புக் குழுக் கூட்டத்தில், 31.10.2012 வரை 8.85 டி.எம்.சி. அடி தண்ணீரை தமிழ்நாட்டிற்கு விடுவிக்க வேண்டும் என்று கண்காணிப்புக் குழு 11.10.2012 அன்று உத்தரவிட்டதில், 2.15 டி.எம்.சி. அடி தண்ணீர் பற்றாக்குறை இருக்கிறது என்றும், காவேரி நடுவர் மன்றத்தின் இடைக்கால ஆணையின்படி, 2012 நவம்பர் மாதம் முதல் 2013 பிப்ரவரி வரை தண்ணீர் திறந்துவிட உத்தரவிட வேண்டும் என்றும் தமிழகத்தின் சார்பில் எடுத்துரைக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட கண்காணிப்புக் குழு, 16.10.2012 முதல் 31.10.2012 வரை தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டிய தண்ணீரில் உள்ள பற்றாக்குறையான 2.15 டி.எம்.சி. அடி தண்ணீரை 4.11.2012-க்குள் விடுவிக்குமாறும், 1.11.2012 முதல் 15.11.2012 வரையிலான காலத்திற்கு 3.94 டி.எம்.சி. அடி தண்ணீரை விடுவிக்குமாறும், ஆக மொத்தம் 6.09 டி.எம்.சி. அடி தண்ணீரை தமிழகத்திற்கு திறந்துவிடுமாறு உத்தரவிட்டுள்ளது.
மேலும், உச்ச நீதிமன்ற ஆணைப்படி, தமிழ்நாடு, கண்காணிப்புக் குழுவிற்கு அளிக்கவிருக்கும் கோரிக்கைகள் குறித்தும், தமிழகத்திற்கு மேற்கொண்டு தண்ணீர் விடுவிப்பது குறித்தும் 15.11.2012 அன்று நடைபெறும் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று காவேரி கண்காணிப்புக் குழு கூறியுள்ளது.
தமிழகத்தில் ஏற்கெனவே குறுவை சாகுபடி பாதிக்கப்பட்ட நிலையில், சம்பா சாகுபடியை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற அடிப்படையில், தமிழகத்திற்கு உள்ள உரிமையை எப்படியாவது பெற வேண்டும் என்பதன் அடிப்படையில் எனது அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றார் ஜெயலலிதா.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails