Thursday, July 18, 2013

சரித்திரம் திரும்புகிறதா... (பகிர்வு)

இன்றைய ஊடகங்களின் எல்லா பதிப்புகளிலும், ஊழல் மற்றும் பொதுமக்களின் பிரச்னைகள் குறித்து வரும் செய்திகள் சுயலாபத்துக்காக, பொது நன்மையை விட்டுக்கொடுக்க எந்த ஒரு மனிதனும் தயங்குவதில்லை என்ற உண்மையை உணர்த்தும்வகையில்தான் உள்ளன; எனவே இன்றைய இளைஞர்கள் நம் நாட்டின் சமீபத்திய சரித்திரத்தின் அடிப்படை அம்சங்களையும் அவற்றின் விளைவுகளையும் அறிந்திருக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். அவை என்ன என்று பார்ப்போம்.
ஒரு நாடு பொருளாதாரத்தில் தள்ளாடினாலும், ராணுவ பலமின்றி இருந்தாலும் சர்வதேச நாடுகளின் மத்தியில் மரியாதை இல்லாமல் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடும் என்பது சரித்திரம் நமக்குப் போதிக்கும் உண்மை. அந்தத் தத்துவத்தை மனதில் நிறுத்திப் பார்த்தால் நமது நாட்டின் கௌரவம் படுபாதாளத்திற்குத் தள்ளப்பட்டு நாம் மரியாதை இழந்து கூனிக்குறுகும் வகையில் நம்மைத் தாக்கி 1962-ஆம் ஆண்டு வெற்றி கண்டது சீனத்தின் ராணுவம். அதன் விளைவாக அன்றைய பாகிஸ்தானிய அரசு நம்மை எதிர்த்துப் பல நடவடிக்கைகளைத் தொடங்கி, காஷ்மீர் மாநிலத்தை நம்மிடமிருந்து தட்டிப்பறிக்க முயற்சித்தது.
1965-ஆம் ஆண்டு இந்தச் சூழ்நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் எல்லோருமே எதிர்பார்க்காத வகையில் அதுவரை இந்தியாவை முழு மனதுடன் ஆதரித்து வந்த சோவியத் யூனியன் பாகிஸ்தானுடனும் நட்பு பாராட்டி மெதுவாக இந்திய அரசிடம் ""நீங்கள் உங்களின் சகோதர நாடான பாகிஸ்தானுடன் நட்பு பாராட்ட வேண்டும்; தேவைப்பட்டால் நாங்கள் உங்கள் இரண்டு நாடுகளுக்கும் நடுவில் சமரசம் செய்து வைக்கிறோம்'' எனப் பேச ஆரம்பித்தது.
அதுவரையிலும் இந்தியாவிற்கு முழு ஆதரவு அளிப்பது சோவியத் யூனியன் என்ற நிலைமையும் பாகிஸ்தானுடன் கூட்டு சேர்ந்திருப்பது அமெரிக்கா என்பதும் சர்வதேச அரசியலில் வெளிப்படையாக இருந்த ஓர் அம்சம். ராணுவத் தளவாடங்களுக்கு சோவியத் யூனியனிடமும், பொருளாதாரத்தை நடத்திச் செல்ல அமெரிக்காவின் தயவில் ஐ.எம்.எஃப் எனும் சர்வதேச வங்கியிடம் கையேந்த வேண்டிய பரிதாப நிலைமையில் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா இருந்தது. ராணுவ பலமும், பொருளாதார முன்னேற்றமும் இல்லாத நிலைமையில் நாம் இருந்ததே இந்த நிலைமைக்கான அடிப்படைக் காரணங்கள்.
இந்த நிலைமையில் விவசாயத்தில் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லாமல் இருந்ததால் உணவுத் தட்டுப்பாடு நம் நாட்டை வாட்டி வதைத்தது. மக்களின் பசியைப் போக்க அமெரிக்காவின் இலவச உணவு தானிய நன்கொடைத் திட்டமான "பி.எல். 480'-இன் மூலம் உணவு தானியங்கள் இறக்குமதி செய்யப்பட்டன.
அந்த நேரத்தில் அன்றைய உணவு மற்றும் விவசாயத்துறை அமைச்சர் சி. சுப்பிரமணியத்தின் "பசுமைப் புரட்சி' திட்டத்தின் மூலம் இந்திய விவசாயம் துள்ளிக் குதித்து வளர்ச்சியடைந்தது. இதே நேரத்தில் நமது நாட்டின் சிறு மற்றும் குறுந்தொழில்களும் மிகப்பெரிய வளர்ச்சியடைந்தன. பொருளாதாரம் முன்னேறியதைக் கண்ட சோவியத் யூனியன் பழையபடி இந்தியாவை முழு மனதுடன் எல்லா நடவடிக்கைகளிலும் ஆதரிக்க ஆரம்பித்தது. பொருளாதாரத்தில் தன்னிறைவுடனும் சர்வதேச அரசியல் அரங்கில் இடதுசாரி கொள்கைகளை ஆதரித்தும் இந்தியா வெளிவிவகாரங்களில் தனது நிலைமையை உயர்த்திக் கொண்டது.
1962-இல் சீனத்தின் ராணுவத் தாக்குதலில் தலைகுனிய நேர்ந்த நமது நாடு, சரியான ராஜதந்திர முறைகளைக் கையாண்டு அமெரிக்க அதிபர் நிக்சன், சீனாவின் மாசேதுங் மற்றும் பாகிஸ்தானின் யாகியா கான் ஆகியோரின் கூட்டு முயற்சியை முறியடித்து 1971-ஆம் ஆண்டு வங்காள தேசத்தை உருவாக்கி நமது எதிரி நாடான பாகிஸ்தானை இரண்டாக உடைத்தது.
ஆனால் இந்த உயர்ந்த நிலை 1990 வாக்கில் சரிய ஆரம்பித்தது. நமது பொருளாதாரச் சிக்கலின் உச்ச கட்டமாக நமது கையிருப்பு தங்கத்தை பன்னாட்டு நிறுவனங்களில் அடமானம் வைத்து, கடன் வாங்கி நமது நிதிநிலைமையைச் சமாளித்தோம். அந்த காலகட்டத்தில்தான் சோவியத் யூனியன் எனும் வலுவான தேசம் உடைந்து பல நாடுகளாகச்சிதறி சர்வதேச அரங்கில் சோவியத் யூனியனின் அதிகாரம் ஒன்றுமில்லாமல் போய்விட்டது.
அன்றைய அமெரிக்க அரசு இந்தியாவிற்கு எந்தவிதமான அணு ஆயுத ஆராய்ச்சிக்கான உதவிகளும் செய்யக்கூடாது என ரஷியாவை நிர்பந்தித்து வெற்றி கண்டது. அதற்கு முக்கியமான காரணம் நமது நாடு ஒரு அணுகுண்டை சோதனைக்காக வெடித்துக் காட்டி உலகின் அணு ஆயுதங்களைக் கொண்ட சக்தி வாய்ந்த நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுவிடக் கூடாது என்பதுதான்.
அடுத்து வந்த பிரதமர் நரசிம்ம ராவின் அரசு தொடங்கிய பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகள் இந்தியாவின் பொருளாதாரத்தை மேன்மையடையச் செய்தது. 1998-ஆம் ஆண்டில் நாம் நடத்திய அணுகுண்டு வெடிப்புச் சோதனையினால் கோபமுற்ற மேலை நாடுகள் பொருளாதாரத் தடையை நம் நாட்டிற்கு எதிராக முடுக்கிவிட்டன. ஆனால், பொருளாதாரச் சீர்திருத்தத்தினால் முன்னேறிய - தன்னிறைவில் இருந்த நம் நாடு அந்தத் தடைகளைத் தாக்குப்பிடித்து மேலும் முன்னேறியது.
இதைக் கண்டு அசந்துபோன அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன், இந்தியாவுக்கு விஜயம் செய்து இரண்டு நாடுகளும் நட்பு பாராட்டி பல திட்டங்களை இந்தியா நிறைவேற்ற அமெரிக்கா உதவிகளைச் செய்யும் என உறுதி அளித்தார். அடுத்து வந்த வாஜ்பாயின் அரசு இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தை மேலும் வலுவடையச் செய்து பல நிதிநிலை சீர்திருத்த நடவடிக்கைகளையும் சிக்கன நடவடிக்கைகளையும் நடைமுறைப்படுத்தி பணவீக்கத்தை வெகுவாகக் கட்டுப்படுத்தி வெற்றி கண்டது.
இந்தியாவின் மீது பல நாடுகள் விதித்திருந்த பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட்டு இந்தியா ஒரு "அணு ஆயுத' நாடு என்பது சர்வதேச அளவில் ஒத்துக்கொள்ளப்பட்டது. அடுத்து வந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் தீவிரப் பொருளாதார முன்னேற்ற நடவடிக்கைகளைத் தொடர்ந்ததால் உலக அளவில் நமது நாட்டின் மதிப்பு அதிகமாகி, "ஜி-8', "ஜி-20' மற்றும் "பிரிக்ஸ்' எனப்படும் சர்வதேச அமைப்புகளில் இந்தியா அங்கம் வகித்தது.
ஆனால், கூட்டணி அரசின் பல நடவடிக்கைகள் ஓட்டு வங்கி அரசியலாக உருவெடுத்தது. இதற்கு முக்கியமான காரணம் கூட்டணியில் பங்குபெற்ற பல பிராந்தியக் கட்சிகள் பணம் சேர்த்து மாநில அரசியலில் முன்னேறும் கலாசாரத்தைப் பின்பற்றத் தொடங்கின. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைமைப் பொறுப்பிலிருந்த காங்கிரஸýம் பணம் சேர்ப்பதில் குறியாக இருந்தது. மக்களைக் கவரும் வண்ணம் பல வாக்கு வங்கி இலவசங்கள் நடைமுறைக்கு வந்து மத்திய நிதி நிலைமையை பாதித்தன.
முதன்முதலாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்து நிதிநிலைக்கு ஒவ்வாத தொடர் திட்டங்களைத் தொடங்கி வைத்தது எனலாம்.
1991-ஆம் ஆண்டு இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சி நிலைமைக்கு முக்கியமான காரணம் முன்னாள் பிரதமர் வி.பி. சிங் நிறைவேற்றிய விவசாயிகளின் கடன்களை ரத்து செய்த திட்டம்தான் என்பதைப் பலரும் மறந்துவிட்டனர்.
கூட்டணி கலாசாரத்தில் கட்டுக்கோப்பான நிர்வாக முறைகள் தளர்த்தப்பட்டு நிறைய நடவடிக்கைகள் பொருளாதாரத்தைப் பாதிக்கும் நிலைமை உருவாகியுள்ளது. மத்திய அரசின் துண்டுவிழும் நிதிநிலை அறிக்கை முதல் காரணம். அரசின் சேமிப்புகள் பணமாக்கப்பட்டு ஓட்டு வங்கித் திட்டங்களுக்கான மானியங்களாகச் செலவிடப்படுவது நமது வருமானத்தில் 3.9 சதவிகிதமாக இருந்தது தற்சமயம் 4.5 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இது இன்னொரு காரணம்.
நம்மிடம் நிறைய நிலக்கரிச் சுரங்கங்கள் இருந்தபோதிலும் அவை சரியானபடி நிர்வகிக்கப்பட்டு நமது மின்சார உற்பத்திக்குத் தேவையான அளவு நிலக்கரி வெட்டியெடுக்கப்படாமல் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பரிதாபமான சூழ்நிலை உருவாகியுள்ளது. நல்லமுறையில் தொழில் வளர்ச்சியை எட்டியிருந்த தென்மாநிலங்களான ஆந்திரம், தமிழ்நாடு போன்றவற்றிலும்கூட அதிக விலை கொடுத்து நிலக்கரியை இறக்குமதி செய்வதால் மின்சாரக் கட்டணம் உயர்ந்து சிறு மற்றும் குறுந்தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
தனக்குத் தனி வழியமைத்து நற்பெயரைச் சம்பாதிக்கும் குறுகிய எண்ணத்துடன் சுற்றுச்சூழல் விதிகளை வகுக்கும் மத்திய அமைச்சர் ஒருவரால், நம் நாட்டில் பெருந்தொழில்கள் முதலீடுகளைச் செய்து தொழில்துறை வளர்ச்சியடைய முடியாத நிலைமை உருவாகியுள்ளது.
இந்தியாவில் தங்கள் முதலீடுகளைச் செய்து தொழில் தொடங்க பல பன்னாட்டு நிறுவனங்கள் தயங்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென்அமெரிக்காவை உள்ளடக்கிய சர்வதேச அமைப்பான "பிரிக்ஸ்' இன்றைய நிலைமையில் இந்தியாவை விலக்கிவிட்டு சர்வதேசத் தொழில்களின் முதலீட்டிற்கு உகந்த நாடாக இந்தோனேசியாவைச் சேர்த்துக் கொள்ளலாமா என யோசிப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதே காலகட்டத்தில் தொழில் வளர்ச்சியில் நம்மைவிடவும் அதிகமாக முன்னேறி சர்வதேச மரியாதையையும் சீனா பெற்று வருகிறது. சமீபத்தில் டர்பனில் நடந்த "பிரிக்ஸ்' மகாநாட்டிற்கு வந்த சீன அதிபர் சி ஜின் பிங்க்கையும் ரஷிய அதிபர் புதினையும் விழுந்து விழுந்து உபசாரம் செய்தார் தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் சுமா. ஆனால், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இதே மகாநாட்டிற்குக் கலந்துகொள்ள வந்திருந்தும் அவரைக் கண்டுகொள்ளவே இல்லை. இதே அவமதிப்பு சிறிய நாடான மாலத்தீவு நடந்துகொள்ளும் விதத்திலும் சமீபகாலங்களில் தெரிய வருகிறது என்பதைப் பல வெளிநாட்டு அரசியல் நோக்கர்களும் கூறுகின்றனர்.
பக்கத்து நாடான வங்கதேசம் முதல் நமது நாட்டின் பாதுகாப்பைப் பாதிக்கும் ஆப்கானிஸ்தானின் தீவிரவாதிகள் வரையில் முழுக்கவனத்துடன் வெளிநாட்டுக் கொள்கையின் நெளிவுசுளிவுகளைத் திறமையுடன் ஆளுமை செய்யும் அரசியல் தலைமை கூட்டணி அரசுக்கு உண்டா என்ற கேள்வி எழுகிறது. நம் நாட்டின் ராணுவத்திற்குத் தேவையான ஆயுதங்களையும், வாகனங்களையும், ஹெலிகாப்டர்களையும் வாங்குவதில்கூட ஊழல் தலைவிரித்தாடும் காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம்.
இங்கிருந்து நாம் எங்கே பயணிப்போம் என்ற கேள்விக்குப் பதிலே இல்லை. ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறி ஊழல்கள் தொடர்ந்தால் நமக்கு விடிவுகாலம் இல்லை என்பதை நமது இளைஞர்கள் உணர வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.
கட்டுரையாளர்: பணி நிறைவுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி.

நன்றி: தினமணி

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails