Wednesday, July 31, 2013

இம்முறை விவசாயம் ??!!


இரண்டு நாட்களில் மேட்டூர் அணை திறக்கபோகிறார்கள். இம்முறைசம்பா ஒரு போகம்  நடலாம். நாற்று விடுதலுக்கான பணிகள் விரைவாக ஆரம்பிக்க வேண்டும்.

பருவமழை இந்தவருடம் மிகவும் கடுமையாக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால்  மழை வெள்ளத்தை சமாளிக்கும் வகையில் நெல் ரகம் தேர்ந்தெடுக்கவேண்டும் என  விவசாய பொதுமக்கள் பேசி கொள்கிறார்கள்.

வறண்ட அணை    நிரம்பியது மகிழ்ச்சி ஆனாலும் பருவமழையின் எதிர்பார்ப்பில் கவலை கொள்ளவைக்கிறது.

சென்றமுறை கையைகடிக்காமல் வாங்கிய கடனை  அடைத்தால் போதும் வைத்த நகையை திருப்பினால் போதும் விளைந்த பயிர் விளையுமா விளையாதா என்ற மன பட்டிமன்றம் நடந்து கொண்டே இருந்தது.

கடன்பட்டவர்கள் பாதி கடன் அடைத்தவர்கள் பாதி என்று இருக்க விளைந்த போக காய்ந்தது மீதி என்று இருந்தது.

நிலத்தடி மோட்டார் வைத்து விவசாயம் செய்தவர்கள் சென்றமுறை சம்பாதித்து கொட்டினார்கள்.

இந்தமுறை குறுவை  ஒன்றும் சரியாக இல்லை ஏதோ விளைந்தது சில இடங்களில் நன்றாகவும் விளைந்தது.

மனித உழைப்பை தாண்டி இயற்கைகட்டுபாட்டில் தான் எல்லாமே என்று திரும்பவும் திரும்பவும் நிரூப்பிக்கப்படுகிறது.

மனித உழைப்பில் தொடங்கும் விவசாயம் இயற்கையின் ஒத்துழைப்பில் தான் அதனுடைய வெற்றி.

ஆடிமாதம் எல்லாம் டல்லடிக்க காற்று பிய்த்து எடுக்கிறது.

நடவு பணிகள் தொடங்கினால் டாஸ் மாக் மதுபானகடைகள் நிரம்ப கல்லாகட்டும். விவசாய ஆட்களுக்கு தட்டுபாட்டில் குவார்டர் பாட்டில்கள் பேரம் பேசப்படும்.

ஒரு போக விவசாயம் இம்முறை நல்லமுறையில் தொடங்குகிறது.Monday, July 29, 2013

உலகின் முதல் கப்பல் வடிவிலான ரிசார்ட்

தென் கொரியா ஜியாங்டன்ஜின் கடற்கரை நகரில் உலகின் முதல் கப்பல் வடிவிலான சன் குருயீஸ்  என்ற ரிசார்ட்  அமைந்துள்ளது.

165 மீட்டர் நீளம் 45 மீட்டர் உயரம் கொண்டது. 211 அறைகள் கொண்ட இந்த ரிசார்ட்டில்  ஹோட்டல்  ரெஸ்ட்ராண்ட்  நைட்கிளப்  நீச்சல் குளம்  என அனைத்து வசதிகளும் உள்ளது.Saturday, July 27, 2013

அன்புடன் அப்பா... (பகிர்வு)

நகைச்சுவை உணர்வு என்பது ஓர் அருமருந்து. என் அப்பா எனக்குக் கொடுத்த சொத்துகளில் விலை மதிக்க முடியாததும் நான் பொக்கிஷமாகக் கருதுவதும் அதைத்தான். வாழ்க்கையில் இடர்கற்கள் வரும்பொழுதெல்லாம் சிரிக்க முடிந்தால் சரியாமல் இருக்கமுடியும்.  "அப்பாக்களின் ஊர்வலம்' பார்ப்போம்.
 ஹுமாயூன் இளைஞராக இருக்கும்பொழுது கடுமையாக நோய்வாய்ப்பட்டார். இறந்து விடுவாரென்றே அவர் தந்தை மொகலாய சக்ரவர்த்தி பாபர் பயந்தார். அவர் சந்தித்த ஒரு மகான், ""உன்னிடம் இருக்கும் விலை மதிக்க முடியாத ஒன்றைத் தியாகம் செய்தால் மகன் பிழைப்பான்'' என்றார்.
  ""உன்னிடம் இருப்பதில் விலை மதிக்க முடியாதது கோஹினூர் வைரம், அதைக் கொடுத்து விடு'' என்றார். அதற்கு பாபர் பதிலளித்தார், ""கோஹினூர் என் மகனுடையது. என்னுடைய சொத்தை அல்லவா நான் தியாகம் செய்ய வேண்டும்? ஏன் அரசாங்கத்தையே நான் தியாகம் செய்தால்கூட அது பெரிதல்ல. என்னுயிரை நான் தியாகம் செய்கிறேன் என்னருமை மகனுக்காக, அதுதான் விலை மதிக்க முடியாதது''.
  மகனின் அருகே நின்று ""அல்லாவே, என் உயிரை எடுத்துக்கொள், என் மகனுடைய உயிரைத் தந்து விடு'' என்றார். சிறிது நேரத்தில் பாபர் கீழே விழுந்தார், படுத்த படுக்கையாகிவிட்டார். ஹுமாயூன் பிழைத்துக் கொண்டார். மன்னர் பாபர் மறைந்தார். பாபரின் மனைவி என்ன செய்தார் என்ற தகவல் இல்லை. இந்த அப்பாதான் பிள்ளைக்கு உயிரைக் கொடுத்தார் என்று சரித்திரக் கதை சொல்கிறது.
 இராம காதையைப் பார்ப்போம். மகனைப் பிரியப்போகிறோம் என்று மன்னர் தசரதன் அரற்றுகிறார். ""புகழின் புகழே'', ""மெய்யின் மெய்யே'' - மகன் காட்டுக்குச் சென்ற பின் உயிர் தாங்குமா, இனி எப்படி உயிர் வாழ்வது என்று கதறுகிறார். பிறகு ராமரும், தம்பியும் மிதிலை பெற்ற தங்கமும் காட்டிற்குச் சென்றுவிட்டார்கள் என்று அவரிடம் தகவல் கூறும் பொழுதே உயிர் பிரிகிறது. தாயார் கோசலை 14 வருடங்கள் காத்திருந்து மகன் திரும்ப வருவதையும் பார்க்கிறாள். தசரதனைக் குற்ற உணர்வு கொன்றது என்று சொல்லாதீர்கள். அதுவும் இருக்கலாம். ஆனால் புத்திர சோகம் என்றாலே தசரதன்தான் மனதில் நிழலாடுவார், கோசலை அல்ல. தாய்மார்கள் கோபம் வேண்டாம். சமன் செய்து சீர்தூக்கும் கோல் போல தாயார்களின் மகிமையைக் கூறிவிட்டு தந்தையைப் பற்றியும் கூற வேண்டும் இல்லையா?
 நிகழ்காலத்திற்கு வருவோம். இரண்டு நேர்காணல் தேர்வில் நான் தேர்வு செய்பவர்கள் குழுவில் இருந்தேன். ஒன்று முன்சீப் தேர்வுக்கானது. இன்னொன்றில் மாவட்ட நீதிமன்றங்களின் தாற்காலிகக் கணினி அலுவலர்கள்.
 முதலில் சட்டம் பற்றியும், பின் பொது அறிவு, நிகழ்காலச் சம்பவங்கள் பற்றியெல்லாம் கேட்டுவிட்டு இறுதியில் சில வித்தியாசமான கேள்விகள் கேட்போம்.
 முன்சீப் தேர்விற்கு வந்த ஒரு பெண்ணிடம் கேள்வி கேட்டேன். ""நீங்கள் தேர்வு செய்யப்பட்டு முன்சீப் பதவி ஏற்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நீதிமன்றத்தில் அமர்கிறீர்கள். ஒரு பெரிய வழக்கறிஞர், கப்பல் போல ஒரு காரில் வருகிறார். சுற்றி அவருடைய இளையோர் படை. உங்களுக்குத் தெரியும் உங்கள் ஒரு மாதச் சம்பளத்தைவிட ஒரே நாளில் அவர் வாங்கும் தொகை அதிகம் என்று. அப்பொழுது உங்களுக்கு என்ன தோன்றும்? இந்த வேலைக்குப்போய் வந்துவிட்டோமே என்றா?''
 அந்தப் பெண்ணின் கண்களில் கோபம் கலந்த கண்ணீர் மின்னியது.
 ""மேடம், என் அப்பா நான் நீதித்துறைக்கு வந்து சிறப்பாகப் பணியாற்ற வேண்டும் என்று ஆசைப்பட்டார். அவர் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள். அரசாங்க சம்பளத்திற்கு மேலே ஒரு ரூபாயை அவர் கை தொட்டது கிடையாது. என்னையும், என் சகோதரிகளையும் நன்றாகப் படிக்க வைத்தார். எனக்கு எப்படி மேடம் அப்படியெல்லாம் தவறான எண்ணம் தோன்றும்? என் அப்பா அப்படி என்னை வளர்க்கவில்லை''.
 சபாஷ் அப்பா! நம் பெற்றோரை மிஞ்சியது இல்லை. இந்த அப்பா நன்னெறியை வாழ்ந்து காட்டியுள்ளார்.
 இன்னொரு பெண். இன்னொரு தேர்வு. இன்னொரு அப்பா. இன்னொரு கேள்வி.
 ""உங்களுக்கு ஆதர்ச ஆணோ, பெண்ணோ யார்?''
 ""அப்படி யாரும் தோன்றவில்லையே''
 ""ஒருவருமே இல்லையா? இவர் மாதிரி வாழ வேண்டும். இவர் அறிவுரைதான் என் மந்திரம் இப்படி...?''
 ""ம்ம், என் அப்பா மேடம்''.
 ""வெரிகுட்''
 ""அவர் ஒரு தொழிற்சாலையில் வேலை செய்கிறார்''
 ""ம்ம்''.
 ""என் அப்பா, தன் வேலையைக் கவனத்துடன் கருத்தாய் செய்வார். என்னிடம் இங்கு வருவதற்கு முன் சொன்னார் - உனக்கு இந்த வேலை கிடைக்க என் வாழ்த்துகள். அப்படிக் கிடைக்கவில்லை என்று வைத்துக்கொள். கார்ப்பரேஷனில் தெரு கூட்டும் வேலை கிடைத்தால் உன்னைவிட சிறப்பாக யாரும் அந்த வேலையைச் செய்ய முடியாத அளவிற்கு நீ செய்ய வேண்டும் என்று. இதை நான் மறக்கக்கூடாது, மறக்கவும் மாட்டேன்''.
 சபாஷ் அப்பா நெ.2! செய்யும் தொழிலே தெய்வம் என்று பெண்ணுக்கு உணர்த்திவிட்டீர்கள். அம்மா அன்பைக் காட்டுவதுபோல அப்பாவால் முடியாமல் போகலாம். அதற்குப் பல காரணங்கள். உடல் ரீதியாக, மனோதத்துவ ரீதியாக இருக்கலாம். இதனாலேயே அம்மாக்கள், பெற்றோர்கள் போட்டியில் சூப்பர் ஸ்டார் கோப்பையைப் பெற்றுவிடுகிறார்கள். அப்பாக்கள் குறைந்தவர்கள் இல்லை என்பதைக் காட்டத்தான் திருச்சிக்கு அருகில் "ஒரு அப்பா' வந்து பெண்ணுக்குப் பிரசவம் பார்த்தார். அவர் "நான் தந்தை மட்டுமல்ல, தாயுமானேன்' என்று உலகத்திற்குக் காட்டினார்.
 எவ்வளவு தந்தைகள் நிலத்தை விற்று குழந்தைகள் படிக்க வேண்டுமென்று தங்கள் வாழ்க்கை அந்தஸ்தைக் குறைத்துக் கொள்கின்றனர். இந்த வாழ்க்கையின் குரூர நெரிசலில் கசங்கி குனிந்து ஒடுங்கிப் போகிறார்கள். ஆண்கள் அழுவதில்லை, அதனாலேயே அவர்களுடைய சோகங்கள் வெளிவருவதில்லை.
 அம்மாக்களுக்கு மக்கள் செய்வது பிடிக்கவில்லை என்றாலும்கூட ""அப்பாவுக்குப் பிடிக்காது'' என்றுதான் சொல்வார்கள். இதில் இரண்டு விளைவுகள். "அம்மா நல்லவள், அப்பா தான் தடங்கல்' என்று பிள்ளைகள் எண்ணலாம். இன்னொன்று அப்பாவுக்கு ஏன் பிடிக்கவில்லை. மகன் / மகள் தன் முடிவை ஏன் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று சுமுகமாகப் பேச ஒரு இடம் ஏற்படுகிறது. இதனாலேயே மக்கள் அம்மாவிடம் எடுத்துக்கொள்ளும் உரிமையை அப்பாவிடம் எடுக்க மாட்டார்கள்.
 அப்பாவிடம் கொஞ்சம் பயம் கலந்த மரியாதை. உதாரணம், பிள்ளை சிகரெட் பிடிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்பா அப்பொழுது வருகிறார். உடனே அந்த சிகரெட் துண்டைத் தரையில் தேய்த்து, இருமுறை கைகளில் ஊதி நாற்றம் வருகிறதா என்று பார்த்து, வளையமிடும் புகை வட்டங்களை கைகளால் விரட்டி... ""அட, வாங்கப்பா! எப்ப வந்தீங்க?'' (இவ்வளவு சிரமம் ஏன்? அந்த சிகரெட்டை ஊதித்தான் ஆக வேண்டுமா என்ன?) இப்படி தந்தையிடம் காலம் காலமாக இருந்து வரும் மரியாதை எல்லை இன்று "இல்லை'யாகிக் கொண்டிருக்கிறது. அப்பாக்கள் கவனம் - நீங்கள்தான் உங்கள் குழந்தைகளின் கண்களில் "ஆதர்ச ஆணாக' இருக்க வேண்டும்.
 இப்பொழுது ஒரு கடிதத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். "ஒன்-அப்' என்று ஒரு ஆங்கிலப் பத்திரிகை. இங்கிலாந்தில் பிரசுரமாகிறது. அது விவாகரத்தினாலோ, மரணத்தினாலோ அல்லது வேறு காரணங்களாலோ தனியாகக் குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களுக்காக நடத்தப்படுகிறது. அபிஜித் தாஸ் குப்தா என்ற அப்பா எழுதிய கடிதம். தலைப்பு ""விவாகரத்தினால் தனியாகிப் போன இந்திய அப்பா''. அதிலிருந்து சில பகுதிகள் இங்கே:
 ""அவள் என்னைவிட்டு ஏன் போனாள் என்று தெரியும். ஆனால், குழந்தைகளின் காப்புரிமை வேண்டும் என்று ஏன் கேட்கவில்லை என்று புரியவில்லை. நம் நாட்டு நீதிமன்றங்களில் அம்மா காப்புரிமை கேட்டால் எளிதாகக் கிடைத்துவிடும்''.
 ""ஆறு வருடங்கள் பழகி, பின்பு மணந்து, பதின்மூன்று வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த பின் போய்விட்டாள். ஒன்பது வருடங்கள் ஆகின்றன.  இந்த ஒன்பது வருடங்களில் நான் என் வேலையையும் செய்துகொண்டு என் பெண்ணையும், பிள்ளையையும் வளர்த்துவிட்டேன். இன்று என் பெண்ணுக்கு வயது 21''.
 ""அப்பொழுதெல்லாம் காலை நேரம்தான் கடினமான நேரம். கண் விழித்தவுடன் என் 6 வயதுப் பையனும், 12 வயதுப் பெண்ணும் அம்மாவைத்தான் தேடுவார்கள்''.
 ""என் வாழ்க்கை எனக்கு நிறைய ஆத்ம திருப்தியைக் கொடுத்துள்ளது. பிள்ளையைத் தோளில் தூக்கி பள்ளிக்கூட பஸ்ஸில் கொண்டுவிட்டு, வளர்ந்துவரும் பெண்ணுடன் ஓய்வு நேரம் செலவழித்து...''
 ""என் மனைவியை, குழந்தைகளைப் பார்க்க அனுமதிப்பது என்று முதலிலேயே முடிவு செய்து கொண்டேன். அவள் வருவாள். கஷ்டமாகத்தான் இருக்கும். இருந்தும் என் குழந்தைகளுக்காக. ......அவர்கள் தங்கள் பெற்றோர்கள் சிண்டைப் பிடித்துச் சண்டை போடுவதைப் பார்க்கக்கூடாது என்பதற்காக''.
 ""நல்ல பொறுப்புள்ள குழந்தைகளாக அவர்களை வளர்த்துவிட்டேன். இன்றும் அவள் வருகிறாள். நண்பர்களாகத்தான் இருக்கிறோம்''.
 இதைப் படிக்கும்பொழுது எனக்குத் தோன்றியது, ""நீ ஆண்பிள்ளை அழக்கூடாது'' என்று சொல்வது எவ்வளவு தவறு என்று. இந்தத் தந்தையின் தலையணை நிச்சயம் நனைந்திருக்கும். அவர் மனைவியைத் திட்டாதீர்கள். பாதிக்கப்பட்டவரே நட்புடன் நடத்தியிருக்கிறார்  நமக்கென்ன? தனியாக குழந்தைகளை வளர்ப்பது எளிதல்ல. அதுவும் ஒரு தந்தைக்கு கஷ்டம் அதிகம். மதிப்பெண்கள் கூடுதலாகக் கொடுக்க வேண்டும். முதுமையிலும் கூட தனியாகிப் போகும் தந்தையின் தனிமை எனும் வாளுக்கு கூர்மை அதிகம்.
 ஒரு "பழைய பழைய' விளம்பரப்பாட்டு நினைவுக்கு வருகிறது.
 ""அப்பா, அப்பா கடைக்குப் போறியா?
""ஆமாங்கண்ணு, என்ன வேணும் சொல்லு''
 தந்தையைப் போற்றுதும்!

நன்றி : தினமணி

Friday, July 26, 2013

சுடுமணலில் நடக்கும் வாழ்வு

காரணம் தெரியா
கோபம்
முகம் சுளித்து
வேகமாய்
உமிழ்ந்த வார்த்தைகள்
இளம் வெயிலின்
காலையில்
எதிராளியின்
மனது குமுறியது
தன் குற்றம்
தெரியாது தடுமாற்றம்
பதில் பேசா
மௌனமாய் நகருகையில்
மனது வலித்தது
தன்பக்க நியாயங்களை
வேக வேகமாய்
எடுத்துரைக்க
செய்குற்றம்
புரிந்தது

இருவருக்கும்
அன்றைய பொழுது
உப்பு இல்லா
உணவாய்
சப்பென்றிருக்க
ஆர்வம் இல்லா
பேச்சுகள்
புன்னகையை மறந்த
உதடுகளாய்
சுடு மணலில்

நடக்கும் செயலாய்....

Thursday, July 25, 2013

தெருவெல்லாம் குடைகள் பந்தலாக....

போர்ச்சுகல் நாட்டில் அக்யுடா நகரின் தெருக்களில்  கோடையை சமாளிப்பதற்காக தெருவெல்லாம் கலர் கலராக குடைகளை  விரித்து வைத்து பந்தலாக்கியுள்ளார்கள்.


Wednesday, July 24, 2013

புகைப்படதொகுப்பு

தன் வேலை அவசரம் பையனை இழுத்துகொண்டு செல்லும் தந்தை

பேத்தியின் பள்ளி சுமையை சுமக்கும் பாட்டி

மிதிவண்டி மிதிவண்டியை சுமக்கிறது.

பசி தீர்க்கும் ஆவலில்....

ஊன்றுகோலில் புறப்பாடு

சவாரியில் சுகம்

வீடு திரும்புகையில் விளையாட்டு

Tuesday, July 23, 2013

புளியம் பூ தொக்கு..ஆகா என்ன ருசி..!!??

அன்றைய  சில்லுகோடு ஆட்டம் கலைந்தவுடன் நாளைக்கு என்ன செய்யவேண்டும் என்று தீர்மானிக்க ஒன்று கூடினார்கள்.  நாலைந்து சிறுவர்களும் சிறுமிகளும்…

என்ன செய்யலாம் என்று யோசித்தவாறே அந்த குழுவை வழிநடத்தும் பையன் அண்ணாந்து பார்த்தான்  மேலே சாரை சாரையாய் பூ மொக்குமாய் புளியம்பூ தொங்கி கொண்டிருந்தது.ஆ…டேய்…நாளைக்கு புளியம் பூ தொக்கு செய்யலாம்டா..என்று கேட்க

ஹய்…செய்யலாமே…

யார்…யார்..என்னென்ன கொண்டு வருவீங்க…சொல்லுங்கப்பா என்றது தலைமை டவுசர்.

நான் உப்பு

நான் பட்டமிளகாய்

நான் கொட்டாங்குச்சி

எல்லாம் கரெக்டா நாளைக்கு பதினோரு மணிக்கு வந்துடுங்க..

மறுநாள் சிறிது முன்னயும் பின்னயுமாய் ஒன்று கூடிய சிறுவர்கள்.

தாங்கள் எடுத்து வர ஒப்புகொண்டதை சொன்னப்படி எடுத்து வந்திருக்க தலைமை  டவுசர் வர காந்திருந்தார்கள்.

தலைமை டவுசர் வந்ததும் உப்பு பட்டமிளகாய் கொட்டாங்குச்சி கொடுக்கப்பட…

டேய் ..வாங்கப்பா…புளியம் பூ பறிக்க…

புளியம் மரங்கள் நிறைந்தப்பகுதிக்கு சென்று  அவர் அவர் உயரத்திற்கேற்றவாறு பறித்து ஒன்று சேர்த்தார்கள்.

எல்லோரும் வாங்க  தலைமை டவுசர் கூப்பிட…

எங்க போவோம்?  என்று எதிர் கேள்வி கூட்டத்திலிருந்து கேட்கப்பட…

அந்த கொட்டாய் தான்.

விவசாயபணிகளில் தேவையில்லாமல் பாரவண்டி அந்தகொட்டகையில் நிப்பாட்டியிருந்தார்கள்.

வாங்க போவோம் என்று பாரவண்டியில்  ஏறி எல்லோரும் உட்கார்ந்தார்கள்.

டேய் ..இந்த கொட்டாங்குச்சியில கொஞ்சமா தண்ணி…சப்பட்டையாய்  கருங்கல் ஒன்னு எடுத்து வா…

ஓடினான்..உடனே திரும்பினான் .

பாரவண்டியில உள்ள பலகை துடைக்கப்பட்டு புளியம் பூக்கள் மொட்டுகள் அத்தனையும் ஒன்று சிறிதாய் அரைத்தார்கள்.

நசுங்கிய பூக்கள் சக்கையாய் ஆனது .

போதும்..போதும்…

இந்தா உப்பு மிளகாய் ரெண்டையும் சேத்துக்கோ…

அவைகளையும் சேர்த்து இன்னும் அரைத்தார்கள்.

துவையல் பதத்துக்கு முன்னாடி நிலைமையில் மசிந்தும் மசியாமலும்….

நிப்பாட்டு..போதும்.

என்று சொல்லியப்படியே…தலைமை டவுசர்   கொட்டாங்குச்சியில்  அரைத்த  புளியம் பூ தொக்கை எடுத்து வைத்தது.

ரைட்…வாங்க …சாப்பிட…

என்று எல்லோரும் கையிலும்  உரப்பு புளிப்பு உப்பு ருசிகலந்த புளியம் பூ  தொக்கு  கொடுக்கப்பட்டது.


ஆனால் இன்று  சிறுவர்கள் இருக்கிறார்கள் புளியம் பூ தொக்கு தயாரிக்கபடவில்லை.

Sunday, July 21, 2013

பாட்டு பாடினால் இதயத்துடிப்பு சீராகும் (பகிர்வு)

மக்கள் இன்றைய பரபரப்பான சூழலில் தங்களை தளர்த்தி கொள்வதற்கு நேரம் ஒதுக்குவதே இல்லை. மூளையை எப்போதும் இயக்கத்திலே வைத்திருக்கின்றனர்.
பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் மக்கள் அதற்கெல்லாம் நேரம் ஒதுக்கி மனதை அமைதிப் படுத்துவதே இல்லை. பெரும்பாலானோர் வாயை திறந்து பாடுவதற்கு வெட்கப்படுவர். இதனால் ஏராளமான விஷயத்தை இழக்கின்றனர்.
நாள் முழுவதும் வாயை திறந்து பேசாமல் இருந்தால், வாய் ஒருவித துற்நாற்றம் ஏற்படுவதை நீங்கள் உணர்த்திருக்கிறீர்களா? சிலர் வாயை திறந்து பேசுவதற்கும் தயக்கப்படுவர். இதனால் மன அழுத்தத்திற்கு ஆளாகலாம்.
மனதில் உள்ள அழுத்தங்களை போக்க வாயை திறந்து மற்றவர்களிடம் பொது விஷயத்தையோ, நல்ல தகவல்களையோ பரிமாறி கொள்ளலாம். அதற்கு வாய்ப்பு இல்லையெனில் நமக்கு பிடித்த பாடல்களை பாடலாம்.
பாடுவதினால், இதய துடிப்பு சீராக துடிக்கின்றது. இதயத்திற்கு செல்லும் நரப்புகளின் இரத்த நாளங்கள் விரிவடைந்து, சரியான விகிதத்தில் இரத்தம் செல்கின்றது. இதை தவிர மூளைக்கு செல்லும் நரம்புகளும் புத்துணர்ச்சி அடைந்து உற்சாகம் ஏற்படுகிறது.
அதனால் தான் என்னவோ? குழந்தைகள் பள்ளிக்கு வந்ததும், அனைவரும் ஒரே இடத்தில் கூடி இறை வணக்கம் செய்கின்றனர். ஒருங்கிணைந்து பாடும் போது இதயம் சீராக துடித்து, மூளை புத்துணச்சி அடையும்.
பாடும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இதயம் நன்றாக இயங்குவதோடு மன அமைதியும் பெறும்.

நன்றி : தினமணி

Saturday, July 20, 2013

சோடு

முதிர்ந்த நெற்மணிகளின் கதிர்கள் அறுவடை  ஆகின வயல்  மூச்சு வாங்க ஓய்வெடுக்க தனித்து விடப்பட்டது.

சில வயல்களில் கதிர் தாள்கள் அப்படியே கிடந்து காய்ந்தது. வயல்கள் மஞ்சள்வெண்மையாய்  தெரிய  இன்னும் சில வயல்கள்   நிலமண்ணின் நலனுக்காக கோடை உழவு செய்யப்பட்டு கருப்பாய் தெரிந்து.

தூரத்து பார்கையில் வெண்மை கருப்பு கருப்பு வெண்மையாய் வயல்களின் அளவை  வரப்பு வேறுப்படுத்தி காட்டி கொண்டே பரந்தவெளியாய்  தன்னை வயல்கள் உருவகப்படுத்தி கொண்டது.


மாலை நேரங்களில்  வயல்கள் ஆரம்பிக்கும் ஒரு முனையில் நின்று பார்த்தால் குறுக்காய் ஓர் வெள்ளைக்கோடு நீண்டு கொண்டே செல்லும்.

கோடை ஆரம்பித்தது. மிதிவண்டிகள் குறைந்து  பாதச்சாரிகள் நிறைந்த காலம் அது.  அப்பொழுதைய பொருளாதார சூழலில் காலணிகள் வாங்கி நடப்பது கடினம்.

காலணிகள் வாங்கினாலும் மிதிவண்டிகள் வெகுசிலரிடமே…எங்கு சென்றாலும் நடைப்பயணம் தான்.

கோடைகாலங்களில் தார்சாலைகளில் நடந்துபயணிப்பது என்பது அறிவிக்கப்படாத தண்டனை.

ஒர் சாலைக்கும் மற்றொரு சாலைக்கும் வயல்கள் குறுக்கே இணைக்கும் ஒற்றையடிபாதையாய் பாதச்சாரிகளால் கோடைகாலங்களில் உருவாகும் தற்காலிக பாதை தான் சோடு.

கோடை ஆரம்பித்ததும்..ஏல   வயல்லசோடு உழுந்திடுச்சாடா? என்ற  வினா தொக்கி நிற்கும்.


பகல் இரவு என்ற பாராமல் மனிதர்கள் பயன்பாட்டில் சோடு இருக்கும் . கோடைமுடிந்து திரும்பவும் வயல்களில் விவசாயபணிகள் ஆரம்பிக்கும்  வரை    சோடு நிலைத்திருக்கும்.

Friday, July 19, 2013

இந்தியாவின் சொந்த "ஜி.பி.எஸ்.' திட்டம் (பகிர்வு)

அதென்ன "ஜி.பி.எஸ்.' என்று கேட்கலாம். பல ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்கா 24 செயற்கைக்கோள்களை வானில் செலுத்தியது. இந்த செயற்கைக்கோள்கள் அனைத்தின் செயல்பாடு, பயன்பாடு ஆகியவையே "ஜி.பி.எஸ்.' என்று சொல்லலாம். மேற்கொண்டு ஜி.பி.எஸ். பற்றி விளக்க முற்பட்டால் அது நீண்டு கொண்டே போகும். இந்த செயற்கைக்கோள்கள் அமெரிக்காவில் மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் மக்களின் அன்றாட வாழ்க்கையில் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்று சொன்னால் போதும். இவற்றின் பயன்பாடு பற்றி அறிந்து கொள்வதுதான் முக்கியம்.
தமிழகத்தில் உள்ள ஒரு லாரி நிறுவனத்தின் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கும் சென்று கொண்டிருப்பதாக வைத்துக் கொள்வோம். எந்த ஒரு நேரத்திலும் இவை இந்தியாவில் எந்தெந்த இடத்தில் இருக்கின்றன என்பதை லாரி நிறுவனத் தலைமையகத்தில் ஒரு திரையில் புள்ளிகள் வடிவில் காண முடியும். இதற்கு ஜி.பி.எஸ். செயற்கைக்கோள்கள் உதவும்.
சென்னை போன்ற பெரு நகரில் ஓடுகின்ற பஸ்கள் எந்தெந்த இடத்தில் உள்ளன என்பதையும் இதேபோலக் கண்டறிய முடியும். ஹைதராபாத் நகருக்கு ஒருவர் காரில் செல்கிறார். அவரது காரில் ஜி.பி.எஸ். தொடர்பு வசதிகள் உள்ளன. ஹைதராபாதின் விரிவான மேப்பைக் காட்டும் "சில்லு' ஒன்றை அவர் காரில் உள்ள கருவியில் செலுத்துகிறார். அவர் ஹைதராபாதில் வழி தெரியாமல் அலைய வேண்டியதில்லை. காரில் உள்ள திரையில் தெரியும் வரைபடத்தைப் பயன்படுத்தி எந்த இடத்துக்கும் செல்ல முடியும். பாகப் பிரிவினையாக நிலங்களைச் சரியாகப் பங்கிட்டளிக்க இந்த செயற்கைக்கோள்கள் உதவும்.
மலைப்பாதையில் நடந்து செல்கின்ற ஒருவர் வழி தவறிவிட்டால் அவர் தம்மிடமுள்ள ஜி.பி.எஸ். கருவி மூலம் தாம் இருக்கின்ற இடத்தை அறிந்துகொள்ள இயலும். பள்ளிக்குச் செல்லும் சிறுமியின் இடுப்பில் ஜி.பி.எஸ். தொடர்புக் கருவியைப் பொருத்திவிட்டால் அவள் எந்த இடத்தில் இருக்கிறாள் என்பதை வீட்டில் இருந்தபடியே தெரிந்துகொள்ள இயலும். ஒரு நாயின் கழுத்தில் ஜி.பி.எஸ். கருவி இருந்தால் அந்த நாய் தொலைந்து போனாலும் கண்டுபிடித்து விடலாம். ஜி.பி.எஸ். செயற்கைக்கோள்களுக்கு இப்படி எவ்வளவோ பயன்கள் உள்ளன.
ஜி.பி.எஸ். செயற்கைக்கோள்களுக்கு வேறு முக்கியமான பயன்பாடும் உண்டு. போர்க் காலத்தில் எதிரிகளின் நிலைகளைக் குறி பார்த்துத் தாக்கவும் அவை உதவும். சொல்லப் போனால் அமெரிக்க ராணுவம் போர்களில் உதவத்தான் ஜி.பி.எஸ். ஏற்பாட்டை உருவாக்கியது.
இராக் மீது அமெரிக்கா நடத்திய போரின்போது அமெரிக்கப் போர்க் கப்பல்கள் இராக் அருகே உள்ள கடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தன. அப்படியான ஒரு போர்க் கப்பலிலிருந்து செலுத்தப்பட்ட "குரூஸ்' ரக ஏவுகணை ஒன்று இராக்கின் தலைநகரான பாக்தாத் நகரில் இராக்கிய உள்துறைக் கட்டடத்தை மட்டும் குறி பார்த்துத் தாக்கி நிர்மூலம் செய்தது. ஏவுகணைக்கு எது எந்தக் கட்டடம் என்பது எப்படித் தெரியும்? ஜி.பி.எஸ் செயற்கைக்கோள்கள் இதற்கு உதவின. சரி, அமெரிக்க ஜி.பி.எஸ் செயற்கைக்கோள்களுக்கு எது எந்தக் கட்டடம் என்பது எப்படித் தெரியும்?
தேசப் படங்களைக் காட்டும் அட்லஸ் புத்தகத்தில் எந்த ஒரு தேசத்தின் படமாக இருந்தாலும் அதில் வடக்கு தெற்காகவும் கிழக்கு மேற்காகவும் கோடுகள் போடப்பட்டிருப்பதைப் பார்த்திருக்கலாம். வடக்கு தெற்காக உள்ளவை தீர்க்க ரேகைகள். கிழக்கு மேற்காக உள்ளவை அட்ச ரேகைகள். இக்கோடுகள், மேப்புகளில் உள்ளனவே தவிர பூமி மீது இப்படிக் கோடுகள் கிடையாது. எனினும் பூமியில் எந்த ஓர் இடத்தையும் துல்லியமாக அறிய இக்கோடுகள் உதவியாக உள்ளன.
"காந்தி நகரில் மூன்றாவது பிரதான சாலையும் ஐந்தாவது குறுக்குத் தெருவும் சந்திக்கின்ற இடத்தின் முனையில் உள்ள பெட்டிக் கடை' என்று அடையாளம் கூறுகிறோம். இப்படித்தான் இந்த இரண்டு ரேகைகளும் (கோடுகள்) சந்திக்கிற ஓர் இடத்தை அவை குறிக்கின்றன.
உதாரணமாக உடுமலைப்பேட்டை 10.36 (வடக்கு) அட்சரேகையும் 77.17 (கிழக்கு) தீர்க்க ரேகையும் சந்திக்கும் இடத்தில் உள்ளது. உடுமலைப்பேட்டைக்கு சற்று வடக்கே உள்ள ஒரு கிராமத்தின் அட்ச மற்றும் தீர்க்க ரேகைகள் வேறு விதமாக இருக்கும். மிகத் துல்லியமாகக் கணக்கிட்டால் அக்கிராமத்தின் பஜார் தெருவில் உள்ள பாத்திரக்கடையின் அட்ச மற்றும் தீர்க்க ரேகைகள் ஒரு விதமாகவும், பாத்திரக் கடைக்கு இரண்டு கடை தள்ளி அமைந்த ஜவுளிக் கடையின் அட்ச மற்றும் தீர்க்க ரேகைகள் வேறு விதமாகவும் இருக்கும்.
அக்கிராமத்தின் மிகத் துல்லியமான மேப்புகள் இருந்தால் பாத்திரக் கடையின் அட்ச மற்றும் தீர்க்க ரேகைகளையும் ஜவுளிக் கடையின் அட்ச மற்றும் தீர்க்க ரேகைகளையும் மிகச் சரியாகக் கண்டறிய முடியும்.
பூமியைச் சுற்றிச்சுற்றி வருகின்ற விசேஷ வகை செயற்கைக்கோள்கள் மூலம் பூமியின் எந்தப் பகுதியையும் மேலிருந்தபடி படம் பிடித்து மிகத் துல்லியமான மேப்புகளைத் தயாரித்து விட முடியும்.
பாக்தாத் நகரின் மிகத் துல்லியமான மேப்புகள் அமெரிக்காவிடம் இருந்த காரணத்தால்தான் அமெரிக்க "குரூஸ்' ரக ஏவுகணையால் குறிப்பிட்ட கட்டடத்தை மட்டும் தாக்கி அழிக்க முடிந்தது. இப்படியான ஏவுகணைகளின் கம்ப்யூட்டர்களில் மேப்புகள் தகுந்த வடிவில் இடம் பெறும். குறிப்பிட்ட தீர்க்க ரேகையும் குறிப்பிட்ட அட்ச ரேகையும் சந்திக்கிற இடத்தைத் தாக்கும் வகையில் ஏவுகணையில் ஆணை இடம் பெற்றிருக்கும். அது இடத்தைக் குறி தவறாமல் தாக்குவதற்கு ஜி.பி.எஸ். செயற்கைக்கோள்கள் ஓயாது அனுப்பும் சிக்னல்கள் உதவுகின்றன. இந்த செயற்கைக்கோள்களிலிருந்து வெறும் சிக்னல்களும் துல்லியமான நேரமும் தொடர்ந்து வெளிப்பட்டிருக்கும். இவைதான் பூமியில் எந்த ஓர் இடத்தையும் துல்லியமாகக் கண்டறிய உதவுகின்றன.
மேலே சொல்லப்பட்ட விவரத்திலிருந்து மிகத் துல்லியமான மேப்புகள் மிகவும் முக்கியமானவை என்பதைப் புரிந்து கொண்டிருக்கலாம். அமெரிக்காவிடம் இப்படியான மேப்புகளைத் தயாரிப்பதற்கான செயற்கைக்கோள்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேப்புகள் துல்லியமாக இல்லாவிடில் பிரச்னைதான். ஒரு சமயம் கொசாவோ போரின்போது அமெரிக்கா செலுத்திய ஏவுகணை தவறுதலாக சீனத் தூதரகக் கட்டடத்தைத் தாக்கியது. பழைய மேப்பைப் பயன்படுத்தியதால் இப்படித் தவறு ஏற்பட்டதாக சீனாவிடம் அமெரிக்கா விளக்கம் அளித்ததால் விஷயம் பெரிதாகவில்லை.
இந்தியாவிடமும் இத்தகைய செயற்கைக்கோள்கள் உள்ளன. இந்தியா 2005-ஆம் ஆண்டில் மேப்புகளைத் தயாரிப்பதற்கென "கார்ட்டோசாட்-1' செயற்கைக்கோளை ஏவியது. அதைத் தொடர்ந்து மேலும் இவ்வகையான மூன்று செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டன. மேலும் துல்லியமான மேப்புகளைத் தயாரிக்க 2014-ஆம் ஆண்டில் ஐந்தாவது "கார்ட்டோசாட்' செலுத்தப்பட இருக்கிறது. இவை உலகின் எந்த ஒரு பகுதியையும் படம் பிடித்து "மேப்' தயாரிக்க வல்லவை.
இது ஒருபுறம் இருக்க, அமெரிக்காவின் ஜி.பி.எஸ். செயற்கைக்கோள்களின் சிக்னல்களை எந்த ஒரு நாடும் பயன்படுத்தலாம். தகுந்த தொடர்புக் கருவிகளைக் கொண்டு இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்ட பயன்பாடுகளை மேற்கொள்ளலாம்.
ஆனால் ஒன்று. ஜி.பி.எஸ். ஏற்பாடு முற்றிலும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளதாகும். அமெரிக்கா நினைத்தால் உலகில் குறிப்பிட்ட பிராந்தியத்தில் சிக்னல்கள் கிடைக்காதபடி செய்ய முடியும். அல்லது தவறான சிக்னல்கள் கிடைக்குமாறு செய்ய முடியும். இராக் போரின்போது அமெரிக்கா இவ்விதம் செய்தது.
ஆகவேதான் ரஷியா பல செயற்கைக்கோள்களைச் செலுத்தி சொந்தமாக ஜி.பி.எஸ். மாதிரியிலான ஏற்பாட்டைச் செய்து கொண்டுள்ளது. அதன் பெயர் "கிளோனாஸ்'. சீனா, ஜப்பான், ஐரோப்பிய யூனியன் ஆகியவையும் இப்படி சொந்த ஜி.பி.எஸ். ஏற்பாடுகளைச் செய்து கொள்வதில் ஈடுபட்டுள்ளன.
இந்தியாவும் இதேபோல சொந்த ஏற்பாட்டைச் செய்து கொள்வதில் ஈடுபட்டுள்ளது. அதன் முதல்படியாகத்தான் இதற்கான முதலாவது செயற்கைக்கோள் ஜூலை முதல் தேதி ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி தளத்திலிருந்து உயரே செலுத்தப்பட்டது. ஆறு மாதங்களுக்கு ஒன்று வீதம் மொத்தம் ஏழு செயற்கைக்கோள்கள் உயரே செலுத்தப்படும். இவை அமெரிக்காவின் ஜி.பி.எஸ். செயற்கைக்கோள்கள் போலவே செயல்படும். ஆனால், இதில் முக்கிய வித்தியாசம் உண்டு. அமெரிக்காவின் ஜி.பி.எஸ். ஏற்பாடு உலகம் தழுவியதாகும். ரஷியா, சீனா ஆகியவற்றின் ஜி.பி.எஸ். மாதிரியான ஏற்பாடுகளும் இதே போல உலகம் தழுவியவை.
ஆனால், இந்தியாவின் சொந்த ஜி.பி.எஸ். மாதிரியான ஏற்பாடு பிராந்திய அளவிலானது. அதாவது இந்தியாவில் உள்ள அனைவரும் பயன்படுத்தலாம். தவிர இந்திய எல்லையிலிருந்து சுமார் 1,500 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளவர்களும் பயன்படுத்தலாம். அதன்படி சவூதிஅரேபியாவின் ஒரு பகுதி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், மேற்காசிய நாடுகள், நேபாளம், மத்திய ஆசிய நாடுகள், சீனாவின் கணிசமான பகுதி, மியான்மர், மலேசியா, பல தென் கிழக்கு ஆசிய நாடுகள் ஆகியவற்றில் உள்ளவர்களும் பயன்படுத்தலாம்.
அமெரிக்க ஜி.பி.எஸ். மாதிரியில் இந்தியா மேற்கொண்டுள்ள திட்டமானது "ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.' என்று அழைக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழான ஏழு செயற்கைக்கோள்களும் அமெரிக்க ஜி.பி.எஸ். போலவே மக்கள் பயன்பாட்டுக்கென ஒரு வித சிக்னல்களை அனுப்பும். தவிர, ராணுவக் காரியத்துக்கென வேறுவித சிக்னல்களை அனுப்பும். இந்தியா அந்த வகையில் எதிரி நாட்டின் ராணுவ இலக்குகளை மிகத் துல்லியமாகத் தாக்குவதற்குத் திறன் பெற்றதாகிவிடும்.
"கார்ட்டோசாட்' செயற்கைக்கோள்கள் மூலம் இந்தியா ஏற்கெனவே மிகத் துல்லியமான மேப்புகளைப் பெற்றுள்ளது. அத்துடன் இந்தியாவிடம் "பிரம்மோஸ்', "நிர்பய' போன்ற திறன் மிக்க "குரூஸ்' ரக ஏவுகணைகள் உள்ளன. ஜி.பி.எஸ். மாதிரியிலான செயற்கைக்கோள்கள்தான் பாக்கியாக இருந்தது. 2016 வாக்கில் இந்த ஏழு செயற்கைக்கோள்களும் செயல்படத் தொடங்கியதும் இந்தியா வல்லரசு நாடுகளுக்குரிய திறனைப் பெற்றதாகிவிடும்.
மக்களுக்கான பயன்பாட்டைப் பொருத்தவரையில் இந்தியா மேற்படி ஏழு செயற்கைக்கோள்களுடன் தொடர்புகொள்ளும் வசதி படைத்த தகுந்த கருவிகளை விரைவில் உருவாக்கும். அப்போது பொது மக்கள், லாரி உரிமையாளர்கள், பஸ் நிறுவனங்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆகியோர் பலன் பெறுவர் .
எதிரி நாட்டுடன் ஒரு போர் மூண்டால் இந்தியாவின் இந்த ஏழு செயற்கைக்கோள்களும் நாட்டைக் காப்பதில் முக்கியப் பங்காற்றும்.
அதே நேரத்தில் இவை மக்களின் பல்வேறு உபயோகங்களுக்கென புரட்சிகரமான புதிய தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்துபவையாகவும் இருக்கும். அந்த வகையில் இந்தியாவின் இத்திட்டம் மிகவும் வரவேற்கத்தக்க ஒன்றாகும்.

கட்டுரையாளர்: மூத்த பத்திரிகையாளர்.

நன்றி : தினமணி

Thursday, July 18, 2013

சரித்திரம் திரும்புகிறதா... (பகிர்வு)

இன்றைய ஊடகங்களின் எல்லா பதிப்புகளிலும், ஊழல் மற்றும் பொதுமக்களின் பிரச்னைகள் குறித்து வரும் செய்திகள் சுயலாபத்துக்காக, பொது நன்மையை விட்டுக்கொடுக்க எந்த ஒரு மனிதனும் தயங்குவதில்லை என்ற உண்மையை உணர்த்தும்வகையில்தான் உள்ளன; எனவே இன்றைய இளைஞர்கள் நம் நாட்டின் சமீபத்திய சரித்திரத்தின் அடிப்படை அம்சங்களையும் அவற்றின் விளைவுகளையும் அறிந்திருக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். அவை என்ன என்று பார்ப்போம்.
ஒரு நாடு பொருளாதாரத்தில் தள்ளாடினாலும், ராணுவ பலமின்றி இருந்தாலும் சர்வதேச நாடுகளின் மத்தியில் மரியாதை இல்லாமல் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடும் என்பது சரித்திரம் நமக்குப் போதிக்கும் உண்மை. அந்தத் தத்துவத்தை மனதில் நிறுத்திப் பார்த்தால் நமது நாட்டின் கௌரவம் படுபாதாளத்திற்குத் தள்ளப்பட்டு நாம் மரியாதை இழந்து கூனிக்குறுகும் வகையில் நம்மைத் தாக்கி 1962-ஆம் ஆண்டு வெற்றி கண்டது சீனத்தின் ராணுவம். அதன் விளைவாக அன்றைய பாகிஸ்தானிய அரசு நம்மை எதிர்த்துப் பல நடவடிக்கைகளைத் தொடங்கி, காஷ்மீர் மாநிலத்தை நம்மிடமிருந்து தட்டிப்பறிக்க முயற்சித்தது.
1965-ஆம் ஆண்டு இந்தச் சூழ்நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் எல்லோருமே எதிர்பார்க்காத வகையில் அதுவரை இந்தியாவை முழு மனதுடன் ஆதரித்து வந்த சோவியத் யூனியன் பாகிஸ்தானுடனும் நட்பு பாராட்டி மெதுவாக இந்திய அரசிடம் ""நீங்கள் உங்களின் சகோதர நாடான பாகிஸ்தானுடன் நட்பு பாராட்ட வேண்டும்; தேவைப்பட்டால் நாங்கள் உங்கள் இரண்டு நாடுகளுக்கும் நடுவில் சமரசம் செய்து வைக்கிறோம்'' எனப் பேச ஆரம்பித்தது.
அதுவரையிலும் இந்தியாவிற்கு முழு ஆதரவு அளிப்பது சோவியத் யூனியன் என்ற நிலைமையும் பாகிஸ்தானுடன் கூட்டு சேர்ந்திருப்பது அமெரிக்கா என்பதும் சர்வதேச அரசியலில் வெளிப்படையாக இருந்த ஓர் அம்சம். ராணுவத் தளவாடங்களுக்கு சோவியத் யூனியனிடமும், பொருளாதாரத்தை நடத்திச் செல்ல அமெரிக்காவின் தயவில் ஐ.எம்.எஃப் எனும் சர்வதேச வங்கியிடம் கையேந்த வேண்டிய பரிதாப நிலைமையில் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா இருந்தது. ராணுவ பலமும், பொருளாதார முன்னேற்றமும் இல்லாத நிலைமையில் நாம் இருந்ததே இந்த நிலைமைக்கான அடிப்படைக் காரணங்கள்.
இந்த நிலைமையில் விவசாயத்தில் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லாமல் இருந்ததால் உணவுத் தட்டுப்பாடு நம் நாட்டை வாட்டி வதைத்தது. மக்களின் பசியைப் போக்க அமெரிக்காவின் இலவச உணவு தானிய நன்கொடைத் திட்டமான "பி.எல். 480'-இன் மூலம் உணவு தானியங்கள் இறக்குமதி செய்யப்பட்டன.
அந்த நேரத்தில் அன்றைய உணவு மற்றும் விவசாயத்துறை அமைச்சர் சி. சுப்பிரமணியத்தின் "பசுமைப் புரட்சி' திட்டத்தின் மூலம் இந்திய விவசாயம் துள்ளிக் குதித்து வளர்ச்சியடைந்தது. இதே நேரத்தில் நமது நாட்டின் சிறு மற்றும் குறுந்தொழில்களும் மிகப்பெரிய வளர்ச்சியடைந்தன. பொருளாதாரம் முன்னேறியதைக் கண்ட சோவியத் யூனியன் பழையபடி இந்தியாவை முழு மனதுடன் எல்லா நடவடிக்கைகளிலும் ஆதரிக்க ஆரம்பித்தது. பொருளாதாரத்தில் தன்னிறைவுடனும் சர்வதேச அரசியல் அரங்கில் இடதுசாரி கொள்கைகளை ஆதரித்தும் இந்தியா வெளிவிவகாரங்களில் தனது நிலைமையை உயர்த்திக் கொண்டது.
1962-இல் சீனத்தின் ராணுவத் தாக்குதலில் தலைகுனிய நேர்ந்த நமது நாடு, சரியான ராஜதந்திர முறைகளைக் கையாண்டு அமெரிக்க அதிபர் நிக்சன், சீனாவின் மாசேதுங் மற்றும் பாகிஸ்தானின் யாகியா கான் ஆகியோரின் கூட்டு முயற்சியை முறியடித்து 1971-ஆம் ஆண்டு வங்காள தேசத்தை உருவாக்கி நமது எதிரி நாடான பாகிஸ்தானை இரண்டாக உடைத்தது.
ஆனால் இந்த உயர்ந்த நிலை 1990 வாக்கில் சரிய ஆரம்பித்தது. நமது பொருளாதாரச் சிக்கலின் உச்ச கட்டமாக நமது கையிருப்பு தங்கத்தை பன்னாட்டு நிறுவனங்களில் அடமானம் வைத்து, கடன் வாங்கி நமது நிதிநிலைமையைச் சமாளித்தோம். அந்த காலகட்டத்தில்தான் சோவியத் யூனியன் எனும் வலுவான தேசம் உடைந்து பல நாடுகளாகச்சிதறி சர்வதேச அரங்கில் சோவியத் யூனியனின் அதிகாரம் ஒன்றுமில்லாமல் போய்விட்டது.
அன்றைய அமெரிக்க அரசு இந்தியாவிற்கு எந்தவிதமான அணு ஆயுத ஆராய்ச்சிக்கான உதவிகளும் செய்யக்கூடாது என ரஷியாவை நிர்பந்தித்து வெற்றி கண்டது. அதற்கு முக்கியமான காரணம் நமது நாடு ஒரு அணுகுண்டை சோதனைக்காக வெடித்துக் காட்டி உலகின் அணு ஆயுதங்களைக் கொண்ட சக்தி வாய்ந்த நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுவிடக் கூடாது என்பதுதான்.
அடுத்து வந்த பிரதமர் நரசிம்ம ராவின் அரசு தொடங்கிய பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகள் இந்தியாவின் பொருளாதாரத்தை மேன்மையடையச் செய்தது. 1998-ஆம் ஆண்டில் நாம் நடத்திய அணுகுண்டு வெடிப்புச் சோதனையினால் கோபமுற்ற மேலை நாடுகள் பொருளாதாரத் தடையை நம் நாட்டிற்கு எதிராக முடுக்கிவிட்டன. ஆனால், பொருளாதாரச் சீர்திருத்தத்தினால் முன்னேறிய - தன்னிறைவில் இருந்த நம் நாடு அந்தத் தடைகளைத் தாக்குப்பிடித்து மேலும் முன்னேறியது.
இதைக் கண்டு அசந்துபோன அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன், இந்தியாவுக்கு விஜயம் செய்து இரண்டு நாடுகளும் நட்பு பாராட்டி பல திட்டங்களை இந்தியா நிறைவேற்ற அமெரிக்கா உதவிகளைச் செய்யும் என உறுதி அளித்தார். அடுத்து வந்த வாஜ்பாயின் அரசு இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தை மேலும் வலுவடையச் செய்து பல நிதிநிலை சீர்திருத்த நடவடிக்கைகளையும் சிக்கன நடவடிக்கைகளையும் நடைமுறைப்படுத்தி பணவீக்கத்தை வெகுவாகக் கட்டுப்படுத்தி வெற்றி கண்டது.
இந்தியாவின் மீது பல நாடுகள் விதித்திருந்த பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட்டு இந்தியா ஒரு "அணு ஆயுத' நாடு என்பது சர்வதேச அளவில் ஒத்துக்கொள்ளப்பட்டது. அடுத்து வந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் தீவிரப் பொருளாதார முன்னேற்ற நடவடிக்கைகளைத் தொடர்ந்ததால் உலக அளவில் நமது நாட்டின் மதிப்பு அதிகமாகி, "ஜி-8', "ஜி-20' மற்றும் "பிரிக்ஸ்' எனப்படும் சர்வதேச அமைப்புகளில் இந்தியா அங்கம் வகித்தது.
ஆனால், கூட்டணி அரசின் பல நடவடிக்கைகள் ஓட்டு வங்கி அரசியலாக உருவெடுத்தது. இதற்கு முக்கியமான காரணம் கூட்டணியில் பங்குபெற்ற பல பிராந்தியக் கட்சிகள் பணம் சேர்த்து மாநில அரசியலில் முன்னேறும் கலாசாரத்தைப் பின்பற்றத் தொடங்கின. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைமைப் பொறுப்பிலிருந்த காங்கிரஸýம் பணம் சேர்ப்பதில் குறியாக இருந்தது. மக்களைக் கவரும் வண்ணம் பல வாக்கு வங்கி இலவசங்கள் நடைமுறைக்கு வந்து மத்திய நிதி நிலைமையை பாதித்தன.
முதன்முதலாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்து நிதிநிலைக்கு ஒவ்வாத தொடர் திட்டங்களைத் தொடங்கி வைத்தது எனலாம்.
1991-ஆம் ஆண்டு இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சி நிலைமைக்கு முக்கியமான காரணம் முன்னாள் பிரதமர் வி.பி. சிங் நிறைவேற்றிய விவசாயிகளின் கடன்களை ரத்து செய்த திட்டம்தான் என்பதைப் பலரும் மறந்துவிட்டனர்.
கூட்டணி கலாசாரத்தில் கட்டுக்கோப்பான நிர்வாக முறைகள் தளர்த்தப்பட்டு நிறைய நடவடிக்கைகள் பொருளாதாரத்தைப் பாதிக்கும் நிலைமை உருவாகியுள்ளது. மத்திய அரசின் துண்டுவிழும் நிதிநிலை அறிக்கை முதல் காரணம். அரசின் சேமிப்புகள் பணமாக்கப்பட்டு ஓட்டு வங்கித் திட்டங்களுக்கான மானியங்களாகச் செலவிடப்படுவது நமது வருமானத்தில் 3.9 சதவிகிதமாக இருந்தது தற்சமயம் 4.5 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இது இன்னொரு காரணம்.
நம்மிடம் நிறைய நிலக்கரிச் சுரங்கங்கள் இருந்தபோதிலும் அவை சரியானபடி நிர்வகிக்கப்பட்டு நமது மின்சார உற்பத்திக்குத் தேவையான அளவு நிலக்கரி வெட்டியெடுக்கப்படாமல் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பரிதாபமான சூழ்நிலை உருவாகியுள்ளது. நல்லமுறையில் தொழில் வளர்ச்சியை எட்டியிருந்த தென்மாநிலங்களான ஆந்திரம், தமிழ்நாடு போன்றவற்றிலும்கூட அதிக விலை கொடுத்து நிலக்கரியை இறக்குமதி செய்வதால் மின்சாரக் கட்டணம் உயர்ந்து சிறு மற்றும் குறுந்தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
தனக்குத் தனி வழியமைத்து நற்பெயரைச் சம்பாதிக்கும் குறுகிய எண்ணத்துடன் சுற்றுச்சூழல் விதிகளை வகுக்கும் மத்திய அமைச்சர் ஒருவரால், நம் நாட்டில் பெருந்தொழில்கள் முதலீடுகளைச் செய்து தொழில்துறை வளர்ச்சியடைய முடியாத நிலைமை உருவாகியுள்ளது.
இந்தியாவில் தங்கள் முதலீடுகளைச் செய்து தொழில் தொடங்க பல பன்னாட்டு நிறுவனங்கள் தயங்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென்அமெரிக்காவை உள்ளடக்கிய சர்வதேச அமைப்பான "பிரிக்ஸ்' இன்றைய நிலைமையில் இந்தியாவை விலக்கிவிட்டு சர்வதேசத் தொழில்களின் முதலீட்டிற்கு உகந்த நாடாக இந்தோனேசியாவைச் சேர்த்துக் கொள்ளலாமா என யோசிப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதே காலகட்டத்தில் தொழில் வளர்ச்சியில் நம்மைவிடவும் அதிகமாக முன்னேறி சர்வதேச மரியாதையையும் சீனா பெற்று வருகிறது. சமீபத்தில் டர்பனில் நடந்த "பிரிக்ஸ்' மகாநாட்டிற்கு வந்த சீன அதிபர் சி ஜின் பிங்க்கையும் ரஷிய அதிபர் புதினையும் விழுந்து விழுந்து உபசாரம் செய்தார் தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் சுமா. ஆனால், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இதே மகாநாட்டிற்குக் கலந்துகொள்ள வந்திருந்தும் அவரைக் கண்டுகொள்ளவே இல்லை. இதே அவமதிப்பு சிறிய நாடான மாலத்தீவு நடந்துகொள்ளும் விதத்திலும் சமீபகாலங்களில் தெரிய வருகிறது என்பதைப் பல வெளிநாட்டு அரசியல் நோக்கர்களும் கூறுகின்றனர்.
பக்கத்து நாடான வங்கதேசம் முதல் நமது நாட்டின் பாதுகாப்பைப் பாதிக்கும் ஆப்கானிஸ்தானின் தீவிரவாதிகள் வரையில் முழுக்கவனத்துடன் வெளிநாட்டுக் கொள்கையின் நெளிவுசுளிவுகளைத் திறமையுடன் ஆளுமை செய்யும் அரசியல் தலைமை கூட்டணி அரசுக்கு உண்டா என்ற கேள்வி எழுகிறது. நம் நாட்டின் ராணுவத்திற்குத் தேவையான ஆயுதங்களையும், வாகனங்களையும், ஹெலிகாப்டர்களையும் வாங்குவதில்கூட ஊழல் தலைவிரித்தாடும் காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம்.
இங்கிருந்து நாம் எங்கே பயணிப்போம் என்ற கேள்விக்குப் பதிலே இல்லை. ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறி ஊழல்கள் தொடர்ந்தால் நமக்கு விடிவுகாலம் இல்லை என்பதை நமது இளைஞர்கள் உணர வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.
கட்டுரையாளர்: பணி நிறைவுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி.

நன்றி: தினமணி

Wednesday, July 17, 2013

ஆர்க் ராயல் விமானதாங்கி கப்பலின் இறுதி காலம்

பிரிட்டிஷ்  கப்பல் படையில் பணியாற்றி மே 2013 -ல்  ஓய்வு ஆர்க் ராயல் விமானதாங்கி கப்பல் உடைக்கப்படும் காட்சி.

LinkWithin

Related Posts with Thumbnails