Saturday, April 27, 2013

தும்ப உட்டுபுட்டு வால புடிக்கிற கத


தனியார் வணிக வளாகக் கட்டட தீ விபத்துக்குப் பிறகு, கோவையில் அதிகாரிகள் எடுத்துவரும் நடவடிக்கைகள் காலம் கடந்தவையாகவே காணப்படுகின்றன.
கோவையில் வியாழக்கிழமை தனியார் வணிக வளாகக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்து 4 பெண்களின் உயிரை பலிகொண்டது. இச்சம்பவம் கோவை மக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதுமட்டுமல்ல, அரசு அதிகாரிகளின் மனதையும் இந்த விபத்து உலுக்கி விட்டது. கோவை மாநகரில் தற்போது எடுக்கப்பட்டு வரும் உடனடி நடவடிக்கைகள் அதன் எதிரொலிகளே.
கோவையில் இதுதான் முதல் தீ விபத்து என்று யாரும் கூறிவிட முடியாது. இதற்கு முன்னரும் பல பெரிய தீவிபத்துகள் நிகழ்ந்துள்ளன.
கடந்த 2010 ஜூன் 27-ஆம் தேதி, கோவை, நஞ்சப்பா சாலையில் ஒரு தனியார் ஆட்டோமொபைல் உதிரிபாக விற்பனை நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்து, 2012 ஜனவரியில் குறிச்சி மரக்கடையில் ஏற்பட்ட தீ விபத்து, அதே ஆண்டு பிப்ரவரி 20-ஆம் தேதி தண்ணீர்ப்பந்தல் சாலையில் பஞ்சு மில்லில் ஏற்பட்ட தீ விபத்து,  அதே ஆண்டு ஆகஸ்ட் 26-ஆம் தேதி தெற்கு உக்கடத்தில் மௌலானா முகமது அலி மார்க்கெட்டில் ஏற்பட்ட தீ விபத்து எனப் பலவற்றை கோவை கண்டிருக்கிறது.
இந்தச் சம்பவங்கள் அனைத்திலும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என்றாலும், பெருமளவில் பொருட்சேதம் ஏற்பட்டதாக தீயணைப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுபோன்ற பேரிடர்க் காலங்களில், தற்போதைய தீ விபத்துக்கு என்னென்ன காரணங்கள் சொல்லப்படுகின்றனவோ இதே காரணங்கள் அப்போதும் கூறப்பட்டன.
அப்போதும் இதேபோல, தீயணைப்புத் துறை, வருவாய்த் துறை, காவல் துறை, மாநகராட்சியின் நகரமைப்புப் பிரிவு, உள்ளூர்த் திட்டக் குழும அதிகாரிகள், மாநகரில் முறையான அனுமதியின்றிக் கட்டப்பட்டுள்ள கட்டடங்களைக் கணக்கெடுத்தனர். தீயைணைப்புத் துறையினர் தங்களிடம் சான்று பெறாத கட்டடங்களைக் கணக்கெடுத்தனர். ஆனால் அதற்கடுத்த கட்டப் பணிகள் தான் நடைபெறவில்லை.
தூக்கியடிக்கப்படும் அதிகாரிகள்: இதுபோன்று அனுமதியின்றி கட்டடம் கட்டுவோர் மாநகரின் பெரிய புள்ளிகளாகவும் தொழிலதிபர்களாகவுமே உள்ளனர். தெரிந்தே தவறு செய்பவர்கள் இவர்கள்.
பேரிடர்க் கால நேரங்களில் சில அதிகாரிகள் துணிந்து நடவடிக்கைகள் எடுத்தாலும், பெரும்புள்ளிகள் தங்களது அதிகார பலத்தைப் பயன்படுத்தி, மேலிட நிர்பந்தம் மூலமாக அந்த அதிகாரிகளை வேறு மாவட்டங்களுக்கு இடம் மாற்றி விடுகின்றனர்.
அண்மையில், இவ்வாறு துணிந்து நடவடிக்கையில் ஈடுபட்ட உள்ளூர் திட்டக் குழும அதிகாரி ஒருவர் வேறு மாவட்டத்துக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கே இந்நிலை என்றால், நாங்கள் என்ன செய்ய முடியும் என்கின்றனர் தீயணைப்புத் துறையினர்.
மதிக்கப்படாத அரசு உத்தரவுகள்: 50 அடி உயரத்துக்கு மேல் உள்ள அனைத்துக் கட்டடங்களையும் உயர்மாடிக் கட்டடங்கள் என்று கணக்கில் கொள்ள வேண்டும். தீயணைப்புத் துறை அனுமதி பெறாத கட்டடங்கள் இயங்கக் கூடாது என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் பேரிடர்க் காலங்களில் பயன்படுத்த தீ விபத்துத் தடுப்புக் கருவிகள், சாதனங்கள் பொருத்தப்பட வேண்டும். தீ விபத்தில் சிக்கியவர்கள் பாதுகாப்பாக ஒதுங்க இடம் ஒதுக்க வேண்டும். பெரிய வணிக வளாகக் கட்டடங்களில் தீயணைப்பு வாகனங்கள் சென்றுவரும் அளவுக்கு இடம் ஒதுக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் தேசிய கட்டட விதிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்த விதிமுறைகளை கட்டட உரிமையாளர்கள் மதித்திருந்தாலும், அரசு அதிகாரிகள் சரியாகப் பின்பற்றியிருந்தாலும், விபத்துக்களும் உயிரிழப்புகளும் ஏற்பட வாய்ப்பில்லை.
தற்போது தீ விபத்து நிகழ்ந்த கட்டடம் விதிமுறை மீறிக் கட்டப்பட்டுள்ளது. இந்த உண்மை இப்போது தான் அனைவருக்கும் தெரிய வந்துள்ளது என்று கூறுவது, யாரும் நம்ப முடியாத ஒன்று.
எனவே விதிமீறல்கள் பிரச்னைக்குரியவை என்று தெரிந்திருந்தும் இத்தனை நாள்களாக நடவடிக்கை எடுக்காத நிலையில், 4 உயிர்கள் தீயின் கோரத்துக்கு இரையான பின்னரே அதிகாரிகள் விழித்துள்ளனர். இப்போது எடுக்கப்படும் நடவடிக்கைகள் அனைத்துமே, கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்யும் வேலை தான்.

நன்றி : தினமணி

1 comment:

பழனி. கந்தசாமி said...

இந்தியா இப்படித்தான் இருக்கும்.

LinkWithin

Related Posts with Thumbnails