Monday, April 15, 2013

பொன்னோ் திருவிழாவும் தேய்ந்துபோன கலாச்சாரமும்


விஜய தமிழ்புத்தாண்டு தொடங்கியது புத்தூர் கிராம கோவிலில் அந்த ஊருக்கு நியமிக்கப்பட்டுள்ள ஐயர் பஞ்சாங்கம் படிக்க தொடங்கினார்.  இருநூறு குடும்பங்கள் உள்ள ஊரில் அங்கு குழுமியிருந்தது இருபது பேர்.

ஊரின் நல்லது கெட்டதுக ளை  நிர்மாணிக்கும்பெரிய தலைகள் ஒரு பத்து அதற்கடுத்து இளவட்டங்கள் ஒரு பத்துபேர் ஆக மொத்தம் இருபது பேர்.

இதுவே பத்துவருடங்களுக்கு முன் குறைந்தபட்சம் நூறிலிருந்து நூற்றைம்பது பேர் தமிழ் புத்தாண்டு அன்று ஒன்று கூடி ஐயரை பஞ்சாங்கம் படிக்க சொல்லி க
கேட்பார்கள்.

பஞ்சாங்கம் படித்து முடித்தவுடன் கிராமத்தினர் ஒவ்வொருவரும் ...

சாமி...விருச்சிக ராசி...கந்தாயபலன் சொல்லுங்க..

லாபம் 4 செலவு 2 ங்கோ என்று சொல்ல

அப்பாடி என்ற நிம்மதி வார்த்தை வந்துவிழும்

கேட்பவர்களும்  உண்டு கேட்காதவர்களும் உண்டு. விவசாயகிராமம் ஆகையால் அன்றைய தினமே விதை முகூர்த்தம் செய்யவும் பொன்னேர் கட்டவும் தேதி கிழமை நல்லநேரம் குறித்து அச்சடிக்கப்பட்ட காகிதம் கிராமம் முழுக்க விநயோகிக்கப்படும்.

பொன்னேர் கட்டும் நாள் அன்று அதிகாலை 5 மணியிலிருந்து ஆட்கள் நடமாட்டம் மாட்டுவண்டிகளின் போக்கு வரத்து தொடங்கிவிடும் காலையிலே குளம் அல்லோகலப்படும்.

பெரும்பாலும் பொன்னேர் கட்ட காலை 6.30 லிருந்து 7.30 க்குள் அல்லது 7.30 லிருந்து 8.30 க்குள் நேரம் குறிக்கப்படும் .

எல்லோரும் குளித்து மாடுகளை குளிப்பாட்டி ஏர் கலப்பை மண்வெட்டி(மம்முட்டி) மரக்கால் எல்லாவற்றையும் சுத்தம் செய்வார்கள்.

 பூசைக்கு தேவையான தேங்காய் பூ சூடம் பத்தி சாம்பிராணி குங்குமம் திருநீறு மஞ்சள்  ஆகியவற்றுடன் பச்சரிசி சக்கரை கலந்து  ஏர் கலப்பையுடன் மாடுகளை ஓட்டி கொண்டு கிராம  பொதுநிலத்திற்கு ஓவ்வொருவராக வந்து கூடுவார்கள்.

வந்தவுடன் மாடுகள் பூட்டிய ஏர்  நிலத்தை உழ தயாராக நிற்கவைப்பார்கள். மஞ்சளிலில் பிள்ளையார் பிடித்து சூரிய பகவான்  விவசாயத்திற்கு  உதவும் ஏர் மாடுகள் ஆகியவற்றை வணங்கி கும்பிட்டவுடன்  ஏர் உழுது தாங்கள் கொண்டு செல்லும் நவதானிய விதைகளை தெளித்து விட்டு கிராம கோவில் தெய்வங்களை வணங்கி களைவார்கள்.

பொன்னேர் கட்ட மேலத்தெருவில் உள்ளவர்கள் தனியாகவும் கீழத்தெருவில் உள்ளவர்கள் தனியாகவும் ஒன்று சேர்வார்கள் அல்லது அவரவர் சொந்த நிலங்களில் குறிப்பிட்ட நாளில்  விதை முகூர்த்தம் செய்வார்கள்.

ஐம்பதிலிருந்து  அறுபது  பேர் வரை குழுவாக சாமி கும்பிட வார்கள்.  அந்த இடமே நக்கலும் நையாண்டியுமாக சந்தோசமான மணித்துளிகளாக அந்நேரம் நகரும்.

குறிப்பிட்ட 10 வருடங்களில் இத்தகைய நிகழ்வுகளில் பெரிய மாற்றம் டிராக்டர் வந்தவுடன் ஏர்கள் குறைய ஏர்கள் குறைந்தவுடன் மாடுகள் குறைய விவசாய தொழிலும்  குறைந்து போய்  பொன்னேர் கட்ட நாலு பேர் இருந்தார்கள்.

அவர்களும் கடமையாய் வந்துபோக ஒற்றுமையின் மகிழ்ச்சி என்னவிலை என்பதை பழைய நினைவுகளில் தான்  எண்ணமுடிகிறது.

மகிழ்ச்சியை அனுபவிக்க முடியவில்லை.

ம்ஹம்...என்ற ஆயாசத்தை தடுக்கவும் முடியவில்லை.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails