Saturday, July 27, 2013

அன்புடன் அப்பா... (பகிர்வு)

நகைச்சுவை உணர்வு என்பது ஓர் அருமருந்து. என் அப்பா எனக்குக் கொடுத்த சொத்துகளில் விலை மதிக்க முடியாததும் நான் பொக்கிஷமாகக் கருதுவதும் அதைத்தான். வாழ்க்கையில் இடர்கற்கள் வரும்பொழுதெல்லாம் சிரிக்க முடிந்தால் சரியாமல் இருக்கமுடியும்.  "அப்பாக்களின் ஊர்வலம்' பார்ப்போம்.
 ஹுமாயூன் இளைஞராக இருக்கும்பொழுது கடுமையாக நோய்வாய்ப்பட்டார். இறந்து விடுவாரென்றே அவர் தந்தை மொகலாய சக்ரவர்த்தி பாபர் பயந்தார். அவர் சந்தித்த ஒரு மகான், ""உன்னிடம் இருக்கும் விலை மதிக்க முடியாத ஒன்றைத் தியாகம் செய்தால் மகன் பிழைப்பான்'' என்றார்.
  ""உன்னிடம் இருப்பதில் விலை மதிக்க முடியாதது கோஹினூர் வைரம், அதைக் கொடுத்து விடு'' என்றார். அதற்கு பாபர் பதிலளித்தார், ""கோஹினூர் என் மகனுடையது. என்னுடைய சொத்தை அல்லவா நான் தியாகம் செய்ய வேண்டும்? ஏன் அரசாங்கத்தையே நான் தியாகம் செய்தால்கூட அது பெரிதல்ல. என்னுயிரை நான் தியாகம் செய்கிறேன் என்னருமை மகனுக்காக, அதுதான் விலை மதிக்க முடியாதது''.
  மகனின் அருகே நின்று ""அல்லாவே, என் உயிரை எடுத்துக்கொள், என் மகனுடைய உயிரைத் தந்து விடு'' என்றார். சிறிது நேரத்தில் பாபர் கீழே விழுந்தார், படுத்த படுக்கையாகிவிட்டார். ஹுமாயூன் பிழைத்துக் கொண்டார். மன்னர் பாபர் மறைந்தார். பாபரின் மனைவி என்ன செய்தார் என்ற தகவல் இல்லை. இந்த அப்பாதான் பிள்ளைக்கு உயிரைக் கொடுத்தார் என்று சரித்திரக் கதை சொல்கிறது.
 இராம காதையைப் பார்ப்போம். மகனைப் பிரியப்போகிறோம் என்று மன்னர் தசரதன் அரற்றுகிறார். ""புகழின் புகழே'', ""மெய்யின் மெய்யே'' - மகன் காட்டுக்குச் சென்ற பின் உயிர் தாங்குமா, இனி எப்படி உயிர் வாழ்வது என்று கதறுகிறார். பிறகு ராமரும், தம்பியும் மிதிலை பெற்ற தங்கமும் காட்டிற்குச் சென்றுவிட்டார்கள் என்று அவரிடம் தகவல் கூறும் பொழுதே உயிர் பிரிகிறது. தாயார் கோசலை 14 வருடங்கள் காத்திருந்து மகன் திரும்ப வருவதையும் பார்க்கிறாள். தசரதனைக் குற்ற உணர்வு கொன்றது என்று சொல்லாதீர்கள். அதுவும் இருக்கலாம். ஆனால் புத்திர சோகம் என்றாலே தசரதன்தான் மனதில் நிழலாடுவார், கோசலை அல்ல. தாய்மார்கள் கோபம் வேண்டாம். சமன் செய்து சீர்தூக்கும் கோல் போல தாயார்களின் மகிமையைக் கூறிவிட்டு தந்தையைப் பற்றியும் கூற வேண்டும் இல்லையா?
 நிகழ்காலத்திற்கு வருவோம். இரண்டு நேர்காணல் தேர்வில் நான் தேர்வு செய்பவர்கள் குழுவில் இருந்தேன். ஒன்று முன்சீப் தேர்வுக்கானது. இன்னொன்றில் மாவட்ட நீதிமன்றங்களின் தாற்காலிகக் கணினி அலுவலர்கள்.
 முதலில் சட்டம் பற்றியும், பின் பொது அறிவு, நிகழ்காலச் சம்பவங்கள் பற்றியெல்லாம் கேட்டுவிட்டு இறுதியில் சில வித்தியாசமான கேள்விகள் கேட்போம்.
 முன்சீப் தேர்விற்கு வந்த ஒரு பெண்ணிடம் கேள்வி கேட்டேன். ""நீங்கள் தேர்வு செய்யப்பட்டு முன்சீப் பதவி ஏற்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நீதிமன்றத்தில் அமர்கிறீர்கள். ஒரு பெரிய வழக்கறிஞர், கப்பல் போல ஒரு காரில் வருகிறார். சுற்றி அவருடைய இளையோர் படை. உங்களுக்குத் தெரியும் உங்கள் ஒரு மாதச் சம்பளத்தைவிட ஒரே நாளில் அவர் வாங்கும் தொகை அதிகம் என்று. அப்பொழுது உங்களுக்கு என்ன தோன்றும்? இந்த வேலைக்குப்போய் வந்துவிட்டோமே என்றா?''
 அந்தப் பெண்ணின் கண்களில் கோபம் கலந்த கண்ணீர் மின்னியது.
 ""மேடம், என் அப்பா நான் நீதித்துறைக்கு வந்து சிறப்பாகப் பணியாற்ற வேண்டும் என்று ஆசைப்பட்டார். அவர் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள். அரசாங்க சம்பளத்திற்கு மேலே ஒரு ரூபாயை அவர் கை தொட்டது கிடையாது. என்னையும், என் சகோதரிகளையும் நன்றாகப் படிக்க வைத்தார். எனக்கு எப்படி மேடம் அப்படியெல்லாம் தவறான எண்ணம் தோன்றும்? என் அப்பா அப்படி என்னை வளர்க்கவில்லை''.
 சபாஷ் அப்பா! நம் பெற்றோரை மிஞ்சியது இல்லை. இந்த அப்பா நன்னெறியை வாழ்ந்து காட்டியுள்ளார்.
 இன்னொரு பெண். இன்னொரு தேர்வு. இன்னொரு அப்பா. இன்னொரு கேள்வி.
 ""உங்களுக்கு ஆதர்ச ஆணோ, பெண்ணோ யார்?''
 ""அப்படி யாரும் தோன்றவில்லையே''
 ""ஒருவருமே இல்லையா? இவர் மாதிரி வாழ வேண்டும். இவர் அறிவுரைதான் என் மந்திரம் இப்படி...?''
 ""ம்ம், என் அப்பா மேடம்''.
 ""வெரிகுட்''
 ""அவர் ஒரு தொழிற்சாலையில் வேலை செய்கிறார்''
 ""ம்ம்''.
 ""என் அப்பா, தன் வேலையைக் கவனத்துடன் கருத்தாய் செய்வார். என்னிடம் இங்கு வருவதற்கு முன் சொன்னார் - உனக்கு இந்த வேலை கிடைக்க என் வாழ்த்துகள். அப்படிக் கிடைக்கவில்லை என்று வைத்துக்கொள். கார்ப்பரேஷனில் தெரு கூட்டும் வேலை கிடைத்தால் உன்னைவிட சிறப்பாக யாரும் அந்த வேலையைச் செய்ய முடியாத அளவிற்கு நீ செய்ய வேண்டும் என்று. இதை நான் மறக்கக்கூடாது, மறக்கவும் மாட்டேன்''.
 சபாஷ் அப்பா நெ.2! செய்யும் தொழிலே தெய்வம் என்று பெண்ணுக்கு உணர்த்திவிட்டீர்கள். அம்மா அன்பைக் காட்டுவதுபோல அப்பாவால் முடியாமல் போகலாம். அதற்குப் பல காரணங்கள். உடல் ரீதியாக, மனோதத்துவ ரீதியாக இருக்கலாம். இதனாலேயே அம்மாக்கள், பெற்றோர்கள் போட்டியில் சூப்பர் ஸ்டார் கோப்பையைப் பெற்றுவிடுகிறார்கள். அப்பாக்கள் குறைந்தவர்கள் இல்லை என்பதைக் காட்டத்தான் திருச்சிக்கு அருகில் "ஒரு அப்பா' வந்து பெண்ணுக்குப் பிரசவம் பார்த்தார். அவர் "நான் தந்தை மட்டுமல்ல, தாயுமானேன்' என்று உலகத்திற்குக் காட்டினார்.
 எவ்வளவு தந்தைகள் நிலத்தை விற்று குழந்தைகள் படிக்க வேண்டுமென்று தங்கள் வாழ்க்கை அந்தஸ்தைக் குறைத்துக் கொள்கின்றனர். இந்த வாழ்க்கையின் குரூர நெரிசலில் கசங்கி குனிந்து ஒடுங்கிப் போகிறார்கள். ஆண்கள் அழுவதில்லை, அதனாலேயே அவர்களுடைய சோகங்கள் வெளிவருவதில்லை.
 அம்மாக்களுக்கு மக்கள் செய்வது பிடிக்கவில்லை என்றாலும்கூட ""அப்பாவுக்குப் பிடிக்காது'' என்றுதான் சொல்வார்கள். இதில் இரண்டு விளைவுகள். "அம்மா நல்லவள், அப்பா தான் தடங்கல்' என்று பிள்ளைகள் எண்ணலாம். இன்னொன்று அப்பாவுக்கு ஏன் பிடிக்கவில்லை. மகன் / மகள் தன் முடிவை ஏன் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று சுமுகமாகப் பேச ஒரு இடம் ஏற்படுகிறது. இதனாலேயே மக்கள் அம்மாவிடம் எடுத்துக்கொள்ளும் உரிமையை அப்பாவிடம் எடுக்க மாட்டார்கள்.
 அப்பாவிடம் கொஞ்சம் பயம் கலந்த மரியாதை. உதாரணம், பிள்ளை சிகரெட் பிடிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்பா அப்பொழுது வருகிறார். உடனே அந்த சிகரெட் துண்டைத் தரையில் தேய்த்து, இருமுறை கைகளில் ஊதி நாற்றம் வருகிறதா என்று பார்த்து, வளையமிடும் புகை வட்டங்களை கைகளால் விரட்டி... ""அட, வாங்கப்பா! எப்ப வந்தீங்க?'' (இவ்வளவு சிரமம் ஏன்? அந்த சிகரெட்டை ஊதித்தான் ஆக வேண்டுமா என்ன?) இப்படி தந்தையிடம் காலம் காலமாக இருந்து வரும் மரியாதை எல்லை இன்று "இல்லை'யாகிக் கொண்டிருக்கிறது. அப்பாக்கள் கவனம் - நீங்கள்தான் உங்கள் குழந்தைகளின் கண்களில் "ஆதர்ச ஆணாக' இருக்க வேண்டும்.
 இப்பொழுது ஒரு கடிதத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். "ஒன்-அப்' என்று ஒரு ஆங்கிலப் பத்திரிகை. இங்கிலாந்தில் பிரசுரமாகிறது. அது விவாகரத்தினாலோ, மரணத்தினாலோ அல்லது வேறு காரணங்களாலோ தனியாகக் குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களுக்காக நடத்தப்படுகிறது. அபிஜித் தாஸ் குப்தா என்ற அப்பா எழுதிய கடிதம். தலைப்பு ""விவாகரத்தினால் தனியாகிப் போன இந்திய அப்பா''. அதிலிருந்து சில பகுதிகள் இங்கே:
 ""அவள் என்னைவிட்டு ஏன் போனாள் என்று தெரியும். ஆனால், குழந்தைகளின் காப்புரிமை வேண்டும் என்று ஏன் கேட்கவில்லை என்று புரியவில்லை. நம் நாட்டு நீதிமன்றங்களில் அம்மா காப்புரிமை கேட்டால் எளிதாகக் கிடைத்துவிடும்''.
 ""ஆறு வருடங்கள் பழகி, பின்பு மணந்து, பதின்மூன்று வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த பின் போய்விட்டாள். ஒன்பது வருடங்கள் ஆகின்றன.  இந்த ஒன்பது வருடங்களில் நான் என் வேலையையும் செய்துகொண்டு என் பெண்ணையும், பிள்ளையையும் வளர்த்துவிட்டேன். இன்று என் பெண்ணுக்கு வயது 21''.
 ""அப்பொழுதெல்லாம் காலை நேரம்தான் கடினமான நேரம். கண் விழித்தவுடன் என் 6 வயதுப் பையனும், 12 வயதுப் பெண்ணும் அம்மாவைத்தான் தேடுவார்கள்''.
 ""என் வாழ்க்கை எனக்கு நிறைய ஆத்ம திருப்தியைக் கொடுத்துள்ளது. பிள்ளையைத் தோளில் தூக்கி பள்ளிக்கூட பஸ்ஸில் கொண்டுவிட்டு, வளர்ந்துவரும் பெண்ணுடன் ஓய்வு நேரம் செலவழித்து...''
 ""என் மனைவியை, குழந்தைகளைப் பார்க்க அனுமதிப்பது என்று முதலிலேயே முடிவு செய்து கொண்டேன். அவள் வருவாள். கஷ்டமாகத்தான் இருக்கும். இருந்தும் என் குழந்தைகளுக்காக. ......அவர்கள் தங்கள் பெற்றோர்கள் சிண்டைப் பிடித்துச் சண்டை போடுவதைப் பார்க்கக்கூடாது என்பதற்காக''.
 ""நல்ல பொறுப்புள்ள குழந்தைகளாக அவர்களை வளர்த்துவிட்டேன். இன்றும் அவள் வருகிறாள். நண்பர்களாகத்தான் இருக்கிறோம்''.
 இதைப் படிக்கும்பொழுது எனக்குத் தோன்றியது, ""நீ ஆண்பிள்ளை அழக்கூடாது'' என்று சொல்வது எவ்வளவு தவறு என்று. இந்தத் தந்தையின் தலையணை நிச்சயம் நனைந்திருக்கும். அவர் மனைவியைத் திட்டாதீர்கள். பாதிக்கப்பட்டவரே நட்புடன் நடத்தியிருக்கிறார்  நமக்கென்ன? தனியாக குழந்தைகளை வளர்ப்பது எளிதல்ல. அதுவும் ஒரு தந்தைக்கு கஷ்டம் அதிகம். மதிப்பெண்கள் கூடுதலாகக் கொடுக்க வேண்டும். முதுமையிலும் கூட தனியாகிப் போகும் தந்தையின் தனிமை எனும் வாளுக்கு கூர்மை அதிகம்.
 ஒரு "பழைய பழைய' விளம்பரப்பாட்டு நினைவுக்கு வருகிறது.
 ""அப்பா, அப்பா கடைக்குப் போறியா?
""ஆமாங்கண்ணு, என்ன வேணும் சொல்லு''
 தந்தையைப் போற்றுதும்!

நன்றி : தினமணி

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails