Friday, February 08, 2013

காவிரி டெல்டா விவசாயிகளுக்கு இழப்பீடு


பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், விவசாயிகள் செலுத்த வேண்டிய கட்டணத்தை அரசே ஏற்கும் என்று நான் ஏற்கெனவே தெரிவித்ததற்கு இணங்க, டெல்டா பகுதிகளில் உள்ள 5 லட்சத்து 45 ஆயிரம் விவசாயிகளுக்கான 27 கோடியே 67 லட்சம் ரூபாய் பயிர்க் காப்பீட்டுத் தொகையை அரசே செலுத்தியுள்ளது.  பயிரிழப்பை அளவிட்டு, விவசாயிகளுக்கு அளிக்க வேண்டிய நிவாரணம் மற்றும் செயல்படுத்தப்பட வேண்டிய நிவாரணப் பணிகள் குறித்து நிதி அமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்ட உயர் மட்டக் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் நான் பின் வருவனவற்றை இந்த மாமன்றத்திற்கு அறிவிக்கின்றேன்.
மத்திய அரசின் பேரிடர் நிவாரண வரையறைபடி, நெற்பயிரை இழந்த சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு, ஏக்கர் ஒன்றுக்கு, 2,429 ரூபாய் மட்டுமே நிவாரணமாக வழங்க இயலும்.  மாநில பேரிடர் நிவாரண  வரையறைபடி, ஏக்கர் ஒன்றுக்கு, 4,000 ரூபாய் மட்டுமே நிவாரணமாக வழங்க இயலும்.  இருப்பினும், இந்த 4,000 ரூபாய் நிவாரணத் தொகை, 5,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று நான் ஏற்கெனவே அறிவித்திருந்தேன்.  இதுவன்றி, பயிர் இழப்புக்காக காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து ஏக்கர் ஒன்றுக்கு, 8,692 ரூபாய் வரை பெற இயலும் என்றும் தெரிவித்து இருந்தேன். இங்கே பல உறுப்பினர்கள் சுட்டிக் காட்டியுள்ளபடி, காப்பீட்டு நிறுவனம், குசைமய அடிப்படையில், 5 கிராமங்களைத் தெரிந்தெடுத்து, ஒவ்வொரு கிராமத்திலும் இரண்டு அறுவடை சோதனைகளை மேற்கொண்டு, அந்த சோதனை முடிவுகளின் அடிப்படையிலும்; கடந்த மூன்று ஆண்டுகளில் கிடைக்கப் பெற்ற சராசரி விளைச்சலின் அடிப்படையிலும்; காப்பீட்டு நிவாரணத் தொகையை நிர்ணயிக்கும். இவ்வாறு, காப்பீட்டு நிவாரணத் தொகையை நிர்ணயம் செய்யும் போது 100 விழுக்காடு மகசூல் இழப்பு ஏற்பட்டால் தான், ஒரு ஏக்கருக்கு முழுக் காப்பீட்டுத் தொகையான 8,692 ரூபாய் கிடைக்கும்.  50 விழுக்காடு மகசூல் இழப்பு ஏற்பட்டால், ஒரு ஏக்கருக்கு சுமார் 4,350 ரூபாய் தான் காப்பீட்டு நிவாரணத் தொகையாக கிடைக்கும். மேலும், சோதனை அறுவடை செய்து முடிக்கப்பட்டு, காப்பீட்டு நிவாரணத் தொகை பெறுவதற்கு தாமதம் ஏற்படும்.  இதனைத் தவிர்க்கும் வகையில், 50 விழுக்காட்டிற்கும் மேல் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள விவசாயிகளுக்கு முழு காப்பீட்டு நிவாரணத் தொகையை முன் கூட்டியே தமிழக அரசு வழங்கும். இதன்படி, 50 விழுக்காட்டிற்கு மேல்  மகசூல் பாதித்துள்ள 1 லட்சத்து 75 ஆயிரம் விவசாயிகளின் 3.61 லட்சம் ஏக்கர் பயிர்களுக்கு, ஏக்கர் ஒன்றுக்கு, 15,000 ரூபாய் என்ற வீதத்தில் நிவாரணத் தொகை வழங்கப்படும். அதாவது, பேரிடர் நிவாரணம், வேளாண் பயிர்க் காப்பீடு, மற்றும் சிறப்பு கூடுதல் நிவாரணம் என மொத்தமாக, ஏக்கர் ஒன்றுக்கு 15,000 ரூபாய் உடனடியாக விவசாயிகளுக்கு எனது தலைமையிலான அரசால் வழங்கப்படும். இதனால், அரசுக்கு 541 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.
காவேரி டெல்டா விவசாயிகள் அனைவருக்கும் தமிழக அரசே பயிர்க் காப்பீட்டுத் தொகையை செலுத்தியுள்ளதால், 50 விழுக்காட்டிற்கும் குறைவாக பயிரிழப்பு ஏற்பட்டுள்ள விவசாயிகளுக்கும், அந்தந்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள சராசரி பயிரிழப்புக்கு ஏற்ப, காப்பீட்டு நிவாரணம் வழங்கப்படும். காப்பீட்டு நிறுவனத்தின் அனுமதி கிடைக்கப் பெற்றவுடன், இந்த நிவாரணம் வழங்கப்படும்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails