Monday, December 29, 2014

பி.எல்.ஏ. ரெசின்டசியும் மதியசாப்படும்

27.12.14 அன்று இல்லாள் பிறந்தகம் சென்றாள். நண்பர் ஒருவர் அழைக்க மதிய சாப்பாட்டிற்காக தஞ்சை பி.எல். ஏ. ரெசின்டசி சென்றோம்.

நான் இதுவரை சென்றதில்லை  அவர்களுடைய மற்ற தொழில்களில் எனக்கு தெரிந்த வரையில் குறிப்பிட்ட தரம் கடைபிடிக்கப்படுவதால்  சாப்பிடும் செல்லும் முன் சாப்பாட்டை பற்றிய தரத்திலும் ருசியிலும்  எதிர்பார்ப்புடன் சென்றேன்.

இருவரும் சென்றோம் ரூ 135 மதிப்புள்ள சாப்பாட்டை ஆர்டர் செய்தோம்.
சாப்பாடும் வந்தது சாப்பிட்டோம். சாப்பிடும் பொழுதே இதே மாதிரியான சாப்பாட்டை ரூ 50 க்கு நம்மூரில் சாப்பிட்டிருக்கலாம் என்ற கருத்தை நண்பரிடம் சொன்னேன்.

அவரும் ஆமோதித்தார்.

பழங்கால  கலைப்பொருட்கள்  வைத்து அவர்கள் இடத்தை அழகு சேர்த்தார்கள். பராமரிப்பு சொல்லிக்கொள்ளும்படி இல்லை.

சாப்பாடு முடிந்தது.

பிராண்ட் நேம் வைத்து பொருட்களின் தகுதியை அல்லது தொழில்களின் தரத்தை முடிவு செய்யகூடாது என்ற எண்ணத்துடன் வெளிவந்தோம்.

நண்பர் சூரியகுமார்

Saturday, December 13, 2014

அப்பா கேட்ட கணக்கு

புள்ள 65000 சம்பளம் வாங்குறான் பெருமையாத்தான் இருக்கு ஆனா நமக்கு ஒன்னும்  ஆவலயே  என்று பையனின் அப்பா புலம்பல்.

என்னப்பா பணம் ஒன்னுமே அனுப்பல....

இருப்பா ஊருக்கு வர்றப்ப பேசிக்கலாம் மகனின் பதில்...

பையன் நல்ல வேலையில் சேர்ந்த பிறகு  உழைக்கும் உடம்பு இருந்தும்  கொஞ்சம் சோம்பல் அடித்தார் . சரியாக கடை திறப்பதில்லை. காலை திறந்து மதியம் மூடி கிடக்கும்.

அவர் கடை நாடி நம்பிசெல்வோர்கள் ஏமாந்து திரும்புவார்கள்.

மகன் தன் கடமை உணர்ந்து கல்யாண வயது தங்கையை நல்ல செலவு செய்து கரை சேர்த்தான்.

வீட்டுக்கும் பணம் அனுப்பி கொண்டிருந்தான்.

அவனுக்கு கல்யாணம் நடந்து குடும்பத்துடன்  வேலை பார்க்கும் இடத்துக்கு தன் மனைவியுடன் குடியிருப்பை மாற்றி கொள்ள மாதம் அவன் அப்பாவுக்கு ஒதுக்கும் பட்ஜெட்டில் துண்டு விழுந்து.

வேட்டி விழுந்த இடத்தில் துண்டு விழுந்து துண்டும் கோவணமாகி போனது.

அப்பாவுக்கு ஆயிரதெட்டு சிந்தனைகள்  என்னடா  பணம் அனுப்பிய பையன் அனுப்பவில்லையே என்று.

அவருக்கு தெரிந்தவர்களிடம் அவர் பேசாமல் இல்லை.

மகன் வந்தான் ...

அப்பா வீட்டு தவணை  .....கார் தவணை....கரண்ட் பில்....என்று குறிப்பு எழுதி செலவு கணக்குகளை ஒப்படைக்க...

பார்த்தார்..படித்தார்...

அவர் கடை திறக்க எழுந்தார்.

Wednesday, December 03, 2014

அதிவேகம் விவேகமல்ல! (பகிர்வு)பிரதமர் நரேந்திர மோடியின் அவசரம் புரிகிறது. "வளர்ச்சி' என்கிற கோஷத்தை முன்வைத்து அசாதாரண தேர்தல் வெற்றியை ஈட்டியிருப்பதால், இந்தியாவை விரைந்து வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்ல வேண்டும் என்கிற அவரது ஆர்வமும், அர்ப்பணிப்பு உணர்வும் பாராட்டுக்குரியவை. இந்தியாவை உலகத்தின் உற்பத்திக் கேந்திரமாக மாற்ற வேண்டும் என்கிற பிரதமர் மோடியின் முனைப்பு வெற்றி பெறுமானால், வேலையில்லாத் திண்டாட்டம் கணிசமாகக் குறையும் என்பதிலும் சந்தேகம் இல்லை.
இதெல்லாம் சரி. ஆனால் பிரதமர் மோடி தனது அதிவேக வளர்ச்சித் திட்டத்திற்கு சீனாவைத் துணைக்கு அழைத்துக் கொண்டிருப்பதுதான் அச்சத்தை ஏற்படுத்துகிறது. தேர்தல் முடிவுகள் வெளிவருவதுவரை, பிரதமர் மோடி சீனாவைப் பற்றி முன்வைத்த கருத்துகளை அவர் சற்று நினைத்துப் பார்த்தால், இந்த அளவுக்கு சீனாவுடன் நேசக்கரம் நீட்ட அவர் முன்வர மாட்டார். கூடாது.
சீன அதிபரின் சமீபத்திய இந்திய விஜயத்தின்போது, சென்னைக்கும் தில்லிக்கும் இடையே 3,200 கோடி டாலர் முதலீட்டில் 1,754 கி.மீ. தொலைவுக்கான அதிவிரைவு புல்லட் ரயில் திட்டத்திற்கான ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. சீன ரயில்வே அதிவேகமானது என்பது மட்டும்தான் நமக்குத் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், மிகவும் பாதுகாப்பில்லாத ரயில்வே சீனாவில் இயங்குகிறது என்பதை அங்கே அடிக்கடி நடக்கும் விபத்துகள் வெளிப்படுத்துகின்றன. ஜப்பானும், பிரான்ஸூம்தான் விரைவு ரயில் தயாரிப்பு, போக்குவரத்தில் முன்னணி வகிக்கின்றனவே தவிர சீனாவல்ல. கடந்த மாதம் மெக்சிகோ சீனாவுடன் விரைவு ரயிலுக்காகச் செய்து கொண்டிருந்த ஒப்பந்தத்தை, பாதுகாப்புக் காரணங்களுக்காக, ரத்து செய்திருக்கிறது என்பதை இந்திய அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.
இந்தியாவை உலக நாடுகளின் உற்பத்திக் கேந்திரமாக்கும் முனைப்பு பல சீனத் தயாரிப்பாளர்களுக்கு பெரு மகிழ்ச்சி அளித்திருக்கிறது. "தேய்பிறைத் தொழில் துறைகள்' என்று சீனாவால் புறக்கணிக்கப்படும், தவிர்க்கப்படும் தொழில் நிறுவனங்கள் இந்தியாவில் அடைக்கலம் தேடக்கூடும் என்று தெரிகிறது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடுகளில் ஒன்றான "க்ளோபல் டைம்ஸ்' என்கிற தினசரியில் வெளிவந்திருக்கும் கட்டுரையில் இதுபற்றிய குறிப்பு காணப்படுகிறது. "இந்தியாவின் நம்பிக்கை சீனாவின் தேய்பிறைத் தொழில் நிறுவனங்களில் இருக்கிறது' என்கிற தலைப்பிட்ட அந்தக் கட்டுரையில், உற்பத்தித் துறையில் சீனா அடைந்திருக்கும் வெற்றி ரகசியத்திலிருந்து மோடி அரசு பாடம் படிக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார் கட்டுரையாளர்.
பழைய தொழில்நுட்பமும், அதிகமாக சுற்றுப்புற மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளும் சீனாவில் மெல்ல மெல்ல மூடப்பட்டு வருகின்றன. இந்தத் தொழிற்சாலைகளை வியத்நாம், லாவோஸ், வங்கதேசம் போன்ற நாடுகளுக்கு இடமாற்றம் செய்து வருகிறது சீனா. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சமீபத்தில் வியத்நாமில் சீனாவுக்கு எதிரான போராட்டமே நடந்தது குறிப்பிடத்தக்கது.
ஜவுளி, ரசாயனம், இரும்பு உருக்கு, மோட்டார் உதிரிப் பாகங்கள் போன்ற தொழிற்சாலைகளுக்கான உற்பத்திச் செலவு சீனாவில் கணிசமாக அதிகரித்திருக்கிறது. அதனால், அந்தத் தொழிற்சாலைகளை, வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாக உள்ள ஏனைய ஆசிய நாடுகளுக்கு மாற்றும்படி, சீன அரசு தொழிலதிபர்களை வலியுறுத்துகிறது. அதனால்தான் சமீபகாலமாக, சீனாவின் பல்வேறு பகுதிகளில் தொழிற்சாலைகள் நடத்துபவர்கள் இந்தியாவுக்கு அடிக்கடி வருகிறார்கள். இங்கே தொழிற்சாலை நிறுவுவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
இப்போது சீனாவும் அமெரிக்காவைப்போல, சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளை வெளிநாடுகளில் நிறுவுவது என்கிற முதலாளித்துவ மனப்போக்குக் கொள்கையைக் கடைப்பிடிக்கத் தொடங்கி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், தரம் குறைந்த பொருள்களை அதிக அளவில் உற்பத்தி செய்து குறைந்த விலைக்கு உலகச் சந்தையில் விற்பது என்கிற சீனாவின் உத்திக்கு, பிரதமர் நரேந்திர மோடியின் இந்தியாவை உலக உற்பத்திக் கேந்திரமாக்கும் திட்டம் மிகவும் வசதியாக இருக்கிறது. இதன் விளைவு எப்படி இருக்கும் என்பதைச் சொல்லியா தெரிய வேண்டும்?
அதிவிரைவான பொருளாதார முன்னேற்றம் என்பது சாத்தியமல்ல. மிதமிஞ்சிய அவசரமும் வேகமும் விவேகமாகாது என்பதைப் பிரதமர் நரேந்திர மோடி உணர்ந்து செயல்பட வேண்டும். அதிலும் குறிப்பாக, சீனாவுக்குச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பது என்பது ஆபத்தை விலைகொடுத்து வாங்கியதாகிவிடும்.
சீனாவைப் பகைத்துக் கொள்ள வேண்டும் என்றோ, சீனாவுடன் போர் தொடுக்க வேண்டும் என்றோ நாம் கூறவில்லை. இந்தியா சீனாவிடம் எச்சரிக்கையாக இருந்தாக வேண்டும்!

Tuesday, December 02, 2014

செர்னோபில் இன்று

ஆள் அரவமற்ற மயான அமைதி.

செர்னொபில் அணுஉலை விபத்து நடந்த இடத்தில் இருந்து 30 கிமீ  சுற்றளவுக்கு மனிதர்கள் வாழ தகுதியற்ற சூழல்.

இன்னமும் குறையாத கதிரியிக்க வெளிப்பாடு...

இன்று


மேலும் அதிகம் தெரிந்துகொள்ள...
செர்னோபில் அணுஉலை விபத்து

Saturday, November 15, 2014

யானி

நேற்று  தி இந்து இணையதளத்தில் இசைமேதை யானி பற்றி படித்தேன். ஆர்வமாய் இணையங்களில் தேடினேன்.

இசை வீடியோக்கள் சிலவற்றை பார்த்தேன்.  அவரது இசை அனைவரையும் கட்டிபோட்டதில் ஆச்சரியமில்லைதான்.

ரசித்தேன் உள்வாங்கி ருசித்தேன்.

ஓர் உயரிய உண்மை கலைஞனுக்கு வணக்கம் செய்கிறேன்.

யானி -எல்லைகளை உடைத்த இசைநதிTuesday, November 11, 2014

சாதிவாரி கணக்கெடுப்பு

சட்டர்  கதவு மூடியும் மூடாமலும்  திறந்த கிடந்த கடையில் கணக்காளர் வைத்து எழுதும் ஓர்  சிறிய மேசை ஒன்று. கடையின் முன்புறம் மூன்று பிளாஸ்டிக் சேர் தரையில் கால் பொதித்து வைக்கப்பெற்ற ஓர் சிறிய மரப்பெஞ்சு. பெயிண்ட் மரபெஞ்சின் வழுவழுப்பான தன்மையே எத்தனைபேர் உட்கார்ந்து இருப்பார்கள் என்று கணக்கு சொன்னது.

கடையின் உள்ளே நடுத்தர பெண்மணி..

எதிரே பெரியவர் ஒருவர் அமர்ந்திருக்க....

உள்ளே ராக்கைகளில் பிரித்து வைக்கபட்ட பல்வேறு வண்ண காகிதங்கள்
கள்ளர் ஆண்
கள்ளர் பெண்
அகமுடையர் ஆண்
அகமுடையர் பெண்

இன்னும் பல உட்பிரிவுகளில்  ஜாதகங்கள் பிரித்து வைக்கப்பட்டிருந்தது.

பெண் பார்க்க...மாப்பிள்ளை பார்க்க அணுகவும்.

பெண் கிடைக்காதவர்கள்

மாப்பிள்ளை கிடைக்காதவர்கள்  குறிப்பிட்ட சாதியினருக்கு காசு வாங்கி கொண்டு வரன்கள் அமைத்து கொடுக்கும் இடம் அது.

பொண் பக்கதிலிருக்கு மொகந்தனூர் தான் .

பெரியவர்  ஆங்..விழித்து காது மடலை கைவிரலால் வளைத்துபிடித்து கூர்மையாக்கினார்.

பெண்மணி புரிந்தவராய் அவர் காதருகே சென்று இங்கிருக்கில்ல மோத்தனூா் அதான்.. என்று சொல்ல

ஆங் ...அப்படியா என்று விளித்தார்.

பல்வேறு சாதியினர்  அங்கிருக்க...

சாதிவாரி கணக்கெடுப்புக்கு  சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது ஞாபகத்து வந்தது.
பாரதியாரின் ஓடிவிளையாடு பாப்பாவும் ஞாபகத்துக்கு வர மறுக்கவிலவ்லை.

எங்கள் ஊரில்   மூவேந்தர் முன்னேற்றகழகம்  அம்பேத்கர் மக்கள் இயக்கம் இயங்கி கொண்டிருக்கிறது.


Monday, November 10, 2014

லோட்டா

லோட்டா  தான் அன்றைய பிரச்சனையின் ஆதாரம்.  தண்ணீர் குடிக்க கொடுக்கும் தமிழர்களின் பழங்கால பாத்திரவகைகளில் இதுவும் ஒன்று.

இரவு 9 மணிக்கு வேலை முடித்து வீடு திரும்பினான். வீட்டு  கூடத்தில் நடு நாயகமாய்  லோட்டா வீற்றிருந்தது.

ஏண்டி....மதியம் சாப்பிட்டப்ப தண்ணி கொண்டு வந்து வச்ச லோட்டா தானே இது. எடுத்து வைக்கலாயா...??

முகம் தூக்கி பார்த்து  முகம் கவிழ்ந்தாள்.

என்னடி நீ வேலை பாக்குறது.. இதெல்லாம் சரியா பாக்காட்டின்னா நான் திட்ட செய்வேன். அப்புறம் நீ என்ன கோச்சுக்க கூடாது.

மறுபடியும் முகம் தூக்கி என் முகபாவணை பார்த்து முகம் சுருங்கினாள்.

பேசவில்லை....

சரியான பதில் இல்லையாதலால் கோபம் வந்தது திரும்பவும் பேசினான்.

இந்த முறை பேச்சு வந்தது.

இந்தபாருங்க  இது டெய்லி நடக்குதா.. இன்னிக்கு நடந்துடுச்சு அதுக்கு போயி திட்டிட்டே இருக்கீங்க...

ஆமா..திட்டுவேந்தான்... மதியத்திலிருந்து எத்தனவாட்டி போயிட்டு வந்திட்டிருக்க நடுகூடத்துலதான கெடக்கு  எடுத்து வைக்கவேண்டியதானே...

சிறிது நேரம் மௌனம் நிகழ்ந்தது.

அவனால் லோட்டா எடுத்து வைக்கப்பட்டது.

நான் உன்ன ஒன்னு சொல்லாம இருக்குன்னா இது மாதிரி  சின்ன விசயங்கள் தப்பு நடக்காம பாத்துக்கப்பா  என்றான்.

ஏப்பா...ஒரு லோட்டா எடுத்துவைக்கமா இருந்தது இவ்வளவு அதக்களம் என்றாள்.

திரும்பவும் வாதம் செய்ய வாயெடுத்தான்.

மௌனமானான்.
Friday, November 07, 2014

குட் டே...!!

கீதை படிக்க தூக்கம் வந்தது  மூடி வைத்தேன். தூக்கம் கலைக்க குட் டே ரொட்டிகளை கடித்தேன்  சாப்பிட்டேன்  தூக்கம் கலைய சிந்தனை வந்தது.

செய்தே தீர வேண்டிய செலவுகள் கண்முன்னாடி வரிசை கட்டின. தூக்கம் போனது ஏக்கம் வந்தது.

எப்படி சம்பாதிப்பது இன்னும் அதிகமாய்...????

என்ற சிந்தனையின் ஊடே ...பல வருடங்களுக்கு முன்னால் யாகுவில் ஒரு நண்பரிடம்  சாட்டிங் செய்தது ஞாபகம்  வந்தது.

பணம் உன்னிடம் இருக்கு...உன்னுடைய தொழில் திட்டம் பற்றி சொல் என்று கேட்டார்.

என்னிடம் தான் இல்லையே...

சரி..நான் தருவதாய் வைத்துகொள் ...உன்னுடைய தொழில் திட்டம் என்ன ?

இதெல்லாம் காரியத்துக்கு உதவுமா பாஸ் ..என்றேன்.

திரும்பவும் கேட்டார்.

நான் திரும்பவும்  என்னிடம்  இருந்தால் தானே திட்டமிடலாம் என்றேன்.

பணம் பற்றிய கவலையை விடு ...திட்டம் பற்றி சொல்...

திட்டம் தெரியவில்லை... சாட்டிங்கை விட்டு வெளியேறினேன்.

வருமானம்  ஒரு வழி செலவு பல வழிகளில் திக்கு முக்காட செய்ய  வண்டி நிற்காமல் ஓடுகிறது.

வார்த்தைகளும் விமர்சனங்களும் நாமும் சம்பாதிக்க வேண்டும் என்று வெறியூட்ட வாய்ப்புகளை தேடி....


Wednesday, October 15, 2014

முயற்சி


ஊன்றுகோல்
நம்பிக்கை
புதைமணலில்
நடக்கும் கால்கள்
காட்டையும்
கடந்து விடும்
முயற்சி
வெற்றியா..
தேல்வியா..

Sunday, June 01, 2014

காலை விருந்தும் துவையலும்

உள்ளுரில்  இன்று புதுமணை புகு விழா  .

ஆளுங்கட்சிகாரர்கள் அமைச்ச பெருமக்கள் வரஇருந்ததால் ஊரே கட்சி கொடிகளால் விளம்பர தட்டிகளால்  நிறைந்து இருந்தது.

 மிக்கி மவுஸ் முகமூடி அணிந்தவர்கள் வரவேற்றார்கள்.

வாங்க ...சாப்பிடலாம் என அழைக்கப்பட...

சாப்பிடலாம் என நினைத்து சாப்பாட்டு பந்தலுக்குள்  நுழைந்தேன்.

எனக்கான  சாப்பாட்டு இலையின் முன் அமர   தொட்டு கொள்ளும் துவையாலாக இனிப்பு பாிமாறப்பட்டது.

அதைவிட கொஞ்சம் கூடுதலாக பொங்கல் பாிமாறப்பட்டது.

ஒரு இட்லி...மிகவும் குறைவாய் சட்னி சாம்பார்.

பரிமாற அமர்த்தபட்டவர்கள்  ஏனோ தானோ என்று கவனிக்க விருதோம்பல் வெறும்   தோம்பலாக  அமைந்தது.

வயிறு  நிறைய வாழ்த்து வரும் இங்கே என்னவரும் தெரியவில்லை.

Wednesday, May 28, 2014

வீணாக எறிந்த பொருள்

சில நாட்களுக்கு முன் கடையை சுத்தம் செய்ய ஆரம்பித்தேன். நெடுநாட்களுக்கு முன்  நண்பர் கொடுத்த  ப்ளுடூத்  இர் போன் பயன்படாமல் அட்டைபெட்டியில்  அடைந்து கிடந்தது.

துாக்கி எறிந்து விடலாம் என நினைத்து பழைய  குப்பைகளுடன் ஒன்று கலந்து வைந்திருந்தேன். என்னுடைய முதலாளி எதற்கும்  எடுத்து வை பயன்படும் என்று சொல்லி எடுத்துவைத்தேன்.

எனக்கு கொடுக்கும் அந்த நண்பர் சொன்னார் இதை பயன்படுத்த வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டால்  பயன்படுத்த அனுமதிப்பார்கள் எனறு சொல்ல   ... என்னிடம் அத்தகைய வசதியை பெறுவதற்குரிய  கைப்பேசி நாகரீகமானதாக அன்று இல்லை.

இன்று எதார்த்தமாக என்னுடைய நண்பர் ஒருவர் இத்தகைய கருவியை பயன்படுத்த  நான் தெரிந்து வைத்திருப்பை உண்மை படுத்தி கொள்ள அவரிடம் கேட்டேன்.

யார் சொன்னது?

செயல் வழியாகவே அவருடைய கருவியை என்னுடைய கைப்பேசி யில் இணைத்து காட்ட ..

விரைவாக கடை திரும்பிய நான் தேடிக்கொண்டிருக்கிறேன்.

Tuesday, May 27, 2014

நிறைய எதிர்பார்ப்பு

மோடி பிரதமர் .

அவரது சிந்தனை செயல்வடிவம் பெறப்பொறுத்திருக்க வேண்டும்.

ஒரு மாநில அரசியல்வாதி தேசிய அரசியல்வாதியாக அங்கீகாரம் பெற்றிருக்கிறார்.

வாத விவாதங்கள்  அவரைப்பற்றி முன்னெடுத்து வைக்கப்பட   பொறுமையாய்   காத்திருப்போம்.

மோடி பிரதமா்.

காங்கிரஸ்  கவிழ்ந்தது.

தி.மு.க. தோற்றது.

பெரும் ஊழல்வாதிகளையே வேட்பாளர்களாக தேர்தலில் நிற்க வைக்கும் தைரியம் தி்.மு.க. விற்கு மட்டுமே உண்டு.

அ.தி.மு.க. சில பல கணக்குகளால் வெற்றியை ரசிக்க முடியாமல் நிறையவே தள்ளாடுகிறது.

தமிழகத்தை இன்னும் இன்னும்  சீர்மைப்படுத்த வேண்டிய செயல்கள் நிறையவே இருக்க  அ.தி.மு.க . தலைமை அவசரப்பட்டதாகவே தெரிகிறது.

தே.மு.தி.க . விற்கு சினிமா பாணி வசனங்களும் செய்கைகளும்  மக்கள் மத்தியில் ஓரளவிற்கு மேல் எடுப்படாது என்பதை இந்தேர்தல் உணர்த்தியிருக்கும்.

LinkWithin

Related Posts with Thumbnails