Sunday, December 20, 2015

சிறுநீர் கழித்தால் திருப்பியடிக்கும் சுவர்கள்- பகிர்வு

தன்மீது சிறுநீர் கழிப்பவர்களை நோக்கி அந்தச் சிறுநீரை திருப்பியடிக்கும் சுவர்கள் லண்டனில் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. இந்த சுவர்களின் சிறப்பு மேல்பூச்சு இந்த “திருப்பிக்கொடுக்கும்” வேலையை செய்கிறது.

இவை வித்தியாசமான சுவர்கள். தன்மீது சிறுநீர் கழிப்பவர்களை நோக்கி அந்தச் சிறுநீரை திருப்பியடிக்கும் சுவர்கள் இவை. இந்த சுவர்களின் சிறப்பு மேல்பூச்சு இந்த “திருப்பிக்கொடுக்கும்” வேலையைச் செய்கிறது.
இந்தச் சுவர்கள் தற்போது லண்டனில் உள்ள உள்ளூராட்சி நிர்வாகத்தால் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. தன்மீது படும் எந்த திரவத்தையும் திருப்பியடிக்கும் வகையான பிரத்யேக சுவர்ப்பூச்சு தான் இந்த சுவர்களின் கவசமாக இருந்து பாதுகாக்கிறது.
கிழக்கு லண்டனில் இருக்கும் ஷார்டித் மற்றும் டால்ஸ்டன் பகுதியிலுள்ள குடிக்குப் பேர்போன இரண்டு இடங்களில் இந்த பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஹக்னி உள்ளுராட்சி சபைக்குள் இருக்கும் சாலையோர சுவர்களில் சிறுநீர் கழிப்பவர்கள் செய்யும் அசுத்தத்தை தூய்மைப்படுத்துவதற்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ஸ்டெர்லிங் பவுண்ட்கள் (இந்திய மத்திப்பில் சுமார் ஒரு கோடி ரூபாய்) செலவாகிறது.
இப்படி சாலையோர சுவர்களில் சிறுநீர் கழிப்பவர்கள் மீது அபராதம் விதித்தும் அவர்களில் பலர் திருந்தவில்லை என்கிறார் ஹக்னி உள்ளூராட்சி சபையின் ஃபெர்யல் டெர்மிசி. “அபராதம் அவர்களை திருத்தவில்லை. தங்களின் சிறுநீரால் தாங்கள் குளிப்பாட்டப்படுவோம் என்கிற அச்சமாவது அவர்களை திருத்தும் என்று எதிர்பார்க்கிறோம்”, என்கிறார் அவர்.
இப்படி அதிகப்படியான சிறுநீர் கழிக்கப்படும் சுவர்களுக்கு பூசப்படும் பிரத்யேக மேல்பூச்சு, தன்மீது விழும் எந்த திரவத்தையும் வேகமாக திருப்பியடிக்கவல்லது. அதாவது இத்தகைய சுவர்கள் மீது ஒருவர் சிறுநீர் கழித்தால் அந்த சிறுநீர் கழித்தவர் மீதே அந்த ஒட்டுமொத்த சிறுநீரும் வேகமாக திருப்பியடிக்கப்படும். சிறுநீர் கழித்தவருக்கு அவரது சிறுநீராலேயே குளியல் நடக்கும். மேலும் இதன்மூலம் அங்கே கழிக்கப்படும் சிறுநீர் சுவற்றில் ஊறி அந்த குறிப்பிட்ட சுவர் ஈரமாவதில் இருந்தும் கறையேற்படுவதில் இருந்தும் அதனால் துர்நாற்றம் வீசுவதில் இருந்தும் தடுக்கப்படுகிறது.
குடிப்பவர்கள் தங்கள் குடியை ரசித்துக் குடிப்பதில் தனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என்று கூறும் டெர்மிசி, அதே சமயம் அங்கே வசிப்பவரின் சுவரையும், சுகாதாரத்தையும் அவர்கள் நினைத்துப்பார்க்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கிறார்.
பேட்மென் ரோ பகுதியில் இருக்கும் நஃபீல்ட் ஹெல்த் நிறுவனத்தின் அலுவலக நிர்வாகி மோனிகா. தமது அலுவலகச் சுவர்களில் கழிக்கப்படும் சிறுநீரை சுத்தப்படுத்தும் பணியை அகற்றுவது தினசரி தலைவலி என்கிறார் அவர்.
தினமும் தனது அலுவலகத்தைத் திறந்ததும் முதல் வேலையாக அலுவலகத்தின் பக்கவாட்டில் இருக்கும் தீவிபத்துக்கால அவசர வழியை ஒட்டி கழிக்கப்பட்டிருக்கும் சிறுநீரை சுத்தம் செய்வது தனக்கு மிகவும் சிரமமான செயலாக மாறிவிட்டது என்று அவர் புகார் செய்கிறார். சிறுநீர் மட்டுமல்ல, பல சமயம் வாந்தியும் எடுத்துவைப்பார்கள் என்பது கூடுதல் அவலம்.
“இதையெல்லாம் தண்ணீர் குழாயை வைத்து நீரை பீய்ச்சியடித்து சுத்தப்படுத்துவதற்குள் தலைவலி வந்துவிடும். குறிப்பாக வார இறுதி நாட்களில் அந்த பக்கம் போகவே முடியாத அளவுக்கு துர்நாற்றமெடுக்கும்”, என்பது மோனிகாவின் புகார்.
இந்த புதிய சுவர்ப்பூச்சு குறித்து அவரிடம் சொன்னதும் அவரால் சிரிப்பை அடக்க முடியவில்லை. “ரொம்ப நல்ல யோசனை”, என்றார் அவர்.
இந்தத் தெருவில் கூடுதல் விளக்குகளை பொருத்துவதும் கூட இந்த பிரச்சனையை குறைக்கும் என்பது அவரது கூடுதல் யோசனை.
இந்த திரவத்தை திருப்பியடிக்கும் சிறப்புப் பூச்சை அமெரிக்காவில் இருக்கும் அல்ட்ராடெக் என்கிற நிறுவனம் தயாரிக்கிறது. இதை பூசும்போது கண்ணுக்குத் தெரியாத ஒருவித கவசமாக இந்த பூச்சு சுவர்களை காக்கவல்லது.
பிரிட்டனுக்குள் ஹக்னி உள்ளூராட்சி சபைதான் இந்த சிறப்பு பூச்சை பயன்படுத்தும் முதல் உள்ளூராட்சி நிர்வாகம் என்று கருதப்படுகிறது. இந்த பூச்சுக்காக, முதல் கட்டமாக இரண்டு இடங்களின் பரிசோதனைக்கு ஆயிரம் ஸ்டெர்லிங் பவுண்ட்கள் செலவழிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் எந்த சுவர்களில் இதை பூசப்போகிறோம் என்பதை உள்ளூராட்சி நிர்வாகம் வெளியில் சொல்லவில்லை.
“தன் மேல் வந்து விழும் சிறுநீரை பெய்தவர் மீதே சுவர்கள் திருப்பியடிக்கும்போது சிறுநீர் கழிப்பவர்கள் தானாகவே தெரிந்துகொள்வார்கள்”, என்பது பாதிக்கப்பட்டப் பகுதிவாசிகளின் கருத்து.

நன்றி : http://tamil.thehindu.com/

5 comments:

நெல்லைத் தமிழன் said...

அடடா... பிரித்தானியர்கள் எங்களிடமிருந்து (தமிழனிடமிருந்து) இதைக் கற்றுக்கொண்டிருக்கிறார்களா (அல்லது அங்கே குடியேறிய ஆசிய இனத்தவரா?)

ராஜ நடராஜன் said...

படமெங்கே:)இந்தியாவின் சுதந்திரம் மறுபடியும் போச்சே! அது ஏன ஆண்கள் மட்டும் முட்டுச்சந்தையும்,குட்டி சுவரையும் நாடுகிறார்கள்.

ராஜ நடராஜன் said...

இந்தாங்க டைம்ஸ் பத்திரிகையின் உபயம்!

http://time.com/3735088/hamburg-urination/

இந்த முட்டு சந்து வரும் பதிவர்கள் யாரும் என்னை கோவிச்சுக்க கூடாது! சொல்லிப்புட்டேன்

http://thavaru.blogspot.com/ said...

நெல்லைதமிழன் நம்மிடமிருந்தா கற்றுக்கொண்டார்கள்!!??

http://thavaru.blogspot.com/ said...

ராஜநட..பட்டம் கொடுத்திட்டீங்க போல...படம் கிடையாது நீங்கள் கொடுத்த உபயத்தை போட்டுவிடலாமா.:)

LinkWithin

Related Posts with Thumbnails