Monday, April 01, 2013

60 லட்சாதிபதிகளின் கிராமம்! (பகிர்வு)

வானம் பார்த்த பூமி, நிலத்தடி நீர் குறைந்து கொண்டே போதல், விவசாயம் செய்வதற்காக வாங்கிய கடனுக்கான வட்டி குட்டி போட்டு போட்டு குடும்பம் குடும்பமாக ஊரைவிட்டே இடம்பெயர்ந்த அவலம், விவசாயிகளின் தற்கொலை என மகாராஷ்டிர மாநிலம் விதார்பாவிலும் இந்திய கிராமங்கள் பலவற்றிலும் நடந்தவை மகாராஷ்டிர மாநிலம் அகமத்நகர் மாவட்டத்தின் ஹைவாரே பஜார் கிராமத்தில் நடக்காமல் காப்பாற்றப்பட்டிருக்கிறது. காப்பாற்றியிருப்பவர் ஒரு தனி நபர். அவரின் பெயர் போப்பட் ராவ் பவார்.
 "விவசாயிகளின் தற்கொலை' தவிர முதல் பாராவில் நீங்கள் படித்த எல்லா விஷயங்களும் ஹைவாரே பஜார் கிராமத்திலும் அரங்கேறின. பல குடும்பங்கள் கிராமத்தைவிட்டு வெளியேறின. விவசாயிகள் மிகக் குறைந்த கூலிக்கு வெவ்வேறு வேலைகளைச் செய்யத் தொடங்கினர். இயற்கை பொய்த்தது பாதி என்றால் ஊருக்குள் மதுவின் பிடியிலும் இளைஞர்கள் தடுமாறிக் கொண்டிருந்தனர். "குடி' அதைக் குடிப்பவர்களின் குடியை மட்டுமில்லாமல், அடுத்தவர்களின் குடியையும் வன்முறை, அடிதடி கலாசாரத்தால் சீரழித்துக் கொண்டிருந்தது. கிராமத்தின் சுற்றுச்சூழல் பலவிதங்களிலும் கெட்டுக் கொண்டிருந்தது. இதுதான் 1995-க்கு முந்தைய ஹைவாரே பஜார்.
 கிராமத்தின் வறட்சியைப் போக்க சில வழிகளை மக்களின் முன்வைத்தார் பவார். பல சீர்திருத்தங்களுக்கு மக்களை உட்படுத்தினார். அதில் முதன்மையான சீர்திருத்தம் மது விலக்கை முழுமையாக கிராமத்தில் கொண்டுவந்தது. அதோடு புகையிலை மற்றும் குட்கா, பான்பராக் போன்ற போதை வடிவங்களுக்கும் முற்றிலும் தடையைக் கொண்டுவந்தார். இந்த மாற்றங்களோடு, மக்கள் சக்தியின் ஒருங்கிணைப்போடு கிராமம் முழுவதும் சிறுசிறு குளங்களை வெட்டினார். இதனால் மழைக்காலத்தில் பெய்யும் மழை நீர் வீணாகாமல் சேமிக்கப்பட்டது. (ஒன்றல்ல இரண்டல்ல 52 மண் அணைகளையும் இரண்டு நீர் தொட்டிகளையும் 32 கல் அணைகளையும், 9 சின்ன வாய்க்கால்களையும் உருவாக்கினர்.) இவையெல்லாமே அரசுப் பணத்திலிருந்துதான் முறையாகக் கட்டப்பட்டிருக்கின்றன.
 போப்பட் ராவ் பவாரின் தலைமையில் ஹைவாரே மக்களின் விடாமுயற்சி அந்த கிராமத்து மண்ணில் விஸ்வரூப வெற்றியைக் கொடுத்திருக்கின்றது. 1995-ல் 80-125 அடி ஆழத்திற்கு தோண்டினால்தான் கிணற்றில் தண்ணீர் வரும். தற்போது 15-40 அடி ஆழத்திலேயே தண்ணீர் கிடைக்கிறது. இதற்கு அடிப்படையே நிலத்தடி நீர்மட்டத்தை படிப்படியாக குளங்களின் மூலமாகவும் அணைகளின் மூலமாகவும் உயர்த்தியதுதான். இதே மாவட்டத்தில் இருக்கும் பக்கத்து கிராமங்களில் 200 அடிக்குக் கீழேதான் இன்றைக்கும் தண்ணீர் கிடைக்கிறது. 
 மண்ணை வளப்படுத்த வேண்டுமானால் இயற்கை உரத்துடன் கூடிய பாரம்பரியமான விவசாயமே சிறந்தது என்னும் முடிவுக்கு வந்த பவார், நிலத்தடி நீரை சேமிக்க குளங்களை வெட்டியதுபோலவே, கிராமத்தில் கறவை மாடுகளின் எண்ணிக்கையைப் பெருக்கும் யோசனையையும் மக்கள்முன் வைத்திருக்கிறார். அதற்கும் கிராம மக்களின் பரிபூரண ஒத்துழைப்பு கிடைத்திருக்கின்றது. 1995-ல் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 150 லிட்டர் வரைமட்டுமே பால் உற்பத்தி இருந்தது. தற்போது ஒருநாளைக்கு 4 ஆயிரம் லிட்டருக்கும் மேல் பால் உற்பத்தி இந்த கிராமத்தில் 
 நடைபெறுகிறது.
 இருபதாண்டுகளுக்கு முன்பு வறட்சிக்கும் பஞ்சத்திற்கும் ஆளான கிராமத்திலிருந்து வெளியேறிய குடும்பங்கள் மீண்டும் அதே கிராமத்திற்கே திரும்பி தங்களின் பாரம்பரியமான விவசாயத் தொழிலில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.
 அந்த கிராமத்தில் இருப்பவரின் தனி மனித வருமானம் மாதத்திற்கு 30 ஆயிரத்திற்கு மேல் உயர்ந்திருக்கிறது. இந்த கிராமத்தில் இருக்கும் 235 வீடுகளில் இருக்கும் தனிநபர்களின் எண்ணிக்கை சராசரியாக 1,250-க்கு மேல் இருக்கும். இவர்களில் 60 நபர்களின் சொத்துமதிப்பு 10 லட்சத்தைத் (1 மில்லியன்) தாண்டுமாம். உழைப்பால் தங்களையும் உயர்த்திக் கொண்டு நாட்டையும் உயர்த்தியிருக்கின்றனர் ஹைவாரே பஜார் கிராமத்தினர். இன்றைக்கு ஹைவாரே பஜார் கிராமத்தில் மகிழ்ச்சி அலை அடித்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு பவார் என்னும் தனி மனிதரின் பொதுவழியை அந்தக் கிராமமே பின்பற்றியதுதான் காரணம்.

நன்றி தினமணி

1 comment:

Jayadev Das said...

மிக்க மகிழ்ச்சியான செய்தி..................

LinkWithin

Related Posts with Thumbnails