Thursday, April 04, 2013

தமிழர்களும் இருக்கிறார்களே...(பகிர்வு)


புதிய சவுதிமய மண்டலங்கள் (நிடாகத்) திட்டத்தினால் கேரளத்தைச் சேர்ந்த 2 லட்சம் பேர் சவுதி அரேபியாவிலிருந்து தாயகம் திரும்ப வேண்டிய நிலைமை ஏற்படும் என்று கணிக்கப்படுகிறது.
 சவுதி அரேபியாவின் இந்த முடிவில் இந்திய அரசு தலையிட்டு, கேரளத்தவர் நலன் காக்க வேண்டும் என்று மாநில முதல்வர் உம்மன் சாண்டி பிரதமரை வேண்டிக்கொள்வதும், கேரள மாநிலத்தவரும், வெளிநாடு வாழ்இந்தியர் நலத்துறை அமைச்சருமான வயலார் ரவி, தனது தலைமையில் ஒரு குழுவுடன் சவுதி அரேபியா சென்று பேச்சு நடத்த முடிவாகியிருப்பதும் வியப்பானவை அல்ல. ஆனால், இந்தப் பேச்சுவார்த்தையில் பயன் ஏற்படுமா என்பது சந்தேகமே.
 நிடாகத் திட்டம் புதிதாக இப்போது அறிவிக்கப்பட்டதும் அல்ல. 2011-ஆம் ஆண்டிலேயே அறிவிக்கப்பட்டுவிட்டது. எப்படியும் தள்ளிப்போகும், நம்மைவிட்டால் இவர்களுக்குக் கதியில்லை என்ற எண்ணத்தில் இத்தனை காலம் சும்மா இருந்துவிட்டு இப்போது கடைசி நேரத்தில் கேரள அரசு புலம்புகிறது. வேறு வழி தெரியாமல் இந்திய அரசின் நடவடிக்கையைக் கோருகிறது.
 சவுதி அரேபியாவில் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்கள் பல லட்சமாக இருக்க, 80 லட்சம் வெளிநாட்டவர் தங்கள் மண்ணில் வேலை பார்த்து, ஆண்டுக்கு 26 மில்லியன் ரியால் அளவுக்குத் தங்கள் நாட்டுக்கு அனுப்பிக் கொண்டிருப்பதை எப்படி ஒரு அரசு பார்த்துக் கொண்டிருக்க முடியும்?
 கால்நூற்றாண்டுக்கு முன்பு அரபு நாடுகளில் எண்ணெய் வளம் இருந்தது. ஆனால், தொழில்நுட்பம் தெரிந்த பொறியாளர்களும், கணக்காயர்களும், ரசாயன வேதியியலாளர்களும் இல்லை. இத்துறைகளில் மண்ணின் மைந்தர்கள் அந்நேரத்தில் புலமையும் திறமையும் பெற்றிருக்கவில்லை. இப்போது இரண்டாவது மூன்றாவது தலைமுறையினர் அனைத்துத் துறைகளிலும் திறமைபெற்று வந்த பிறகு, தங்கள் வேலைகளை மற்றவர்கள் ஆக்கிரமிப்பு செய்வதை விரும்பாத நிலை இயல்பானது.
 சுமார் 20 லட்சம் பேர் சவுதி அரேபிய அரசின் மூலமாகப் பணியமர்த்தப்பட்டவர்கள். சுமார் 60 லட்சம் பேர் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோர். இப்போதைய சிக்கல் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோருக்குத்தான்.
 சவுதி அரசாங்கமே அழைப்புவிடுத்து நியமித்துள்ளவர்களுக்குப் பணிஇழப்பு அச்சங்கள் கிடையாது. 10 பணியாளர்களுக்கு மிகாத நிறுவனங்களுக்கு "நிடாகத்' விதிமுறைகள் பொருந்தாது என்பதால், வீட்டு வேலைக்காகச் சென்றிருப்போருக்கும், சிறு கடைகளில் பணியாற்றும் வெளிநாட்டவருக்கும் பாதிப்பு இருக்காது.
 பத்து பேருக்கும் அதிகமாக பணிபுரியும் நிறுவனங்களைத்தான் அதன் எண்ணிக்கைக்கு ஏற்ப சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம் என நான்கு மண்டலங்களாகப் பிரித்திருக்கிறார்கள். ஒவ்வொரு மண்டலத்தில் உள்ள நிறுவனங்களும் எத்தனை விழுக்காடு அரேபிய ஊழியர்களைக் கட்டாயமாகப் பணியமர்த்த வேண்டும் என்று நிர்ணயித்துள்ளனர்.
 மண்ணின் மைந்தர்கள் அதிகபட்சமாக இருக்க வேண்டிய துறைகள் அனைத்தும் "வெள்ளைச்சட்டை' வேலைகளாக இருப்பதைக் காணலாம். அதாவது, வங்கிப் பணிகளில் 90% பேர் அரேபியர்களாக இருந்தாக வேண்டும். அதேபோன்று, செக்யூரிட்டி துறை 86%, வேலைவாய்ப்பு அலுவலகங்கள் 86%, எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களில் 80%, சேவை நிறுவனங்களில் 80%, தகவல் தொழில்நுட்பம் 70%, கப்பல் போக்குவரத்து 70%, கல்வி நிறுவனங்கள் 70% பெண்கள் கல்வி நிறுவனங்கள் 80% மின் மற்றும் குடிநீர் விநியோகம் 64% பேர் இருந்தாக வேண்டும்.
 மற்றபடி சாலை வாகனப் போக்குவரத்து, கட்டுமானப் பணி, கட்டடங்கள் பராமரிப்பு (பிளம்பிங் உள்பட), உணவுக்கூடங்கள் போன்ற மனித உழைப்பு தேவைப்படும் துறைகளுக்கு அதிகபட்சமாக 28% அரேபியர்கள் இருந்தால் போதுமானது. ஆகவே, இந்தியாவிலிருந்து சவுதி அரேபியாவுக்கு கடின உடல்உழைப்புப் பணிகளுக்காகச் சென்றுள்ளவர்கள் பாதிப்படையும் வாய்ப்பு மிகமிகக் குறைவு.
 தனியார் நிறுவனங்களின் கணக்காளர், மேலாளர், பொறியாளர்கள், தொழில்நுட்பப்  பணியாளர்கள் ஆகியோர் மட்டுமே இந்த புதிய மண்டல திட்டத்தால் பாதிக்கப்படக்கூடியவர்கள். இவர்களில் திறமையானவர்கள் இந்தியாவின் பிற மாநிலங்களிலும், அல்லது மற்ற நாடுகளிலும் வேலை தேடிக்கொள்ள முடியும். ஆனால், சவுதி அரேபியாவில் கிடைத்த அதே சம்பளம் இந்தியாவில் கிடைக்கும் என்று சொல்வதற்கில்லை.
 இவ்வாறு, மண்டல திட்டத்தின் காரணமாக தனியார் நிறுவனங்களால் வெளியேற்றப்படும் ஊழியர்களுக்கு "விசா' நீட்டிப்பு கிடைக்காது. இவர்கள் நீலம், பச்சை மண்டலத் தொழில்களுக்கு மாறிக்கொள்ள வாய்ப்பு இருந்தால், தற்போது வேலை செய்யும் முதலாளியின் அனுமதி இல்லாமலேயே மாறிக்கொள்ள சவுதி அரேபிய அரசு அனுமதி அளித்திருந்தாலும், இதற்கான வாய்ப்புகள் குறைவு.
 தற்போது, மத்திய அமைச்சர் வயலார் ரவி தலைமையில் சவுதி அரேபியா செல்லும் குழுவின் நோக்கம், மண்டல திட்டத்தைக் கைவிடக் கோருவது அல்ல. பணியிழக்கும் ஊழியர்கள், விசா இல்லாத நிலையில், வலுக்கட்டாயமாக நாடு கடத்தப்பட்டுவிடக்கூடாது என்பதுதான். அவர்கள் நாடு கடத்தப்பட்டவர்கள் (டிபோர்ட்டட்) என்றால் மீண்டும் அரபுநாடுகளில் வேலைவாய்ப்பு தேடுவதில் சிக்கல்கள் ஏற்படும். ஆகவே, விசா நீட்டிப்பு இல்லாமல் சவுதி அரேபியாவில் தங்கும் கேரளத்தவரின் கடவுச்சிட்டை களங்கப்படாமல் பார்த்துக்கொள்வதுதான் வயலார் ரவி குழுவின் முதன்மைப் பணி.
 வயலார் ரவியிடம் தமிழகம் முன்வைக்க வேண்டிய கோரிக்கை, இத்தகைய அக்கறையைத் தமிழக ஊழியர்களிடமும் காட்டுங்களேன் என்பதுதான். எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், தமிழர்களும் சிலர் இருக்கத்தானே செய்கிறார்கள். அவர்களைப் பற்றியும் கவலைப்படுவதுதானே நியாயம்?

நன்றி தினமணி

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails