Saturday, March 09, 2013

உணவு பொருட்கள் வீணாவதைத் தவிர்க்க சில யோசனை (பகிர்வு)


பொதுவாக உணவு பொருட்கள் வீணாகாமல் தவிர்க்க அந்த காலத்தில் பல யுக்திகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆனால் அவற்றை எல்லாம் தற்போது செய்ய நேரமும் இல்லை, வசதியும் இல்லை.
நம்மால் முடிந்த அளவுக்கு உணவு பொருட்கள் வீணாவதை தவிர்க்கலாம். அதற்கு சில யோசனைகளை இங்கே பாருங்கள்.
சமைத்த உணவு மீதம் ஆகும் என்று நீங்கள் கணித்தால், உடனடியாக அதனை தேவைப்படுவோருக்கு அளிக்க முன் வாருங்கள். உங்கள் வீட்டுக்கு அருகில் கோயில் வாசல்களிலோ, தெருவோரங்களிலோ இருப்பவர்களுக்கு அதனை கொண்டு சென்று கொடுக்கும் வசதி இருந்தால் அதனை தவறாமல் செய்யலாம்.
திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் உணவு பொருட்கள் அதிகம் சமைத்து வீணாவது வழக்கம். அந்த சமயங்களில் இதுபோன்ற உணவு பொருட்களை பெற்றுக் கொள்ள எத்தனையோ இல்லங்கள் உள்ளன. அவற்றை அறிந்து கொண்டு சென்று கொடுப்பது நன்மை பயக்கும்.
ஒரு மிகப்பெரிய சுப நிகழ்ச்சிக்குச் செல்கிறோம். அங்கு பந்தியில் இருக்கும் அனைத்தையும் வாரி நம் தட்டில் போட்டுக் கொள்ளாமல், நமக்கு வேண்டிய உணவை மட்டும் எடுத்து போட்டுக் கொண்டு சாப்பிடுவது நல்லது. பரிமாறும் போது உங்களுக்குப் பிடிக்காத உணவு வந்தால் அதனை வேண்டாம் என்று தவிர்க்கலாம். தவறே இல்லை.
அதேப் போல, எந்த ஒரு நிகழ்ச்சியை நடத்துவதாக இருந்தாலும், அதற்குத் தேவையான உணவை சரியாக கணிப்பது இயலாத காரியம் என்றாலும், ஓரளவுக்கு கணித்து அதற்கு ஏற்ற அளவுக்கு செய்வது நல்லது.
பொதுவாக பண்டிகை நாட்களில் அனைத்து வீடுகளிலும் ஒரே வகையான பண்டங்கள் செய்வது வழக்கம். அதாவது, பொங்கல், சுண்டல் போன்றவை. இதுபோன்ற நாட்களில் அளவுக்கு அதிகமாக செய்து அதனை அண்டை வீடுகளுக்கு கொடுப்பதால் ஒற்றுமை ஓங்கலாம். ஆனால் அதேப் பண்டம் அவர்கள் வீடுகளிலும் அதிகமாக இருக்கும் என்பதால் நீங்கள் கொடுப்பதை அவர்கள் குப்பையில் தான் போடுவார்கள் என்பதை உணர்ந்து அளவோடு செய்து பாருங்கள்.
விடுமுறை அல்லது விருந்து போன்ற நாட்களில், ஒரே நாளில் எண்ணற்ற உணவுகளை செய்து உணவை வீணாக்குவதோடு, வயிற்றையும் வீணாக்குகிறோம்.
ஹோட்டல்களுக்குச் சென்று உணவை ஆர்டர் செய்து சாப்பிடும் போது, பாதியிலேயே வயிறு நிரம்பி விட்டால் அந்த உணவை அப்படியே விட்டுவிட்டு வராமல், அதனை பார்சல் செய்து கொண்டு வந்து வெளியே உணவில்லாமல் இருப்பவர்களுக்குக் கொடுக்கலாம்.
சாதம் கெட்டுப் போகும் என்றால் அதில் எலுமிச்சை, புளிக் கரைசல் ஊற்றி கலந்து வைத்து மறுநாள் தாளித்து சாப்பிடலாம். இது நம் அம்மாக்கள் பயன்படுத்திய முறை தான்.
இன்று செய்த உணவு அதிகமாக இருக்கும் என்றால், அதனை நன்கு சுடவைத்து பத்திரப்படுத்தி மறு நாளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். குறித்த நேரத்தில் சூடுபடுத்துவதால் பொருள் விரைவில் கெட்டுப் போவதை தவிர்க்கலாம்.
எந்த உணவையும் பாதி சாப்பிட்டுவிட்டு மீதத்தை அப்படியே வைக்காதீர்கள். அதனால் அந்த உணவு கெட்டுப் போவதற்கு வழி ஏற்படுகிறது.
மேலும், பழமோ, காயோ நறுக்கி சாப்பிடுவதால், மீதமிருப்பதை மற்றவர்களுக்கு அளிக்க முடியும் அல்லது பிரிட்ஜிலாவது வைக்கலாம். அப்படியே கடித்து சாப்பிடுவதால் வீணாவதை தூக்கி எறிய மட்டுமே முடியும்.
இதுபோன்ற யோசனைகள் வேறு ஏதேனும் இருந்தால் கூறலாமே...

நன்றி : தினமணி

1 comment:

புரட்சி தமிழன் said...

3 ல் 2 பங்கு உணவுப்பொருட்கள் சமைக்கப்படாமலே வீனாகின்றன. ஓட்டலில் தான் சாப்பிட்ட உணவில் இருக்கும் மிச்சத்தை பார்சல் செய்து கொடுக்கவேண்டும் என்பதெல்லாம் உணவின்றி கஷ்ட்டப்படுபவர்களை மேலும் மனம் கலங்கவைக்கும். உங்களுக்கு உண்மையில் உதவவேண்டும் என்று நினைத்தால் அவர்களுக்கு உணவை வாங்கி கொடுங்கள். உணவின் நியாயமான விலைக்கு அதிகமாக கொடுத்து உண்பதை தவிருங்கள் கிடைக்காதவர்களுக்கு தானே கிடைக்கும்.
ஒருவர் ஒரு சாப்பாடு தயாரிக்க 40 ரூபாய் செலவு செய்தால் அதனை 50 ரூபாய்க்கு சாப்பிட்டால் நியாயமான விலை. அதனை 200 ரூபாய்க்கு சாப்பிட்டால் 3 சாப்பாடு வீன் என்றாலும் அவனுக்கு கவலையில்லை அந்த ஓட்டலின் உரிமையாளர் ஒருபோதும் மீதமுள்ள உணவை ஏழைகளுக்கு குறைந்த விலையிலோ அல்லது இலவசமாகவோ கொடுக்கமாட்டார். அதே உணவை 50 ரூபாய்க்கு சாப்பிடும்போது மிச்சம் இருப்பதை கடைசியில் நட்டத்தை தவிர்க்கவும் குறைக்கவும் குறைந்த விலைக்கு கொடுப்பார்.ஏனெனில் அதை கீழே கொட்டினால் நஷ்ட்டம் பாதிவிலைக்கு கொடுத்தால் நட்டத்தடுப்பு.

LinkWithin

Related Posts with Thumbnails