Wednesday, May 08, 2013

கோடையும் கொண்டாட்டக் காலம்தான் (பகிர்வு)


கோடைக் காலம் தொடங்கியதை அடுத்து தமிழகம் முழுவதும் வெயில் சுட்டெரித்து வருகிறது. வீட்டைவிட்டு வெளியில் செல்லும் மக்களை வெயில் வாட்டி வதைக்கிறது. அடுத்து அக்னி நட்சத்திர வெயில் ஆரம்பிக்க உள்ளது. இப்படி வெயில் அதிகரிக்க அதிகரிக்க வியர்க்குரு, வேனல் கட்டி, நீர்க்கடுப்பு, வெப்பக் காய்ச்சல், வெப்பத் தளர்ச்சி, வெப்ப மயக்கம் என்று பல வெப்ப நோய்களும், அக்கி, அம்மை, டைபாய்டு, காலரா, காமாலை போன்ற தொற்றுநோய்களும் நம்மைத் தொல்லைப்படுத்தத் தொடங்கிவிட்டன.
98 அல்லது 99 டிகிரி "ஃபாரன்ஹீட்' வெப்பநிலை என்பது நமது உடலின் இயல்பான வெப்பநிலை. சூரியனின் வெப்பம் அதிகரிக்கும்போது, நம் உடலின் வெப்பமும் அதிகரிக்கிறது. மூளையில் வெப்பக்கட்டுப்பாடு அதிகாரியாகச் செயல்படும் "ஹைப்போதாலமஸ்' உடனடியாகச் செயல்பட்டு, உடலில் வியர்வையை அதிகமாகச் சுரக்கச் செய்கிறது. இந்த வியர்வை ஆவியாவதன் வழியாக உடலின் வெப்பம் கடத்தப்பட்டு, உடல் குளிர்ச்சி அடைகிறது.
அதேநேரத்தில் உடலைச் சுத்தமாகப் பராமரிக்காவிட்டால், தோலில் உள்ள வியர்வைச் சுரப்பிகளில் அழுக்கு அடைத்துக் கொள்ளும். இதன் விளைவால், உடல் முழுவதும் வியர்க்குரு வரும். இதில் பூஞ்சைக் கிருமிகள் தொற்றிக் கொள்ளும். இதனால் உடலில் அரிப்பு ஏற்படும். அடுத்த ஒரு மாத காலத்துக்கு அனலும் அரிப்பும் மிகுந்த தொல்லை கொடுக்கும். கோடையில் தினமும் காலை, மாலை, இரவு என - வேலைக்குத் தகுந்தாற்போல் - குறைந்தது இரண்டு வேளை குளிக்க வேண்டும். குளித்து முடித்ததும், வியர்க்குரு பவுடர், கேலமின் லோஷன், சந்தனம் போன்றவற்றில் ஒன்றைப் பூசினால் அரிப்பு குறையும்.
சென்னை போன்ற நகரங்களில் காற்றில் ஈரப்பதம் மிக அதிகமாக உள்ளது. ஆகையால், உடலில் வியர்வைச் சுரப்பு அதிகரித்தாலும், அது உடனடியாக ஆவியாகாது. எனவே, உடலின் வெப்பம் குறையாமல் இருக்கும். அதேநேரத்தில் வியர்வை சுரப்பது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டுதான் இருக்கும். இதனால், சோடியம், பொட்டாசியம் போன்ற அயனிகள் அளவில்லாமல் வெளியேறி, அதிக நீரிழப்பு ஏற்படுகிறது. இதனால், உடல் தளர்ச்சி அடைகிறது. களைப்பு உண்டாகிறது. தண்ணீர்த் தாகம் அதிகரிக்கிறது. எரிச்சலுடன் சிறுநீர் பிரிகிறது. இந்த நிலைமையைத் தவிர்க்க, அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். குளிரூட்டப்பட்ட அறையில் இருந்தால் கூட, தாகம் எடுக்கவில்லை என்றாலும் கூட, கோடைக் காலத்தில் தினமும் மூன்றிலிருந்து ஐந்து லிட்டர் அளவுக்குத் தண்ணீர் குடிப்பது அவசியம்.
கோடைக் காலத்தில் உணவு விஷயத்தில் அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முக்கியமாக, எண்ணெயில் பொரிக்கப்பட்ட, வறுக்கப்பட்ட, கொழுப்பு அதிகமுள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும். சர்க்கரை அதிகமுள்ள இனிப்புப் பலகாரங்கள், கிரீம் மிகுந்த பேக்கரி பண்டங்கள், பர்கர், பீட்சா, ஐஸ்கிரீம் போன்ற சிற்றுண்டிகள் தண்ணீர் தாகத்தை அதிகப்படுத்தும் என்பதால், இவற்றையும் தவிர்ப்பதே நல்லது. அதேபோல், சூடான, காரமான, மசாலா கலந்த, உப்பு நிறைந்த உணவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
இட்லி, இடியாப்பம், தயிர் சாதம், மோர் சாதம், கம்பங்கூழ், அகத்திக்கீரை, முருங்கைக் கீரை, பொன்னாங்கன்னிக் கீரை, காரட், பீட்ரூட், பீர்க்கங்காய், வெண்டைக்காய், முள்ளங்கி, பாகற்காய், புடலை, அவரை, முட்டைக்கோஸ், வாழைத்தண்டு, வெங்காயப் பச்சடி, தக்காளிக்கூட்டு முதலியவை சிறந்த கோடை உணவுகள்.
மாலை வேளைகளில் வெள்ளரி சாலட், தர்ப்பூசணி சூப், தக்காளி சூப் வகைகளைச் சாப்பிடலாம். திராட்சை, சாத்துக்குடி ஆரஞ்சு, எலுமிச்சை, மாதுளை, ஆப்பிள் போன்றவற்றின் பழச்சாறுகளையும் அருந்தலாம். நுங்கு, கொய்யாப் பழம், பப்பாளிப் பழம் போன்றவையும் உடல் வெப்பத்தைத் தணிக்க உதவும் உணவுகளே. கேப்பைக்கூழில் தயிர்விட்டுச் சாப்பிட்டால், உடலின் வெப்பம் உடனே தணியும். காரணம், கேப்பைக்கூழுக்கும், தயிருக்கும் உடலின் வெப்பத்தை உறிஞ்சக்கூடிய குணமுண்டு. அசைவப் பிரியர்கள் மீன், நண்டு போன்ற கடல் உணவுகளைச் சாப்பிடலாம்.
கோடையில் எல்லாப் பழங்களும் உடலுக்கு உகந்தவை என்று சொல்ல முடியாது. உடலுக்கு வெப்பம் தரக்கூடிய அன்னாசிப்பழம், மாம்பழம் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். அதே நேரத்தில், தர்ப்பூசணி, கிர்ணி போன்ற தண்ணீர்ச் சத்து நிறைந்த பழங்களை அதிகமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். காரணம், இவற்றில் பொட்டாசியம் தாது அதிகமுள்ளது.
கோடை வெப்பத்தால் பொட்டாசியம் போன்ற அயனிகள் வியர்வையில் வெளியேறிவிடும். இதனால் உடல் களைப்படையும். தசைகள் இறுக்கமடைந்து இழுத்துக் கொள்ளும். அப்போது, இப்பழங்களில் உள்ள பொட்டாசியம் தாது அந்த இழைப்பை ஈடுகட்டும்.
கோடைக் காலத்தில் காபி, தேநீர் போன்றவற்றைக் குடிப்பதைக் குறைத்துக்கொள்ள வேண்டும். இன்றைய நிலவரப்படி கோடையில் நாம் அதிகமாக அருந்துவது, குளிர்பானங்களாகத்தான் இருக்கிறது. கரியமில வாயு நிரப்பப்பட்ட இந்தச் செயற்கை மென்பானங்கள் "ஃபிரக்டோஸ்' எனும் சர்க்கரைப் பொருளால் தயாரிக்கப்படுகின்றன. இவற்றைப் பதப்படுத்த பல வேதிப்பொருள்கள் சேர்க்கப்படுகின்றன.
முக்கியமாக, குளிர்பானங்களின் சுவையை மேம்படுத்துவதற்காக, "காஃபீன்' எனும் வேதிப்பொருளைச் சேர்க்கிறார்கள் இனிப்பை நிலைப்படுத்துவதற்காக, சிட்ரிக் அமிலம், பாஸ்பாரிக் அமிலம் போன்றவற்றைக் கலக்கிறார்கள். கராமல் மற்றும் பீட்டா கரோட்டீனை வண்ணமூட்டுவதற்காகப் பயன்படுத்துகிறார்கள்.
குளிர்பானங்கள் நீண்ட காலம் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக பொட்டாசியம் பென்சோவேட், சோடியம் சைக்ளோமேட் போன்றவற்றையும், திண்மையூட்டுவதற்காக பெக்டின், அல்ஜினேட், கராஜென் போன்ற பல வேதிப்பொருள்களையும் சேர்க்கிறார்கள். இவை அனைத்துமே நம் உடல்நலனைக் கெடுக்கக் கூடியவை என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை என்று தில்லியில் உள்ள அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் அறிவித்துள்ளது.
இன்னும் சொல்லப் போனால், குளிர்பானங்களைத் தொடர்ந்து அருந்தும்போது, இரைப்பையில் அமிலத்தன்மை அதிகரித்து, இரைப்பைப் புண், குடற்புண் ஏற்படும். பசியின்மை, புளித்த ஏப்பம், எதுக்களித்தல், வயிற்று வலி போன்ற தொல்லைகள் நீடித்து, நாளடைவில் செரிமானக் கோளாறுகளுக்கு வழிவிடும்.
குளிர்பானங்களின் அமிலத்தன்மையால் பல்லின் மேற்பூச்சாக இருக்கும் எனாமல் அரிக்கப்பட்டு, பற்சிதைவு ஏற்படும். சிறு வயதிலேயே பற்கள் விழுந்துவிடும். குளிர்பானங்களுக்குக் கருப்பு வண்ணம் தருகின்ற கராமல் எனும் வேதிப்பொருள் புற்றுநோயை உண்டாக்குகிறது என்பது பல ஆண்டுகளுக்கு முன்பே உறுதி செய்யப்பட்டுள்ளது.
குளிர்பானங்களில் இனிப்பை நிலைப்படுத்த உதவுகின்ற பாஸ்பாரிக் அமிலம், எலும்புகளுக்குப் பலம் தருகின்ற கால்சியம் சத்தைக் கரைத்துவிடுகிறது. இதனால், எலும்புகள் விரைவில் பலவீனமடைந்து, உடலில் சிறிய அடிபட்டால்கூட எலும்புகள் உடைந்துவிடுமளவுக்கு எலும்புகள் பாதிக்கப்படுகின்றன. மூட்டுவலிப் பிரச்னையை மிகச் சிறிய வயதிலேயே ஏற்படுத்திவிடுகிறது.
குளிர்பானங்களை வரம்பின்றி அருந்தும்போது, இவற்றில் உள்ள குளிர்ச்சியானது ரத்தநாளங்களைச் சுருக்கி, உடல் வெப்பத்தை இன்னும் அதிகமாக்கிவிடுகின்றது. தவிர, உடல் எடை அதிகரிப்பதற்குக் குளிர்பானங்கள் ஒரு முக்கியக் காரணியாக அமைகின்றன. குளிர்பானங்களில் தேவையற்ற கலோரிச் சத்துகள் அதிகமாக இருப்பதால், உடல் குண்டாகிவிடும். இந்தியாவில் குழந்தைகளுக்குச் சர்க்கரை நோய் ஏற்படுவதற்கும், குண்டுக் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாவதற்கும் குளிர்பானங்களே முக்கியக் காரணம் என்பதை மத்திய சுகாதாரத்துறை ஏற்கெனவே ஒப்புக்கொண்டுள்ளது.
ஆகவே, கோடையில் குளிர்பானங்கள் குடிப்பதைக் குறைத்து, இளநீர், மோர், சர்பத், பானகம், பதநீர் முதலியவற்றை அதிகமாகக் குடிக்கலாம். கோடையில் குடிக்க இளநீர்தான் சிறந்த பானம், சத்தான பானம், சுத்தமான பானம். இளநீர் குளிர்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இளநீரைத் தண்ணீரில் போட்டு வைத்து, ஒரு மணி நேரம் கழித்து வெட்டிக் குடித்தால், குளிர்ந்து இருக்கும். மாறாக, இளநீரைக் குளிர்சாதனப்பெட்டியில் வைத்து சில மணிநேரங்கள் கழித்துக் குடித்தால், இளநீரின் மருத்துவக் குணங்கள் மாறிவிடும்.
இளநீரில் உள்ள பொட்டாசியம், சோடியம், கால்சியம், மெக்னீசியம் முதலியத் தாதுக்கள் உடலின் வெப்பநிலையை உள்வாங்கி, சுற்றுச்சூழல் வெப்பநிலைக்கு ஏற்றபடி உடலின் வெப்பத்தைக் குறைக்கின்றன. இதனால், உடலில் நீரழிப்பால் ஏற்படுகின்ற பாதிப்புகள் உடனடியாகக் குறைகின்றன.
கோடைக் காலத்தில் தொடர்ந்து இரண்டு மணி நேரத்துக்குமேல் வெயிலில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். பகல் 12 மணியிலிருந்து மாலை 4 மணி வரை வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது. முதியவர்கள், குழந்தைகள், உடல்நலம் குறைந்தோர் வெயிலில் அலைவது ஆபத்தை வரவழைக்கும். முக்கியமாக, குழந்தைகளுக்கு வெப்பக் காய்ச்சல் வந்துவிடும். முதியவர்களுக்கு வெப்ப மயக்கம் ஏற்பட அதிக வாய்ப்புண்டு. ஆகவே, பகலில் வெளியில் செல்ல வேண்டியது அவசியம் என்றால், தலைக்குத் தொப்பி போட்டுக்கொள்ள வேண்டும் அல்லது குடை கொண்டு செல்ல வேண்டும்.
வெயிலில் அதிக நேரம் பயணம் செய்ய வேண்டியதிருந்தால், கண்களுக்குச் சூரியக் கண்ணாடி அணிந்து கொள்ளலாம். நேரடியாக வெப்பக்காற்று கண்களில் படாமல் பார்த்துக் கொள்வது கண்களைப் பாதுகாக்கும். சிலருக்குச் சூரியக்கதிர்களால் "சன்-பர்ன்' எனும் வெப்பப் புண்கள் வரும். இவர்கள் வெளியில் செல்லும்போது, தங்கள் சருமத்தில் சன் ஸ்கிரீன் லோஷன்களைப் பூசிக்கொள்ள வேண்டும். இரண்டு சக்கர வாகனங்களில் செல்வோர் ஈரத்துணியைத் தலையில் போட்டுக் கொள்ளலாம். ஈரமான காலுறைகளைக் காலில் அணிந்து கொள்ளலாம்.
உடைகளைப் பொறுத்தவரை, கோடைக்கு உகந்தது பருத்தி ஆடைகளே. அவற்றில்கூட இறுக்கமான ஆடைகளைத் தவிர்த்து, தளர்வான ஆடைகளை அணிய வேண்டியது முக்கியம். கருப்பு உள்ளிட்ட அடர் நிறங்கள் வெப்பத்தைக் கிரகிக்கும் குணமுள்ளவை. ஆகவே, இத்தன்மையுள்ள ஆடைகளைத் தவிர்ப்பது நல்லது. அதுபோல் செயற்கை இழைகளால் ஆன ஆடைகளையும் தவிர்க்க வேண்டும். இவை வியர்வையை உறிஞ்சாது. வியர்க்குரு, வேனல் கட்டிகள் போன்றவை இவற்றால் அதிகப்படும் ஆபத்து உள்ளது.
கோடை விடுமுறையில் நீண்ட தொலைவு வெளியூர்களுக்குப் பயணம் செய்பவர்களும் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்பவர்களும் சுத்தமான தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். உலர் பழங்களைக் கைவசம் வைத்துக் கொள்வது நல்லது. ஆண்டு முழுவதும் அலுவலகத்துக்கும் வீட்டுக்குமாக இருந்து பழகிய உடல், திடீரென்று நாள்முழுவதும் வெயிலில் சுற்றும்போது சற்று தடுமாறும். வெப்பத்தை எதிர்கொள்ள பருத்தி ஆடைகளை மட்டுமே அணிந்து செல்ல வேண்டும். செல்வது குளிர்ப்பிரதேசமே ஆனாலும் நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டியது முக்கியம். சுற்றுலாத்தலங்களில் பழங்களில் மிளகாய்த்தூள் தடவி சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. உதட்டிலும், கை கால்களிலும் தேங்காய் எண்ணெயைச் சிறிது தடவிக் கொண்டால், வெப்பத்தால் உதடு வெடிப்பதைத் தடுக்கலாம், தோல் வறட்சி அடையாமலிருக்கும்.
பணி செய்யும் இடமானாலும் சரி, படுத்துறங்கும் இடமானாலும் சரி, ஏ.சி. அல்லது ஏர் கூலர் கொண்டு குளிரூட்டம் செய்து கொள்வது மிக நல்லது. இது இயலாதவர்கள் வீட்டு மாடியில் தென்னங்கீற்றுகளைப் பரப்பி மாலை வேளையில் தண்ணீர் தெளித்து வைத்துக்கொண்டால், சூரிய வெப்பம் வீட்டுக்குள் இறங்குவதைக் குறைக்க முடியும். அடுக்குமாடி வீடுகளில் வசிப்பவர்கள் மாலை ஐந்து மணிக்குமேல் ஆறு மணி வரை காற்றாடியைப் பயன்படுத்தி அறை வெப்பத்தைத் தணித்துக்கொள்ள வேண்டும். வீட்டில் நல்ல காற்றோட்டமான இடங்களில் படுத்துறங்க வேண்டும்.
இப்படி உணவு, உடை, உறைவிடம் இம்மூன்றிலும் கொஞ்சம் கவனம் செலுத்தினால் போதும், கோடைக் காலமும் கொண்டாட்டக் காலம்தான்.

நன்றி : தினமணி

4 comments:

ஜோதிஜி திருப்பூர் said...

என்ன ரெண்டு பேரும் ஒரே மாதிரி சிந்திக்கிறோம். வெயில் பற்றி எழுதிக் கொண்டுருக்கேன்.

kaliya raj said...

அட..அப்படியா..நல்லது ...எழுதுங்க..எழுதுங்க...:))

Ragavachari B said...

கோடையை எப்படி எதிர் கொள்வது என்பது பற்றிய தகவல் மற்றும் குளிர்பானங்கள் பற்றிய விரிவான அலசல். தினசரியை படிக்காத என்னை போன்றவர்களுக்கு இது மிகவும் உதவும். மிக நல்ல பகிர்வு. நன்றி.
மேலும் உங்களுடைய பல புகைப்பட பதிவுகள் அருமையாக உள்ளது.

kaliya raj said...

வாங்க ராகவன் ..எனக்கான பெட்டகம் நீங்கள் சொல்வது மாதிரி கொஞ்சம் யோசனை இந்தபகிர்வுகள்

LinkWithin

Related Posts with Thumbnails