Friday, June 28, 2013

"மன்னும் இமயமலை' மாசுபடுதே? (பகிர்வு)

60 ஆண்டுகளுக்கு முன் 1953, மே 29-ஆம் நாள் டென்சிங் நார்கே என்ற நேபாள நாட்டு  ஷெர்ப்பா, எவரஸ்ட் சிகரத்தின் உச்சியில் நின்று கொண்டு கிட்டத்தட்ட நினைவிழந்த நிலையில் இருந்த எட்மண்ட் ஹிலாரி என்ற நியூசிலாந்து நாட்டு மலையேறியின் இடுப்பில் கட்டியிருந்த கயிற்றைப் பிடித்துச் சகடையில்லாத கிணற்றிலிருந்து தண்ணீர்க் குடத்தை மேலே இழுப்பதைப்போல இழுத்துச் சிகரத்தில் கிடத்தி முதலுதவி செய்து எழுப்பி உட்கார வைத்தார்.
 அந்தக் கணத்தில் அவருக்கு, தான் எவரஸ்ட் சிகரத்தின் உச்சியில் கால் பதித்த "முதல் மனிதனாகி' வரலாற்றுச் சாதனை படைத்துவிட்டது புலனாகவேயில்லை. ஆனால், ஆணவம் மிக்க ஆங்கிலேய அதிகார வர்க்கம் தமது சாம்ராஜ்யப் பிரஜையான ஹிலாரியை அந்தச் சாதனைக்கு உரியவராக்கி "ஸர்' பட்டம் முதலான விருதுகளையும் பரிசுகளையும் பொழிந்தனர். டென்சிங் இந்தியப் பிரஜையா, நேபாளப் பிரஜையா என்ற சந்தேகம் எழுப்பப்பட்டு அவருக்குப் பெயரளவில் சில பரிசுகள் வழங்கப்பட்டன.
 சில வாரங்கள் கழித்து டென்சிங், எவரஸ்டின் உச்சியில் நின்று கொண்டு ஹிலாரியைக் கீழேயிருந்து மேலே இழுத்ததைக் காட்டும் ஒளிப்படங்கள் வெளியிடப்பட்ட பிறகே ஆங்கிலேயர்களின் ஆர்ப்பாட்டம் அடங்கி டென்சிங் தான், எவரஸ்டில் ஏறிய முதல் மனிதன் என்பதை உலகம் அங்கீகரிக்க வேண்டியதாயிற்று.
 அதற்கு முன்பே பல ஆண்டுகளாக உலகின் எல்லா மூலைகளிலிருந்தும் வந்த, வந்து கொண்டிருக்கிற மலையேறிகளின் கையில் (காலில்) சிக்கி எவரஸ்ட் சிகரம் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறது. அவர்கள் விட்டுச்செல்லும் கழிவுப் பொருள்களும், ஆக்சிஜன் உருளைகளும் காலியான உணவு டப்பிகளும், புட்டிகளும் அதன் தூய்மையைக் கெடுத்து வருகின்றன. ஹிலாரியும் டென்சிங்கும் தென்புறச் சரிவின் வழியாகச் சிகரத்துக்குச் சென்ற பாதை அன்று இறுகிய பனிப்பாளங்களால் பாவப்பட்டிருந்தது. இன்று அதில் பாறைப் பரப்பு வெளித்தெரிகிறது.
 ஆசியாவின் வளிமண்டலத்தில் நிறைந்துவிட்ட கரியமில வாயுவும் தூசிகளும் பருவநிலைக் குலைவுகளும் சேர்ந்து சூழல் வெப்ப நிலையை உயர்த்திப் பனிப்பாறைகளை உருக்கிக் கொண்டிருக்கின்றன. இமயச் சிகரங்களின் பனிமுடிகள் வேகமாக உதிர்ந்து வருகின்றன. அவற்றின் தலை வழுக்கைப் பரப்பு விரிந்து கொண்டே போகிறது. இமயத்தொடரின் கிழக்குப் பகுதியிலுள்ள பனியாறுகள் சுருங்கிக்கொண்டே வருகின்றன. ஆசியாவின் பெரிய நதிகளில் எட்டு அங்கு அவதரித்துப் பல திசைகளில் பாய்ந்தோடுகின்றன.
 தென்துருவம், வடதுருவம் ஆகியவற்றையடுத்துப் பனியிருப்பு நிறைந்த மூன்றாவது துருவம் என இமயம் வர்ணிக்கப்படுகிறது. அங்குள்ள பனியிருப்பு உருகுமானால்  வங்கக் கடலிலும் சீனக் கடல்களிலும் நீர் மட்டம் உயர்ந்து பல கடற்கரையோரச் சமூகங்களைப் பாதிக்கும்.
 சீனா, பாகிஸ்தான், பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகள் கட்டியிருக்கிற மற்றும் கட்டத் திட்டமிட்டிருக்கிற புனல் மின்சார உற்பத்தி அணைகள் எல்லாம் பூர்த்தி பெற்ற பின்னர் இமயப் பகுதியில் ஏறத்தாழ 800 அணைகள் அமைந்துவிடும்.
 உலகிலேயே அதிகமான எண்ணிக்கையில் அணைகளைக் கொண்ட பகுதியாக அது அமையும். அது நில நடுக்கங்கள் அதிகமாக ஏற்படக்கூடிய பகுதி வேறு. அத்தகைய அணைகள் உடையுமானால் ஏற்படக்கூடிய பேரிடர் சுற்றுச் சூழல் பாதிப்புகள் பயங்கரமாக இருக்கும்.
 கடந்த 25 ஆண்டுகளில் நேபாளத்தில் பனிஏரிக் கரைகள் உடைந்ததால் 20 முறை பெரும் வெள்ளச் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. அத்தகைய பேரிடர்கள் மீண்டும் மீண்டும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. அவற்றைத் தடுக்கவும் பல்லுயிர்ப் பெருக்க வளத்தைப் பாதுகாக்கவும் இமயத்தை ஒட்டியுள்ள நாடுகள் ஒத்துழைத்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசர அவசியமாகியிருக்கிறது.
 இமயமலையின் கிழக்குப் பகுதி வியப்பூட்டும் பல்லுயிர்ப் பெருக்கமுள்ளது. அங்கு வாழும் ஆதிவாசிகளும் பறவைகளும் விலங்குகளும் வண்ணத்துப் பூச்சிகளும், சிலந்திகளும், தவளைகளும், பாம்புகளும் அலாதியானவை. அவை அப்பகுதிக்கே உரித்தான பல தனித்தன்மைகளைப் பெற்றுள்ளன. அவற்றில் 80 சதவீதம் அப்பகுதியில் மட்டுமே காணப்படுகிற உள்ளூர்ச் சுதேசிகள். இந்த அளவுக்கு உயர்ந்த சுதேசி உயிரின விகிதம் இந்தியத் துணைக் கண்டத்தில் வேறெங்கும் கிடையாது. உலகம் முழுவதிலுமுள்ள பல்லுயிர்ப்பெருக்க வளத்தில் பத்து சதவீதம் இப்பகுதியில் உள்ளது.
 அருணாசலப் பிரதேசத்தில் மட்டுமே 120 இனங்களைச் சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர். அவர்கள் 50 வெவ்வேறு மொழிகளைப் பேசுகின்றனர். அவற்றில் பல முற்றாயழியும் கட்டத்தில் உள்ளன. அங்கு 80 சதவீதப் பரப்பு காடுகளாலானது. அவற்றில் 6,000 தாவரச் சிற்றினங்கள் உள்ளன. இது இந்தியா முழுவதிலுமுள்ள தாவரச் சிற்றினங்களில் மூன்றிலொரு பங்கு ஆகும். இந்தியாவிலுள்ள பறவையினங்களில் 50 சதவீதமும் பாலூட்டியினங்களில் 20 சதவீதமும் அருணாசலப் பிரதேசத்தில் வசிக்கின்றன.
 1953-இல் இமய வளிமண்டலத்தில் கரியமில வாயுவின் செறிவு ஒரு மில்லியனில் 315 பங்காக இருந்தது. இன்று அது 400 பங்கைத் தாண்டிவிட்டது. மலையேறும் கூட்டம் அதிகமாக அதிகமாகக் கரியமில வாயு மற்றும் பசுங்குடில் வாயுக்களின் செறிவு கூடிக்கொண்டே போகும்.
 இமயமலைச் சாரல்களில் பைன் மரங்கள் மேலும் மேலும் அதிகமான உயரங்களில் வளரத் தொடங்கியிருக்கின்றன. இன்னும் சில ஆண்டுகளில் எவரஸ்ட் சிகரத்துக்குச் செல்லும் பாதை யெல்லாம் ஊசியிலைக் காடுகள் உருவாகிவிடக் கூடும். பனிச்சரிவுகள் நீர் வீழ்ச்சிகளாக மாறிவிடலாம் என்றெல்லாம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அஞ்சுகிறார்கள்.
 இன்று கங்கைச் சமவெளியில் நின்று கொண்டு பார்த்தால் வளிமண்டலத் தூசுகளும் மாசுகளும் இமயமலைத் தொடரின் முகடுகளைத் தெளிவாகப் பார்க்க முடியாமல் தடுக்கின்றன. ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் இந்தியா முழுவதையும் நில அளவீடு செய்ய ஒரு துறை அமைக்கப்பட்டது. நேபாள மன்னர்கள் இமயமலைப் பகுதியில் நில அளவை செய்ய அனுமதி தரவில்லை. எனவே நில அளவைத் துறையினர் பிகார் மாநிலத்தின் எல்லையிலிருந்து முக்கோண அளவீட்டு முறை மூலம் எவரஸ்ட் சிகரத்தின் உயரத்தை மதிப்பிட்டு அது உலகிலேயே மிக உயரமான மலை முகடு என்று தீர்மானம் செய்தனர். அத்துறையின் தலைவராயிருந்து ஓய்வுபெற்று இங்கிலாந்து திரும்பிப் போயிருந்த சர். ஜார்ஜ் எவரஸ்டின் பெயர் அந்த முகட்டுக்குச் சூட்டப்பட்டது. ஆனால், அவர் எவரஸ்ட் சிகரத்தைப் பார்த்ததேயில்லை என்பது வியப்பூட்டும் தகவல்.
 ஒருவரைக் கடல் மட்டத்திலிருந்து தூக்கிக்கொண்டு போய் எவரஸ்டின் முகட்டில் இறக்கி விட்டால் அவர் சில நிமிடங்களுக்குள் இறந்து விடுவார். முன்பெல்லாம் எவரஸ்ட் சிகரத்தில் ஏறுவது என்பது கிட்டத்தட்ட ஆறு மாதம் பிடிக்கும் திட்டமாக இருந்தது. காத்மாண்டுவிலிருந்து புறப்பட்டு எவரஸ்ட் சிகரத்தின் அடிவார முகாமுக்குச் செல்ல ஒரு மாதம் நடக்க வேண்டும். நடுநடுவே சில நாள்கள் ஓய்வெடுத்து உடலைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். இன்றோ மலையேறிகள் ஹெலிகாப்டரில் பறந்து சென்று அடிவார முகாமில் இறங்கி விடுகின்றனர்.
 அடுத்த மூன்று அல்லது நான்கு வாரத்திற்குள் எவரஸ்ட்டின் உச்சிக்குச் சென்று விடுகிறார்கள். அதிநவீனமான சாதனங்களும் உடைகளும் ஆக்சிஜன் உருளைகளும் தொழில்நுட்ப ஆலோசனைகளும் அவர்களுக்கு உதவுகின்றன. முதியவர்களும், முடவர்களும் குருடர்களும் ஒரு 13 வயதுச் சிறுவனும்கூட எவரஸ்ட் முகட்டை எட்டிப் பிடித்திருக்கின்றனர். அவ்வளவு நவீன வசதிகளின் உதவியிருந்தும் அண்மைக்காலமாக இமயமலைச் சரிவுகளில் மரணமடைகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலையளிப்பதாக உள்ளது.
 தென் துருவத்தையும் வட துருவத்தையும் தமக்கு முன்பே வேறு நாட்டு வீரர்கள் வெற்றிகொண்டுவிட்டதால் ஆதங்கத்துடனிருந்த ஆங்கிலேயர்கள் எவரஸ்டை வெற்றி கொள்ளும் முதல் வீரராவது ஆங்கிலேயராக இருக்க வேண்டும் என முனைப்புடனிருந்ததால் அதிக எண்ணிக்கையில் அவர்கள் எவரஸ்ட் சிகரத்திற்குப் படையெடுத்தனர்.
 டென்சிங்கும் ஹிலாரியும் எவரஸ்டை வென்ற தகவலை அஞ்சல் ஓட்டக்காரர்கள் மூலம்தான் காத்மாண்டுவுக்கு அனுப்ப முடிந்தது. அங்கிருந்து லண்டனில் உள்ள தலைமையகத்துக்கு வானொலி மூலம் செய்தி அனுப்பினார்கள். இப்போது எவரஸ்டின் சரிவுகளில்கூட "3-ஜி' அலைபேசிக் கோபுரங்கள் நிறுவப்பட்டு வருகின்றன.
 மலையேறிகள் தம் வீட்டிலுள்ள மனைவி மக்களுடன் பேசிக்கொண்டே மலையேறவும் விடியோ படங்களை அப்போதைக்கப்போதே அனுப்பவும் முடிகிறது. 2005-ஆம் ஆண்டில் சில பிரான்சு நாட்டினர் உரிய அனுமதியேதும் பெறாமலேயே எவரஸ்டின் உச்சியில் தமது ஹெலிகாப்டரை இறக்கிப் படமெடுத்தார்கள்.
 நேபாளத்து ஷெர்ப்பாக்கள் பிறவியிலிருந்தே இமயத்தின் தட்பவெப்ப நிலைக்கும் குறைந்த காற்றழுத்தத்திற்கும் பழகிப் போனவர்கள். அவர்கள் சுமை தூக்கும் கூலிகளாக இருந்த நிலை மாறி மலையேறிகளுக்குத் தொழில்நுட்ப உதவியாளர்களாகி விட்டார்கள். அவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது.
 எவரஸ்டில் ஏறுவது என்பது தற்போது ஒரு சுற்றுலாப் பயணமாகிவிட்டது. நேபாளத்துக்கும் சீனாவுக்கும் அதன் மூலம் அன்னியச் செலாவணி வருமானம் கிடைக்கிறது. மலைச்சரிவுகளில் ஏணிக்கயிறுகளும் கால் ஊன்றும் முளைகளும் நிரந்தரமான வகையில் பொருத்தப்படுகின்றன. முகட்டை எட்டப் புதிய புதிய பாதைகள் உருவாக்கப்படுகின்றன. "லிப்டு'களைக்கூடப் பொருத்தி விடுவார்கள் போலிருக்கிறது!
  எலிசபெத் ராணி முடிசூட்டிக்கொண்ட அன்றுதான் எவரஸ்ட் வெற்றி கொள்ளப்பட்ட செய்தி வெளியிடப்பட்டது. உடனே ஆங்கிலேயர்கள் அதற்கு எலிசபெத்தின் பெயரைச் சூட்ட வேண்டும் என்று பிரசாரம் செய்யத் தொடங்கினார்கள். ஆனால், எவரஸ்டின் தென் பாதிக்கு உரிமையாளரான நேபாளமும் வடபாதிக்கு உரிமையாளரான சீனாவும் அதைக் கண்டுகொள்ளவேயில்லை.
 டென்சிங்கின் வெற்றியை நேபாள மக்கள் தேசியப் பெருமையாகக் கொண்டாடி அவர் திரும்பியபோது ஆடிப்பாடி வரவேற்றார்கள். கூட வந்த ஹிலாரியையும் குழுத்தலைவரான ஹன்ட்டையும் அவர்கள் கண்டுகொள்ளவேயில்லை. டென்சிங் இந்தியக் குடியுரிமை பெற்று டார்ஜிலிங்கில் குடியேறியபோது அவர்களுக்குச் சற்று ஏமாற்றம்தான். இந்தியர்கள் அவருக்கு ரேடியோ, கிராமபோன், மின் அடுப்பு, கைக்கடிகாரங்கள், தங்கக்காசுகள் போன்ற பரிசுகளையும் 180 சதுர கஜம் வீட்டு மனையையும் வழங்கிச் சந்தோஷப்பட்டார்கள். அவருடைய மனைவிக்கு ஒரு தையல் யந்திரம் கிடைத்தது. இந்தியப் பிரதமர் நேரு தனது பழைய உடைகள் எல்லாவற்றையும் டென்சிங்குக்குக் கொடுத்தார். அவை டென்சிங்குக்குக் கச்சிதமாகப் பொருந்துகின்றன என்று சொல்லிச் சந்தோஷப்பட்டார். பாவம், அதற்கு மேல் ஒன்றும் உதவ முடியாத அளவுக்கு அன்றையப் பிரதமரின் பொருளாதார நிலை அமைந்திருந்தது!

நன்றி : தினமணி

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails