Wednesday, May 15, 2013

தற்கொலை தீர்வாகுமா?(பகிர்வு)


தற்கொலை பற்றிய மிகப் பழைமையான ஆய்வுகளில் முக்கியமானது, எமில்டுர்கைம் எனும் பிரான்ஸ் நாட்டு சமூகவியல் அறிஞர் தற்கொலை என்ற தலைப்பில் 1897-ம் ஆண்டு வெளியிட்ட படைப்பேயாகும்.
அதன் பிறகு பல்வேறு துறைகளைச் சார்ந்த எண்ணற்ற அறிஞர்கள் தற்கொலை பற்றிய ஆய்வை மேற்கொண்டிருக்கிறார்கள்.
இந்த ஆண்டு உலகச் சுகாதார நிறுவனம் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரத்தின்படி உலகிலேயே அதிக எண்ணிக்கையில் தற்கொலைகள் நிகழும் நாடு லித்துவேனியாவாகும். இரண்டாவது இடத்தில் ரஷியாவும், மூன்றாவது இடத்தில் கொரியக் குடியரசும் உள்ளன.
இந்தியாவில் சராசரியாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஒவ்வோராண்டும் உயிரை மாய்த்துக் கொள்வதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.
உலகமெங்கும் நிகழும் தற்கொலைகளில் பத்து விழுக்காட்டுக்கும் மேல் இந்தியாவில் காணப்படுகிறது. நம் நாட்டில் ஒரு லட்சம் மக்களில் 10.5 நபர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். 1980-க்கும் 2006-க்கும் இடையே இந்த எண்ணிக்கை 67 விழுக்காடு அதிகரித்திருக்கிறது. இளைஞர்களிடமும் குறிப்பாக ஆண்கள் மத்தியிலும் தற்கொலை நிகழ்வுகள் அதிகமாகக் காணப்படுகின்றன.
இந்தப் பிரச்னையின் தீவிரம் இந்த அளவுக்கு உணரப்பட்டாலும் அதற்கான காரணங்கள் சரியாகக் கிடைக்கவில்லை. மேற்கண்ட இந்தத் தகவல்களை மைத்ரி எனும் தொண்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
உலகச் சுகாதார நிறுவனம் இந்தியாவைப் பற்றி கூறுகையில், உலக அளவில் தற்கொலை விகிதம் அதிகமாக உள்ள நாடுகளுள் ஒன்று என சுட்டிக்காட்டுகிறது. இந்தியாவில் காணப்படும் தற்கொலை நிகழ்வுகளில் ஏறத்தாழ 40 விழுக்காட்டினர் முப்பது வயதுக்கும் குறைவானவர்கள் என அறியப்படுகிறது.
ஏதாவது ஒரு காரணம் அல்லது சம்பவம் தற்கொலைக்குத் தூண்டுகோலாக அமைவதாக ஊடகங்கள் சுட்டிக்காட்டினாலும் நாள்பட்ட தற்கொலை எண்ணங்களும், உணர்வுப் போராட்டங்களும் கூட காரணமாக அமைகின்றன என்கிறார் உளவியல் அறிஞர்களை மேற்கோள் காட்டும் பியாசந்தவர்கர் எனும் ஆய்வாளர்.
இந்திய இளைஞர்களிடையே அதிகரித்து வரும் தற்கொலை குறித்த கட்டுரை ஒன்றில் நடைமுறையில் இருக்கும் கல்விமுறை இளைய தலைமுறையின் மீது ஏற்படுத்தும் மன அழுத்தம் வல்லுனர்களை நிறையவே யோசிக்க வைத்திருக்கிறது என்று கூறுகிறார். பல்வேறு துறைகளிலும் ஆர்வம் காட்டும் இளைஞர்களைப் பொறியியல் அல்லது மருத்துவம் படிக்குமாறு வற்புறுத்தும் பெற்றோர்களால் மிஞ்சி நிற்பது ஏமாற்றமும், வெறுப்புமே என்கிறார் சந்தவர்கர்.
உலக இணையத் தோழர்களுடன் வலைத்தள விளையாட்டுகளில் ஈடுபடுதல் எனும் இன்றைய நிலை வட்டார நண்பர்களின் அமைப்பைச் சிதறடித்து ஓர் ஆரோக்கியமற்ற சூழ்நிலையை உருவாக்கி விட்டது என்று குறிப்பிடுகிறார் டாடா சமூகஅறிவியல் நிறுவனத்தைச் சார்ந்த மன நல மையத்தலைவர் சுபாதா மைத்ரா. இந்தியாவைப் பொறுத்தவரை மிக அதிகமான எண்ணிக்கையில் தற்கொலை செய்து கொள்ளும் மற்றொரு சமூகப்பிரிவினர் விவசாயிகளே.
2009-ம் ஆண்டு 17,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக என்.சிஆர்.பி எனப்படும் தேசிய குற்ற ஆவணங்கள் காப்பகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 15 ஆண்டுகளில் ஏறத்தாழ 2.4 லட்சம் விவசாயிகள் உயிரை மாய்த்துக் கொண்டதாக அறியப்படுகிறது.
இந்த வகையில் தெற்கே ஆந்திரப்பிரதேசம் மற்றும் கர்நாடக மாநிலங்களும் வடக்கில் மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இடுபொருளுக்கு ஆகிற செலவு, விவசாயக் கடன் பெறுவதில் உள்ள பிரச்னைகள், இயற்கைச் சீற்றங்கள், வறட்சி போன்ற காரணங்கள் விளைச்சலில் ஏற்படுத்தும் பாதிப்புகள், விவசாயப் பொருள்களுக்கு நிர்ணயிக்கப்படும் குறைந்த விலை, சந்தைப்படுத்துதலில் உள்ள சிக்கல்கள், இடைத்தரகர்கள் மற்றும் அதிக வட்டிக்குக் கடன் கொடுப்பவர்களின் கெடுபிடிகள் என மிகுந்த பொருளாதார நெருக்கடிகளுக்கு ஆளாகும் விவசாயிகளின் அவலநிலையையும் அதன் காரணமாக தற்கொலை எனும் முடிவுக்குத் தள்ளப்படும் விவசாயிகளின் நிலையையும் சுட்டிக்காட்டும் மீட்டா மற்றும் ராஜீவ்லோசன் போன்ற ஆய்வாளர்கள் தற்கொலைக்கான சமூகக்காரணங்களையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை.
குடிப்பழக்கம், திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு ஆகும் கட்டுப்பாடற்ற செலவு, உடல் ஆரோக்கியம் கெடும்போது அதற்காகும் செலவுகளைச் சந்திக்க திராணியற்றுப் போகும் நிலை என பல காரணங்களையும் குறிப்பிடுகின்றனர்.
பாலின அடிப்படையில்கூட தற்கொலை நிகழ்வுகளில் வேறுபாடுகள் உள்ளன எனும் ஆச்சர்யமான தகவலைத் தெரிவிக்கிறார் சுப்ராபிரியதர்ஷினி எனும் ஆய்வாளர்.
விஷமருந்தி உயிரை மாய்த்துக் கொள்பவர்களில் பெண்களைக் காட்டிலும் ஆண்களே அதிகம் என தென்னிந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வைச் சுட்டிக்காட்டும் இவர் தற்கொலைச் சம்பவங்கள் குறித்து வேறு சில தகவல்களையும் தருகிறார்.
தற்கொலைக்குத் தேர்ந்தெடுக்கும் நேரம் மற்றும் காலங்களில்கூட தெளிவான பாலின வேறுபாடுகள் இருப்பதாக இவர் தெரிவிக்கிறார். பெண்கள் மதிய வேளையிலும் ஆண்கள் மாலை அல்லது நள்ளிரவிலும் தற்கொலை செய்து கொள்வதாகக் குறிப்படும் இவர் பெண்கள் பெரும்பாலும் ஆண்டு தொடங்கும் முதல் காலாண்டிலும் ஆண்கள் இரண்டாம் காலாண்டிலும் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்று கூறுகிறார்.
தற்கொலைக்குப் பல்வேறு நிகழ்வுகள் காரணமாக அமைகின்றன.
தேர்வில் தோல்வி, பெற்றோர் கண்டிப்பு, அநாதைகளாக விடப்படும் முதியோர், காதலில் ஏமாற்றம், வாழ்க்கையில் விரக்தி, வாழ்க்கைத் துணைவர் அல்லது துணைவியின் துரோகம், சிதைந்த குடும்பச்சூழல், அலுவலகப் பிரச்னைகள், பொருளாதார நெருக்கடி, நோய்வாய்ப்படுதல், போதைப் பொருளுக்கு அடிமையாதல் மற்றும் மனச்சிதைவு போன்ற சம்பவங்கள் தற்கொலைக்குக் காரணமாகின்றன.
பல சமயங்களில் நம்மைச் சுற்றியுள்ளோர் உண்மை, பொய், சரியானது, தவறானது, நல்லது, கெட்டது எவை எவை என ஆராயாமலும், பழி சுமத்த வேண்டும் என்ற நோக்கில் செயல்படும்போதும் அநீதியைச் சந்திக்கத் திராணியில்லாமல் சிலர் தற்கொலைக்குத் துணிவதுண்டு.
சில நேரங்களில் வார்த்தைகளும் குறிப்பாக அவற்றைப் பயன்படுத்துகிற மனிதர்களும் காரணமாக அமைகிறார்கள். அர்த்தங்கள் வார்த்தைகளில் இல்லை. ஆனால், மனிதர்களிடம் உள்ளன என்றொரு பழமொழி உண்டு.
அதாவது ஒரு சிலர் நமக்கு எதிராக வார்த்தைகளைப் பயன்படுத்தும்போது உரைக்காத, உறுத்தாத பழிச்சொல் வேறு சிலர் பயன்படுத்தும்போது, மனிதரைத் தற்கொலைவரை துரத்துகிறது.
மேற்குறிப்பிட்டவற்றில் எத்தனை பிரச்னைகள் நிரந்தரமானவை? உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்கள் சற்றே யோசித்தால் இந்தக் குற்றம் வெகுவாகக் குறைய வாய்ப்புண்டு. காலம் ரணங்களை ஆற்றும் அருமருந்து என அறிந்தவர்கள் உணர்ச்சி வயப்பட மாட்டார்கள்.
இயற்கையை நம்புகிறவர்களாக இருந்தாலும் அல்லது இறைவனை நம்புகிறவர்களாக இருந்தாலும் மானுடராய்ப் பிறத்தல் அரிது என்ற எண்ணத்திலிருந்து யாரும் மாறுபடவியலாது. அப்படிப்பட்ட மனித வாழ்வை மாய்த்துக் கொள்பவர்களால் நிகழும் அவலம் மிகப் பெரியது.
தற்கொலை செய்துகொள்ளும் மனிதர்களின் பெற்றோர், வாழ்க்கைத் துணை, குழந்தைகள், உடன் பிறந்தோர், உறவினர்கள், உடன் பணிபுரிவோர், நண்பர்கள், அண்டை அயலார் என ஒரு பெரிய வட்டமே ஏதோ ஒருவகையில் மிகப் பெரும் தர்மசங்கடத்துக்கும் ஆற்றொணா துயரத்துக்கும் உள்ளாகிறது.
குடும்பங்களிலும் கல்விக் கூடங்களிலும் குழந்தைகளுக்கு நல்ல விழுமியங்களை உணர்த்துதல், உறவு, நட்பு, சுற்றம் இவற்றோடு நல்லுறவுகளைப் பேணுதல், தவறான உறவு மற்றும் நட்பு வட்டங்களைத் தவிர்த்தல், நேர்மறைச் சிந்தனைகள், வரவுக்கேற்ற செலவு, திட்டமிட்ட வாழ்க்கை, உடற்பயிற்சி, யோகா, தியானம் போன்றவைகளின் மூலம் மனதை ஒருமுகப்படுத்துதல், இவையெல்லாம் மனம் செம்மைப்பட உதவும்.
நம் உயிரைப் படைக்கும் உரிமை நமக்கே இல்லை எனும்போது, அதை மாய்க்கும் எண்ணம் மட்டும் எழலாமா? பயம் காரணமாய் கணப்பொழுதில் பிணமாக விழும் மனிதன், சற்றே சிந்தித்துச் செயல்பட்டால் வையம் போற்றும் வகையில் வாழலாம் என்பதற்கு வரலாற்றில் பல சர்வதேசச் சான்றுகள் உண்டு.
உயிர் வாழ்தல் என்பது மனிதனின் உரிமை. அதைக் காப்பது அவனது கடமை.

நன்றி : தினமணி

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails