Sunday, July 07, 2013

மருந்து-மாத்திரை-மனிதர்கள் (பகிர்வு)

ஒரே தலைவலி ஏதாவது ஒரு மாத்திரை கொடுங்கள். காய்ச்சல் உடல் வலி ஏதாவது மாத்திரை கொடுங்கள். ஜலதோஷம், இருமல் ஏதாவது டானிக் அல்லது மாத்திரை கொடுங்கள் என பாமரர்கள், பணக்காரர்கள், படித்தவர்கள் என அனைத்து தரப்பினரும் தினசரி மருந்துக்கடை முதல் பெட்டிக்கடை வரை கேட்டு வாங்கி, டீ அல்லது காப்பியுடனோ அல்லது வெந்நீருடனோ சாப்பிடும் பழக்கம் உள்ளது. மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து, அவர் கொடுக்கும் மருந்துச் சீட்டுக்கு, மருந்துக் கடைகளில் மாத்திரை வாங்கும்போது, இது எந்த நிறுவனம் தயாரித்தது. மருத்துவர் எழுதிக் கொடுத்தவைதானா என நுகர்வோர் பெரும்பாலானோர் கடைக்காரர்களிடம் கேட்பதில்லை.
நாம் அணியும் உடையைப் பார்த்து வாங்குகிறோம். ஆனால், நமது உடலின் ஆரோக்கியத்துக்கு வாங்கும் மருந்து, மாத்திரைகளைக் கவனிக்கிறோமா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும். இதனால்தான் பல மருத்துவர்கள், மருந்து சீட்டுக்கு மாத்திரை வாங்கிவிட்டு என்னிடம் காண்பித்து விட்டு செல்லுங்கள் எனக் கூறுகிறார்கள்.
மருத்துவ உலகில் முடிசூடா மன்னனாக ஆங்கில மருத்துவம் விளங்கி வருகிறது. இதற்கு காரணம் அறிவியல் அடிப்படையில் மெய்ப்பிக்கப்பட்டதேயாகும். ஒரு மருந்து உடலில் எப்படி பயணிக்கிறது. நோய்க்கான காரணிகளை அழிக்க எப்படி அது தன் இலக்கை அடைகிறது. மருந்து எவ்வாறு மறு உரு அடைகிறது மற்றும் உடலை விட்டுக் கழிவாக வெளியேறும்வரை , உடலில் மருந்தின் பயண அனுபவங்களை அறிவியல் அடிப்படையில் அனைவரும் அறியும்படி துல்லியமாக இருப்பதுதான் ஆங்கில மருத்துவத்தின் சிறப்பு. ஆங்கில மருத்துவத்தின் இந்த அசுர வளர்ச்சிக்கு மற்றொரு காரணம் உடனடித் தீர்வு. சிறிய அளவிலான மாத்திரை, நீர்த்துளிகளாகக் குப்பிக்குள் அடைக்கப்பட்டிருக்கும் மருந்து, உடலின் உள்ளே சென்று சில மணி நேரத்தில் அந்த நோயைத் தீர்க்கவல்லதாக உள்ளது. உடனடியாகத் தீர்வு என்றால் எந்த மருந்தின் வீரியம் எப்படி இருக்கும். இதனை மருத்துவர் உதவி இல்லாமல் நாமே வாங்கி உபயோகிக்கலாமா, ஜலதோஷத்துக்காக எடுத்துக்கொள்ளும் வழக்கமான சரியான அளவு மருந்தே, தூக்கம் கலந்த சோம்பலை ஏற்படுத்தும். ஒரு நோயைத் தீர்ப்பதற்காக நாம் எடுத்துக்கொள்ளும் சராசரி அளவுள்ள மருந்தே தேவையற்ற, ஆனால் தவிர்க்க முடியாத சில விளைவுகளை ஏற்படுத்துவதைத்தான் பக்கவிளைவு என்கிறோம். எனவே, இந்த விஷயத்தில் நாம் அலட்சியமாக இருக்கலாமா, விழிப்புணர்வு வேண்டாமா?
உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கின்படி, உலகில் விற்பனையாகிக் கொண்டிருக்கும் மருந்துகளில் 5 முதல் 8 சதம் வரை போலி மருந்துகள் எனத் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு மருத்துவ மையம் செய்த ஆய்வின்படி, 2010 ஆம் ஆண்டு போலி மருந்துகளின் விற்பனை 75 பில்லியன் டாலரைத் தாண்டும் எனத் தெரியவந்துள்ளது. வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள் எனப் பாகுபாடு இல்லாமல், அனைத்து நாடுகளிலும் இந்தப் போலி மருந்துகள் தங்கு தடையின்றி கிடைக்கின்றன. போலி மருந்து என்றால் என்ன?
நாம் வாங்கும் மருந்தில், மருந்து செயல்பொருள்கள் வெறும் 60, 70, 80 சதம் இருந்தால் அவை தரமற்ற மருந்து. மருந்து செயல்பொருள்களின் அளவு 500 மில்லி கிராம் என்று அட்டையில் போட்டுவிட்டு, வெறும் 400 மில்லி கிராம்தான் இருந்தது என்றால், அது போலி மருந்தாகும். எனவே, மருந்து மாத்திரைகள் வாங்கும் போது நாம் கவனமாக இருக்க வேண்டும். குறைகள் காண்பது எளிது. அந்தக் குறைகளைக் களைவதற்க்கான வழிகள் சொல்வது கடினம். குறைகளை அரசாங்கம் உடனடியாக களைய வேண்டும் எனக் கூறுவதும் தவறுதான்.
மருந்து விழிப்புணர்வில் நம் அனைவருக்கும் பங்கு உள்ளது. பொதுமக்களுக்கு இழப்பு அதிகம் இருப்பதுபோல், பொறுப்பும் அதிகம் இருக்கிறது. சுய மருத்துவம் கூடாது. அதாவது நீங்களே உங்களுக்கு மருத்துவராக இருந்து மருந்துகளை எடுத்துக் கொள்ளக் கூடாது. லேசான சளி, காய்ச்சலுக்கு என உடனே மருந்து மாத்திரை உபயோகிக்க வேண்டியதில்லை. நம் உடலிலேயே எதிர்ப்புச் சக்தி இருக்கிறது. தாங்க முடியாத அளவு வந்தால் மட்டுமே மருத்துவரை அணுக வேண்டும்.
மருந்துக்கடைக்காரர் மருத்துவர் எழுதிக் கொடுத்த மருந்தைக் கொடுத்துள்ளாரா என உறுதி செய்து கொள்ளுங்கள். மருந்தின் காலக்கெடுவை (எக்ஸ்பைரி தேதி) பாருங்கள். மருந்து சீட்டை பைலில் வையுங்கள். வீட்டில் சிறு அட்டைப்பெட்டியில் முதலுதவி மருந்துகளையும், பஞ்சு, கிருமி நாசினி உள்ளிட்டவற்றை வைத்திருங்கள். மருந்துக்கடைகளில் வாங்கும் மருந்துக்கு பில் கேட்டு வாங்குங்கள்.
மருந்து விழிப்புணர்வை முதல்கட்டமாக படித்த மக்களிடையே ஏற்படுத்த வேண்டும். இதற்கு சட்டங்களும், திட்டங்களும் தேவை. பின்னர், அடுத்த கட்டமாக பாமர மக்களுக்கும் இதனை விரிவுபடுத்த வேண்டும். விழிப்புடன் இருப்போம் என்ற கோஷம் மக்களிடையே செல்ல வேண்டும். நோய்வரும் முன் காத்தல் நல்லது.

நன்றி : தினமணி

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails