Thursday, May 09, 2013

"நிர்பய்' சோதனை: வெற்றிக்கு வெகு அருகில்... (பகிர்வு)


பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (டி.ஆர்.டி.ஓ.) நிறுவனத்தின் சமீபத்திய "நிர்பய்' ஏவுகணையின் சோதனை முடிவு பலவாறாக ஊடகங்களில் பரிசீலிக்கப்பட்டது. சில ஊடகங்கள், "சோதனை தோல்வியில் முடிந்ததாக' செய்தி வெளியிட்டன.


÷"நிர்பய்' சோதனையில் நடந்தது என்ன? பல்வேறு ஏவுகணை சோதனைகளை வெற்றிகரமாக நடத்திய நிறுவனத்தால் "நிர்பய்' சோதனையை ஏன் முழுவதுமாக முடிக்க முடியவில்லை? சராசரி குடிமகனை சரமாரியாகத் தாக்கும் இக்கேள்விகளுக்கு சுலபமான விடைகளில்லை. ஆனால், "நிர்பய்' திட்டத்தின் பின்புலம், விஞ்ஞானிகள் மேற்கொண்ட முயற்சிகள், சோதனை முடிவு இவைகளைப் பற்றிய சில பதிவுகள் இவ்விஷயத்தில் தெளிவான புரிதலைத் தரும்.
÷ஏவுகணைகளில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று "பேலஸ்டிக்' (எறிவிசை) ஏவுகணை மற்றொன்று "க்ரூஸ்' (சீரியங்கு) ஏவுகணை. தீபாவளி ராக்கெட் போன்றது "பேலஸ்டிக்' ஏவுகணை. ஏவப்பட்டதும் விண்ணில் சீறிப்பாய்ந்து இலக்கைத் தாக்கும். இவ்வகை ஏவுகணைகள் விண்ணில் பறக்கும்போது ரடார்களின் பார்வையில் அகப்பட்டுக் கொள்ளும். ரடார்களிடமிருந்து தப்ப, கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் வளிமண்டலத்துக்கு வெளியில் சென்று பயணம் செய்து மறுபடியும் வளிமண்டலத்திற்குள் நுழைந்து இலக்கைத் தாக்கும்.
"க்ரூஸ்' ஏவுகணை, ஏவப்பட்ட பின் கீழிறங்கி பூமி பரப்பிற்கு அல்லது கடற்பரப்பிற்கு மிக அருகில் பறந்து சென்று இலக்குகளைத் தாக்கும். இந்த உயரத்தில் மரங்களும், பறவைகளும், கடலலையும் ரடார்களைக் குழப்பும். இதனால் "க்ரூஸ்' ஏவுகணை ரடார்களின் பார்வையிலிருந்து தப்பும். வழியில் குறுக்கிடும் மலைகளையும், கட்டடங்களையும் தவிர்த்து க்ரூஸ் ஏவுகணை பறக்கும்.
அக்னி, பிருதிவி, தனுஷ் உள்ளிட்ட இந்திய ஏவுகணைகள் "பேலஸ்டிக்' ஏவுகணைகள். இந்தியாவின் ஒரே "க்ரூஸ்' ஏவுகணை பிரமோஸ். பிரமோஸ் "க்ரூஸ்' ஏவுகணையின் பயண தூரம் ஏறக்குறைய 290 கிலோ மீட்டர். இந்தியாவிடம் நீண்ட தூரம் பறந்து தாக்கவல்ல "க்ரூஸ்' ஏவுகணை இல்லை. இந்த பின்புலத்தில் ஏறக்குறைய பத்தாண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட திட்டம்தான் நீண்ட தூர "க்ரூஸ்' ஏவுகணை "நிர்பய்' (நிர்பய் என்றால் அச்சமில்லை என்று பொருள்.)
÷"நிர்பய்' நீண்ட பயண தூரம் கொண்டது. மிகக் குறைவான உயரத்தில் பறப்பதால் இடையில் வரும் தடைகளைத் தவிர்த்து கவனமாகப் பறக்க வேண்டும். ஆக "நிர்பய்' ஒரு ஏவுகணையாக இருந்தாலும் நீண்ட தூரம் கட்டுப்பாட்டோடு பறக்க வேண்டியிருப்பதால் ஒரு விமானமாகவும் இருக்க வேண்டியது அவசியம். இதுவரை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட எல்லா ஏவுகணையிலிருந்தும் "நிர்பய்' இங்குதான் வித்தியாசப்படுகிறது. ஆம், "நிர்பய்' ஏவுகணையாக ஏவப்படுகிற விமானம்.
÷ஏவுகணை செங்குத்தாக கப்பலிலிருந்தோ, ஏவு வாகனத்திலிருந்தோ செலுத்தப்படும். ஒரு விமானத்தைச் செங்குத்தாகச் செலுத்த இயலாது. எனவே, இறக்கை மடிந்து விரியும் வகையில் வடிவமைக்கப்பட்டதுடன், விமானமும் உருளை வடிவ குறுக்கு தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டது. இறக்கை மடித்த விமானம், ஏவு குழாய்க்குள் வைத்து ஏவப்பட எதுவாக அமைக்கப்பட்டது.
÷ஏவு குழாயிலிருந்து ஏவப்பட்ட பின்பு, இறக்கை விரிய வேண்டும். விமானத்தின் அதிவேகப் பயணத்தில் இறக்கை விரியாமல் போனால் என்ன செய்வது? இதற்கான சோதனைகள் நடத்தப்பட்டன. தண்டவாளத்தில் மிக வேகமாக விமானத்தை நகர்த்தி இறக்கையை விரிய விட்டு சோதனை செய்தார்கள் விஞ்ஞானிகள்.
÷ஏவுகணையின் முக்கிய அங்கமான எஞ்சின் இந்தியாவில் இல்லை. அயல்நாடுகளிலிருந்து எஞ்சினைப் பெறுவதற்கு செய்யப்பட்ட சில முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. ஏனெனில் எந்த நாடும் மற்ற நாட்டின் ஏவுகணை முயற்சிக்கு சுலபத்தில் உதவாது. கடைசியாக ஒரு நாட்டிலிருந்து எஞ்சின் பெறப்பட்டது. வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு நோக்கங்களுக்காக தயாரிக்கப்பட்ட எஞ்சினையும், விமானத்தையும் ஒருமித்து இயக்குவது அத்தனை சுலபமில்லை. ஆனால் அந்தக் கடினமான பணியை இந்திய விஞ்ஞானிகள் செய்தார்கள்.
÷ஏவுகணையின் துணைத்தொகுதிகள் எல்லாம் தனித்தனியாக கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டன.
÷விமானத்திலிருந்து தரைக்கட்டுப்பாட்டு மையங்களுக்குத் தகவல் பரிமாறும் உபகரணங்களை வழக்கமாக ஹெலிகாப்டரில் கொண்டுசென்று சோதனைப் பாதையில் பறக்க வைத்து சோதிப்பார்கள். ஹெலிகாப்டரின் வேகம் குறைவு. தொடர்ச்சியாக இயக்குவதும் சிரமம். எனவே ஒரு சிறிய ரக விமானம் இச்சோதனைக்குப் பயன்படுத்தப்பட்டது. (இவ்விமானம் தமிழகத்தைச் சேர்ந்தது என்பதில் நாம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.) தன்னந்தனியாக வங்காள விரிகுடாக் கடலில் பல மணி நேரங்கள் பறந்து தொலைத்தொடர்பு சாதனங்களை சோதிப்பதில் உதவிய விமானியும் பாராட்டத்தக்கவர். (இடையில் உணவு மற்றும் இயற்கை உபாதைகளுக்கு வழியில்லை).
÷இப்படிப் பலவாறாக சோதனைகள் முடிந்த பிறகே, "நிர்பய்' ஏவுகணை சோதனை கடந்த மார்ச் மாதம் 12 ஆம் தேதி நடந்தது. தீ கக்கி விண்ணில் சீறிப்பாய்ந்த "நிர்பய்', தனது இறக்கைகளை விரித்து வங்கக்கடலின் மேல் முன்குறித்த பாதையில் பயணப்பட்டது. "நிர்பய்' ஏவுகணையைப் பின்தொடர்ந்து "சுகோய்' ரகப் போர் விமானமும் சென்றது. ஏவுகணைக்கு அருகில் பறந்து கவனித்த சுகோய் விமானி, ""நிர்பய் ஒரு விமானி இயக்கிய விமானம் போலவே செயல்பட்டது'' என்று வியப்பு தெரிவித்தார்.
÷இருபது நிமிடங்கள் தன் பாதையில் சென்ற "நிர்பய்', வழிகாட்டு கட்டுப்பாடு தவறி பாதை விலக ஆரம்பித்தது. ஏவுகணைகள் வழிவிலகும் போது அவைகளை அழிக்கக்கூடிய அம்சமும் அதில் இருக்கும். எனவே, எரிபொருளோடு ஒடிசா கடற்கரையை நோக்கி வந்து கொண்டிருந்த "நிர்பய்' அழிக்கப்பட்டது. தரைக்கட்டுப்பாட்டின் மூலம், வழிமாறிய ஏவுகணையை அழிக்க முடியும் என்பது வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டது.
÷சோதனையில் இருபத்தைந்து சதவீத பயண தூரத்தை மட்டுமே கடந்திருந்தாலும், சோதனையின் பெரும்பாலான நோக்கங்கள் குறிப்பாக செங்குத்து ஏவுமுறை, முன்குறித்த பாதை நோக்கி திரும்புதல், பூஸ்டர் பிரிதல், இறக்கை விரிதல், எஞ்சின் இயங்குதல் போன்றவை வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டுள்ளன. மேலும் ஏவுகணை ஏறக்குறைய 200 கிலோ மீட்டர் தூரம் பறந்துள்ளது. (சென்னையிலிருந்து சிதம்பரம் இதே தூரம்தான்).
÷விஞ்ஞானிகளின் ஏழாண்டு கால முயற்சி, "நிர்பய்' ஏவுகணையின் இருபது நிமிடப் பயணத்தோடு முடியப் போவதில்லை. தொடர்ந்து தடைகளைத் தாண்டி முன்சென்று அக்னி, பிரமோஸ் உள்ளிட்ட ஏவுகணைகளின் அனுபவத்தைக் கொண்டு அடுத்த கட்ட சோதனைகள் தொடரும்.
÷பல்வேறு எதிர்மறையான செய்திகளால் நிரம்பியிருக்கும் இந்திய நாட்களில் அவ்வப்போது தமது சாதனைகளின் மூலம் நம்பிக்கை விதைக்கிற நமது விஞ்ஞானிகளை நம்புவோம். உள்நாட்டுக் கல்வி முறையில் பயின்று, கவர்ச்சியான மேல் நாட்டு வேலைவாய்ப்புகளைத் புறந்தள்ளி ராப்பகலாக உழைக்கிற அவர்களை உற்சாகப்படுத்துவோம். "நிர்பய்' சோதனை தோல்வியல்ல, வெற்றிக்கு மிக அருகில் என்பதை உணர்ந்து அடுத்த சோதனைக்கு அவர்களை வாழ்த்துவோம்.
நன்றி : தினமணி

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails