Thursday, March 14, 2013

"குளோரின்' இல்லா குடிநீரைத் தவிர்ப்போம் (பகிர்வு)


உடல் ஆரோக்கியத்துக்காக அன்றாடம் நாம் உண்ணும் உணவின்போது நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்துள்ள புஞ்சைத் தானியங்களையும், காய்கள், கீரை வகைகளையும் அவ்வப்போது சேர்த்து வருகிறோம். ஆனால், குடிநீரில் மட்டும் ஏன் இந்த விதிவிலக்கு?
எங்காவது வெளியூர் செல்லவேண்டும் என்றால் உடனே நாம் அவசர அவசரமாக பாட்டிலில் அடைக்கப்பட்டுள்ள தண்ணீரை (மினரல் வாட்டர்) நமது வசதிக்கேற்ப வாங்கிப் பயன்படுத்துகிறோம். இது தவிர்க்க முடியாததுதான்.
இப்போது பெரும்பாலான அலுவலகங்கள், கடைகள், ஹோட்டல்கள், வீடுகளில் பாட்டில் நீர் வெகுவாகப் பயன்பாட்டில் உள்ளது. திருமண விருந்துகளில்கூட அரை லிட்டர் "தண்ணீர் பாட்டில்' வைப்பது நாகரிகமாக மாறிவிட்டது.
பாட்டில் நீர் வருவதற்கு முன்னர் நாம் என்ன செய்தோம்? ஆங்காங்கே பொதுக் குழாய்களில் வரும் குடிநீரைத் தானே பயன்படுத்தினோம். அப்போதெல்லாம் வராத நோய்கள் (குறிப்பாக: சிறுநீர் தொற்று) இப்போது வரத் தொடங்கியுள்ளதே? இதற்குக் காரணம் சுத்தமில்லாத (குளோரின் கலக்கப்படாத) குடிநீரைப் பருகுவதே.
நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளதால் நிலவிவரும் குடிநீர் பற்றாக்குறையைக் காரணம் காட்டி ஒன்று, இரண்டாக இருந்த "மினரல் வாட்டர்' நிறுவனங்கள் இன்று தெருவுக்குத் தெரு புற்றீசல் போல் இந்திய தரநிர்ணய நிறுவனத்தின் (ஐஎஸ்ஐ) முத்திரையில்லாமலேயே தொடங்கப்பட்டுள்ளன.
இதில் எத்தனை நிறுவனங்கள் சரியான முறையில் தண்ணீரில் வேதிப்பொருள்கள் கலந்து முறையாகச் சுத்தப்படுத்தி வழங்குகின்றன என்பது தெரியவில்லை. ஆனால், ஆங்காங்கே அரிதாகக் காணப்பட்ட 20 லிட்டர் மினரல் வாட்டர் பாட்டில் தற்போது பெட்டிக்கடைகளில் 25 ரூபாய்க்குத் தாராளமாக விற்கப்படுகிறது.
பொதுவாக, குழாய்களில்வரும் தண்ணீரைவிட பாட்டிலில் அடைக்கப்பட்டு விற்பனையாகும் குடிநீர்தான் பாதுகாப்பானது என பலரும் நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால், குழாய் நீருக்கு எந்த விதத்திலும் பாட்டில் தண்ணீர் உயர்ந்தது அல்ல என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தொற்றுநோய் பரவாமல் இருப்பதற்காக குழாய் நீரில் கலக்கப்படும் "குளோரின்', மினரல் வாட்டர் எனப்படும் பாட்டில் தண்ணீரில் இல்லை. அதற்குப் பதிலாக பல்வேறு வேதிப்பொருளைக் கலந்து குடிநீரின் அடிப்படைச் சுவையையே மாற்றி பாட்டிலில் அடைத்து விற்கின்றனர். பாட்டில் தண்ணீர் மூடியைத் திறந்தவுடன் சில மணி நேரங்களுக்குள் அந்தத் தண்ணீரை பருக வேண்டும்.
இல்லாவிட்டால் நோய்த்தொற்று பரவ வாய்ப்பிருப்பதாகவும், ஒரே பாட்டில் (பெரிய கேன் தவிர) தண்ணீரை ஒன்றுக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தும்போது அவர்களது கைகள், முகத்திலிருந்து பாக்டீரியாக்கள் அடுத்தவர்களுக்குப் பரவ வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் பாட்டில்கள் தயாரிக்கப்பட்டவுடன் பயன்பாட்டுக்கு வந்துவிடுவதில்லை. அவை விற்பனைக்கு வருவதற்கு முன்பு சில நாள்கள் அல்லது வாரங்கள் அல்லது சில வேளைகளில் மாதங்கள் வரையிலும்கூட தொழிற்சாலைகளிலோ, விற்பனையகங்களிலோ கிடப்பில் போடப்பட்டிருக்கும்.
தரமற்ற பிளாஸ்டிக் கொண்டு தயாரிக்கப்பட்ட பாட்டிலில் தண்ணீரை நிரப்பி, அதையும் பல நாள்கள் கிடப்பில் போட்டு விற்பதால் பிளாஸ்டிக்கில் உள்ள வேதிப்பொருள் சிறிதளவேனும் தண்ணீரில் கலப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
ஆனால், குழாய் நீர் அப்படியல்ல; அன்றாடம் ஆறுகளில் உள்ள ஆழ்துளைக் கிணற்றிலிருந்து மின்மோட்டார் மூலம் தண்ணீரை மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் ஏற்றி, அதில் குளோரின் கலந்து பொது மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.
அளவில் அதிகமாகவும், விலையில் குறைவாகவும் இருப்பதால் அது பாட்டில் தண்ணீரை விட குழாயில் வரும் குடிநீர் ஏதோ ஒருவிதத்தில் தரமற்றதாக இருக்கும் என்ற தவறான எண்ணம் மக்களிடையே தோன்றியுள்ளது.
கடந்த ஆண்டு பிரிட்டனின் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பால் யங்கர் தலைமையிலான குழு பல்வேறு இடங்களில், குழாய்மூலம் வீடுகளுக்கு விநியோகிக்கப்பட்ட 40 லட்சம் லிட்டர் குழாய் நீரைப் பரிசோதித்துப் பார்த்ததில் 99.96 சதவீதம் தரத்தை உறுதி செய்துள்ளது.
குடிநீர் பற்றாக்குறையால் அலுவலகங்கள், ஹோட்டல்கள், கடைகளில் குடிப்பதற்கு குழாய் நீரைப் பெரும்பாலும் பயன்படுத்த முடியாமல் இருப்பது உண்மைதான். ஆனால், குடியிருப்புப் பகுதியில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி போன்றவற்றின் மூலம் வழங்கப்படும் குழாய் நீரைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. வீடுகளிலும் தற்போது பாட்டில் தண்ணீரைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இதன்மூலம் குளோரின் கலக்கப்படாத குடிநீரைப் பயன்படுத்துவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர்.
அலுவலகங்கள், கடைகளில் தவிர்க்க முடியாத சூழலில் பாட்டில் குடிநீரைப் பயன்படுத்தும் நாம், வீட்டில் இருக்கும் சமயத்திலாவது குழாய் நீரைப் பருகலாமே!

நன்றி  தினமணி

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails