Tuesday, September 28, 2010

வாழ்த்து விமர்சனம்கண்களுக்கு  அகப்பட்டு
மனதுக்கு பிடிக்க
வாழ்த்துகளாய் வந்த
வார்த்தைகள்

சிரித்த முகமாய்
உள்ளுக்குள் மகிழ்ந்து
அடுத்த செயலின்வெற்றிக்கு
உழைத்த உழைப்பு

பல பேருடைய  வாழ்த்துகளாய்
தன் செயலின் போக்குகளில்
கட்டுபாடுகள் எல்லாம்
விதிகளாய்…

விதிகளை     மீற பயம்
வாழ்த்துகளில் வாழ்ந்து
விமர்சனங்களில் வாழ
விதிகளை     மீற பயம்

அவர்அவர்களின்கண்பார்வை
பார்க்கும் செயல்
நினைக்கும் எண்ணம்
மிகச்சரியாய்

மனதின் எண்ணங்கள்
இணைவாய் வாழ்த்து
எண்ணங்கள் முரணாய்
விமர்சனங்கள்.

Monday, September 27, 2010

பெரியகோவில் 1000 மாவது ஆண்டு விழா

பெரியகோவில் 1000 மாவது  ஆண்டு விழா  மழைமேகங்கள்  கூடிய மழையுடன் நடந்தது. ஏழு இடங்களில்  நாட்டுபுற நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்க
மக்கள் கூட்டம் ஆட்டு மந்தையாக  மந்தையாக(அதில் என்னையும் சேர்த்து)  பெரியகோவில்  அரண்மனை    என  சுற்றினார்கள்.

மக்கள் கண்படும் பகுதிகளில்  மட்டும் கலர் ஓவியங்கள் அலங்கார  வளைவுகளில்  காசு  வாரியிறைக்கப்பட்டிருந்தது. முழுக்க முழுக்க தஞ்சை நகர மக்களுக்கும் சுற்றுபகுதிகளில் உள்ளவர்களுக்கும் பொழுதுபோக்காய் அமைந்தது தான் உண்மை.

விழாவில்  கரை வேட்டி  கொடி உள்ள வாகனங்களுக்கு   காக்கி சட்டைகளிடம் மதிப்பு அதிகமாய் இருந்தது.
பொதுமக்கள்   வரிசை இல்லாவிடில் நூறு பேர் கொண்ட  குழு குழுவாக அனுமதிக்க பட்டடார்கள்.

முக்கிய மந்திரிகள் யாராவது வந்து விட்டால்  மக்கள் மூச்சு காற்றின் வெப்பத்தில் தகிப்பதை தவிர்க்கதான் முடியவில்லை. ஒரே இடத்தில் இரண்டு மூன்று மணி  நிற்க வேண்டிய அவசியம்.


நுழைவாயில்

பாதுகாப்பு

பிழைப்பு
போக்குவரத்து கட்டுபாடு


வீரன்

அழியும் பராம்பரியம்

Add caption

வீணாகும் உணவு

நாட்டுப்புறகலை ஓவியமாய்

பாழாகும் அரண்மனை

எதிர்பார்ப்பு

படியாத பேரம்

முகப்பு ஓவியம்


விழாவின் நாயகன்


Thursday, September 23, 2010

முயற்சிகை அழுத்திய விசையில்
நீரினுள் 
காற்றடைத்த பந்து

பந்தினுள்ளிருந்து
வெளிவர வழிதேடும்
காற்று

கிடைக்கும் வாய்ப்பில்
பந்து மேல்வரும்
அழுத்திய  விசையால்
திரும்பவும் நீரினுள்

விசைக்கு
எதிர் விசையாய்
கட்டுபாடு
சுதந்திரமின்மை

காலம் வரும்
எதிர்விசை குன்றும்
விழிப்பாய்
காற்றடைத்த பந்து


Wednesday, September 22, 2010

இடிந்த வீடு

காலையில்   கண்விழித்தவுடன் சிறுநீர்  கழிக்க  ஒரு வீட்டிற்குரிய  அங்கலட்சணங்களை  இழந்து கொண்டிருந்த கட்டிடத்தின் ஓரம் ஒதுங்கினான்.

எழுந்து  நின்று சோம்பல் முறிக்கையில் கட்டிடத்தின் நிலைகுத்திய  கண்களின்  வழியே அந்த   வீட்டில்  வாழ்ந்தவர்களின் நினைவில்  மூழ்கிபோனான்.

கிராமத்தினுடைய    சிவன் கோவில் அர்ச்சகருக்காக  ஒதுக்கப்பட்ட    வீடு  அது.  ஐந்து பையன்கள்  ஒரு பெண்   இவர்கள் இருவரையும் சேர்த்து எட்டு பேர்.

கோவிலில் கொடுக்கும்  சம்பளமாய் நெல்  அவர்களுடைய பசியை  போக்கியும் போக்காமலும். செவ்வாய் வெள்ளியில்
கிராம காளிகோவில் தட்டில் விழும் ஒரு ரூபாய் ஐம்பது காசு நாணாயங்கள் தான் அர்ச்சகருடைய அதிகப்படியான வருமானமாக இருந்தது.


அவ்வப்போது  பெரியகோவிலில்  நாள் நட்சத்திரங்களில் கிராம மிராசுகள் செய்யும் அர்ச்சனைக்காக  அவர்கள்  பத்து  ரூபாயும் ஐந்து ரூபாயும் உபரி சம்பளம்.

இதில் ஆறு பிள்ளைகளின் தேவை  நிறைவேறி  படிக்க வைக்கவேண்டும்.   அந்த       கீற்றின் வீட்டின் வழியே வீட்டினுடைய உட்புறம் மழையோ    வெயிலோ     பஞ்சமில்லாமல் மழை பெய்யும் வெயில் அடிக்கும்.
பிள்ளைகளுடைய  கிளிசல் இல்லா உடைகள்  என்பது அபூர்வம்.

எவ்வளோ  கஷ்டங்களுக்கிடையேயும் அந்த அர்ச்சகர் கோவிலுக்குரிய கடமைகள்  அர்ச்சனைகள்  மிகவும் கர்ம சிரத்தையுடன் செய்து முடித்து விடுவார்.

எப்படியோ பிள்ளைகளையும் வளர்த்தார். பெரிய பிள்ளை   தட்டு தடுமாறி  சென்னைக்கு போய் கோவில் ஒன்றில்  அர்ச்சகராக  அந்த வீட்டின் நிலைமை மாறத் தொடங்கியது.

இன்று எல்லோரும் சென்னை க்கு இடம் மாறி மிகவும் நல்லநிலைமையில் உள்ளார்கள். வருடத்திற்கு ஒரு தடவை  வந்து கோவிலுக்கு அர்ச்சனை  செய்து விட்டு போவார்கள்.

பொருளாதாரத்தில் நல்ல நிலைமையில்  இருந்தாலும்  கஷ்டங்களுக்கிடையே இங்கு இருந்த நிம்மதி அங்கு இல்லை என்பது  அவர்களுடைய கருத்தான       இருந்தது.


என்னப்பா ஓரே இடத்துல நின்னுகிட்டு காலையிலே  யோசனை  ...  குரல்  கேட்டு அவனுடைய நினைவுகள் கலைந்தது.

Monday, September 20, 2010

புகைப்பட தொகுப்பு

சகோதரன்.

மருத்துவரிடம் செல்லவேண்டும்.  கடை  வாடகை   வீட்டு வாடகை  பாக்கி தரவேண்டும்.  வீட்டுல  அரிசி வேற தீரப்போவுது. மளிகை  சாமான்   வேற ஒரு லிஸ்ட் போட்டு வைக்சுருக்கா என் பொண்டாட்டி.

இன்சூரன்ஸ் கட்டியாகனும் வண்டி இன்சூரன்ஸ் முடிஞ்சு போச்சு வண்டி பேக் வீல் டயர் எப்ப  வெடிக்கபோவுதுன்னு தெரியல…

புள்ளக்கு பால்டின் வாங்கியாவுனும்   நெற்றியில்  நகங்களால் கீறியப்படி  ஆழ்ந்து   யோசித்து கொண்டிருந்தான்.

அவனால் முடிந்தவரை போராடி சம்பாதித்தாலும் பற்றாகுறையே வாழ்வாக இருந்தது.  தன் காலி்ல் நிற்கவும் அப்பாவின் சம்பாத்தியம்  அண்ணன்களுக்கு உதவிய அளவுக்கு இவனுக்கு உதவில்லை.

குடும்பத்தின் கடைசிபிள்ளையாக மாட்டியதால் மூத்தவர்கள் தேவை முடிந்து இவன் முறை  வருவதற்குள்  அப்பார் மேல் உலகம்  போய்விட தன்னுடைய அம்மாவை  கவனிக்கும் பொறுப்பும் இவன் தலையில் விழ    சொந்தவளர்ச்சிக்கு  தன்னை உட்படுத்தி கொள்ளாமல் இருந்தான்.

அப்பாருடைய   இறுதி சடங்கு தேவைகள்  முடிந்தவுடன்  தான் உண்டு தன் குடும்பம் என ஒதுங்க இவன்  இவன் அம்மாவும் தனியே...

சில வருடங்கள் அம்மாவும்   இவனை  தனியே விட்டு இறந்து விட  சகோதரிகளால் இவனுக்கு திருமணம் செய்விக்கபட்டது. அண்ணன்கள்  திருமணத்தில் கலந்து க
ொண்டார்கள்.


இவனால் முடிந்தவரை கஷ்டப்பட்டு உழைத்தும் பற்றாகுறை  வாழ்வு தான் நிச்சயம். கொடுத்து உதவ கூட ஆள்கள் கிடையாது.

யோசனையான முகம் நிரந்தரமானது.

யோசனை யாய் தன்னுடைய  கடையில் உட்கார்ந்திருந்தான்.
அவனுடைய  கைப்பேசி ஒலிக்க...

 உம் சொல்லுகண்ணா   .....என்றான்.

என்னய்யா.. என்று விசாரிக்க

அண்ணன் பேசுனாரு...

அவரோட குடும்பத்தோடு கோவிலுக்கு போறாராம்  ஏ.சி.வசதி உள்ள சுமோ   ஒன்று வேண்டுமாம்  டிராவல்ஸ்ல   விசாரிக்க சொல்லுறார் என்றான்.

Thursday, September 16, 2010

குல தெய்வ பூசைநாளைக்கு குலதெய்வத்துக்கு  கடா வெட்டி    பூச போடுறாங்க கோயிலுக்கு வந்துருப்பா..

ஆகா …இன்னும் ரெண்டு நாள்ல புரட்டாசி வரப்போவுது கிடைக்கிற வாய்ப்ப பயன்படுத்தி கிட்டாதான். இன்னும்  ஒரு மாசத்துக்கு ஒன்னும் சாப்பிட முடியாது நாளைக்கு போய்  சாப்பிட  வேண்டியது தான்  என்று நினைத்தவாறே…

சரி வர்றேண்ண   என்றான்.

மறுநாள்  காலை   சாப்பாட்டு நேரத்துக்கு  போனா  எதாவது நினைத்து கொள்வார்களே  … ஒரு மணி நேரம் முன்னே போய் சேர்ந்தான்.

அவன்போன  சமயம்  பூசை ஆரம்பமாகும் நேரம். தாள வாத்தியங்கள் ஒலிக்க ஆரம்பித்தது.

கிராம  தேவதைகளுக்கு  உரித்தான    வாத்திய கருவிகள் உருமி மேளம், உடுக்கை ,  மணி சப்தம்  எல்லாம் ஒன்று சேர்ந்து  அந்த இடத்திலுள்ளவர்களை     பூசையில் கட்டி போட்டிருந்தது.

ஆடு வெட்டியவுடன்  சமைப்பதற்காக  சமையல்காரர்கள் முன்னேற்பாட்டில் மசாலா வாசனை   மூக்கை துளைக்க அவன்  புத்தி பேதலித்து  பூசாரியின் பாடலை கவனித்தான்.

நமச்சிவாய  வாழ்க… என்று பாடினார்   பூசாரி.

உள் இருப்பது அம்மன்.

துணுக்குற்று நமக்கு அம்மானா தெரியற தெய்வம் அவருக்கு  சிவனா   தெரியும் போல  நினைத்தவாறு   மீண்டும்  அவர்பாடலை   கவனிக்க…

ஏறு மயில் ஏறி  விளையாடும் முகம் ஒன்று..  என்று ஏற்ற இறக்கங்களுடன்  முருகன் பாடலை   பாட ஆரம்பிக்க…

சத்தியமா  அவனக்கு அம்மனாத்தான் தெரிஞ்சுது.
ஆனா    பூசாரிக்கு..

பலமான   பின்னனி இசையால் இவருடைய  இத்தகைய பாடல்கள்  மத்திரமாய் வெளிப்பட்டு கொண்டிருந்தது.

டேய் ..அம்மனுக்கு நேரா  ஆட்ட கட்டாத  வீரன்  சாமி கிட்ட கொண்டு போடா  என்ற சத்தம் கேட்டு கொண்டிருந்தது.

Tuesday, September 14, 2010

ஓனானின் உள்அறிவு
மரங்களில் ஏறி
இலைகளில்  மறைந்து
காகங்களின்  தாக்குதலுக்கு
தப்பித்த ஓனான்கள்

காகங்களின் பறத்தலுக்கு
ஓனான்களின் ஓட்டம்
பலவீனம்

இலைகளில் மறைந்து
தப்பித்த ஓனான்களின்
ஓட்டம் நிற்காமல்
இன்னொரு புதர் நோக்கி

சிறுசமவெளி கடக்க
உயிர் உண்டு சொல்லிய
ஓனானின் உள்அறிவு
ஓட்டமெடுத்த  ஓனான்

நாற்கால்கள் பரப்பி
வேகமெடுக்கையில்
காந்திருந்த காகம்
பறந்து கொத்த...

இன்னும் வேகம்
உயிர் தேவை  ஓட....

ஊமை வெயிலில்
காய்ந்த உடல்கள்.

Thursday, September 09, 2010

அவர்களது நியாயம்

எடுத்த மோட்டார் சைக்கிள்  நிலைதடுமாறி ஓரமாய் சென்று கொண்டிருந்த சிறுவன்  மீது மோதி அவனது  தொடைகளில் ஏறி இறங்கியது.

மோட்டார் சைக்கிளை   மிதித்து  கிளப்பி  கொண்டிருந்தாள் சமான்யமாக கிளம்ப மறுத்தது.  பல முயற்சிகளுக்கு  அப்பால் கிடைத்த வெற்றியி்ல் கிளப்பியவுடன் சிறுவன் மீது மோதியப்படி நின்றது.

அந்த பெண் நிதானப்படுத்தி நின்றுகொள்ள வண்டி மட்டும் கீழே சாய்ந்தது.

சிறுவனை   நோக்கி திட்டி கொண்டே  பெண் முன்னேற  சம்பவத்தை  பார்த்தவர்களுக்கு ஆச்சர்யம் ஆத்திரம்.
தவறு முழுக்க இவள் பேரில் அவளை  நெருங்கினார்கள் திட்டினார்கள்  சிறுவனை    ஏற்றி கொண்டு  மருத்துவரிடம்  போய் காட்ட சொன்னார்கள்.

அவள் முகம் மாறியது.  பணம் இல்லையே  என்று அவள் சொல்லியும்   அதெல்லாம் தெரியாது  சிறுவனை   மருத்துவரிடம் காட்ட வேண்டும் எண்ண  செய்ய..

 அப்படியே  நின்று கொண்டிருந்தாள். நல்லவேளையாக சிறுவனுக்கு ஒன்றும் பெரிதாக அடியில்லை. பாத்து போம்மா என்று கடுப்புடன்   பேசிவிட்டு நகர்ந்தார்கள்.

சிறுவன் கால் தாங்கியப்படியே நடந்தான். இவள் வண்டி தள்ளி கொண்டே நடந்து சென்றாள்.

சாதாரண   மக்களை  நினைக்கையில் மனது கனமானது. சிறுவனை போல் அத்துனை  வலிகளை  தாங்கி கொண்டு  தன்னுடைய  வாழ்க்கையை  ஓட்ட வேண்டிய   ஓட வேண்டிய நிர்ப்பந்தம்.

ஒரு ஊ ர் ஒரு குழு  தொடர்வன்முறைக்கு உள்ளாகையில்  தப்பிக்க முடியா   பூனையின் ஆக்ரோசமாய்  வன்முறைக்கு தயாராகுதல் என்பது தவிர்க்க முடியா நிகழ்வு.

ஆனாலும் அவர்களது நியாயம் .....

நினைத்து முடிக்கையில் எட்ட தூரம் வண்டி தள்ளிசெல்லும் பெண் அடிப்பட்ட சிறுவன்   நடந்து செல்வது கண்களுக்கு தெரிந்தது.

Thursday, September 02, 2010

கருத்துகள்


என்  வாழ்வின்
நடக்கா செயல்கள்
என்  பார்வை
ஒன்று
மற்றவர்களின் பார்வை
வெற்றி பெறா
என்  வாழ்வியல்
உள்ளே
எத்தனை கருத்துகள்
இரக்கமாய்
விதியாய்
செயலின் விளைவாய்
மற்றவர்கள்
கருத்து கூறும்
என் வாழ்வு
இயல்பாய்..

Wednesday, September 01, 2010

இக்கரைக்கு அக்கரைகுழப்பங்களுடன் நகரும் வாழ்வு இக்கரைக்கு  அக்கரை பச்சைக்காக அலையும் வாழ்வு வாழ்க்கையின் குறிகோள் இதுவென்று அடைந்தவர் எத்தனை பேர்?

அவன்  சம்பாதிக்கிறான்  இவன்  வீடு கட்டிவிட்டான்  நாள்தோறும் மற்றவர்களை    ஒப்பிட்டு  செல்லும் வாழ்வில் கிடைக்கும் ஒன்றிரண்டு  மகிழ்ச்சிகளை  இழந்து விடும் அவலம்.

எங்கு  புத்தி போயினும்  இல்லாதவை   பற்றியே நினைக்கும் உடும்பு பிடி வாழ்வு. முகமும்  உர்ரென்று…

சமூகத்தின் அவமானங்களை    சந்தித்து  மனம்  கூனி குறுகி நம்முடைய வாழ்விற்காக மற்றவர்களை  குறைகூறும் பண்பு.
வாய்ப்புகள் இன்மையால்  வீணாகும்   திறமை. தேவை   வினை  ஊக்கி  வெந்த   புண்ணில்  ஊசி குத்த பலப்போ்  ஆனால் ஊக்குவிப்பிற்கு….

இதையெல்லாம் தாண்டிதான் வரனும் தன்னம்பிக்கை பேசும். பின்னனியில்   தூக்கி விடும்ஏணிகளுடன்
நிறைய பேரின் பேச்சுதன்னபிக்கை.

ஒவ்வொரு செயலும்   நபரும் வள்ளுவனின்  வாக்கு ப்படி தகுந்த சந்தர்ப்பம்     காலம்  வரும் வரை   செயலின் வெற்றியோ  அல்லது நபரின் வெற்றியோ   பல்வேறு  வலிகளுக்கும் விமர்சனங்களுக்கு  உள்ளாக வேண்டிய ஒன்றே..

அதுவரை இக்கரைக்கு அக்கரை பச்சையே.

LinkWithin

Related Posts with Thumbnails