Wednesday, March 20, 2013

ஏமாந்தே தீருவோம்...(பகிர்வு)


ரசவாதம் என்பதில் இப்போதும் மக்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. எனக்குத் தெரிந்த ஒருவர் கையில் எப்போதும் "ரசமணி' என்று வெள்ளி நிறத்தில் ஓர் உருண்டையை வைத்திருப்பார். பாதரசத்தைப் புடம் போட்டு ரசமணியாக்கி ஒரு பொற்கொல்லன் தந்ததாகவும் அதைக் கழுத்தில் அணிந்துகொண்டால் தோஷங்களும் நோய்களும் பீடிக்காது என்றும் அவர் சொல்வார்.
""அது மட்டுமல்ல. அவர் பாதரசத்தை மூலிகைச் சாற்றில் கலந்து புடம் போட்டுத் தங்கமாகவே மாற்றியதை என் இரண்டு கண்ணாலும் பார்த்திருக்கிறேன்!'' என்றும் சொன்னார்.
""நீ நம்பவில்லையா?அறிவியல்படி அது சாத்தியம்தான். பாதரசத்தின் அணு எண் 80. தங்கத்தின் அணு எண் 79. பாதரச அணுவிலிருந்து ஒரு புரோட்டானை எடுத்துவிட்டு ஓரிரு நியூட்ரான்களைச் சேர்த்துவிட்டால் அது தங்க அணுவாக மாறிவிடும்'' என்றும் விளக்கினார்.
அதுபோல அணுக்களிலிருந்து புரோட்டானைப் பெயர்த்தெடுக்கப் பல கோடி ரூபாய் செலவில் துகள் முடுக்கிகளை அமைக்க வேண்டும் என்று சொல்லி அவருக்குக் கோபமூட்ட விரும்பாமல் ""அந்தப் பொற்கொல்லர் பில் கேட்ஸ் அளவுக்குப் பெரும் பணக்காரராகியிருப்பாரே!'' என்றேன்.
""அதுதான் முடியாது! தனக்கும் தன் குடும்பத்துக்கும் ஒருநாள் செலவுக்குத் தேவைப்படுகிற அளவுக்கே அவர் தங்கம் உற்பத்தி செய்யலாம், அதற்கு மேல் பேராசைப்பட்டால் அவருக்கு ரசவாத வித்தை மறந்து போகும்!'' என்று சொல்லி அவர் முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.
"ஏழே நாள்களில் சிவப்பழகு, முடியற்ற தலையில் ஒரே மாதத்தில் அடர்த்தியான கூந்தல், கொத்துக் கொத்தாக வந்து இளம்பெண்கள் மொய்த்துக் கொள்ள வைக்கும் சென்ட்' என்றெல்லாம் விளம்பரம் செய்கிறவர்களுக்கும் இந்த ரசவாதப் பொற்கொல்லருக்கும் வித்தியாசமே கிடையாது.
இத்தகைய ஏமாற்றுக் கருத்துகளை மறுதலிக்க விஞ்ஞானிகளும் மருத்துவர்களும் பெரும்பாலும் முன்வருவதில்லை. மக்களுக்குப் பட்டால்தான் புத்தி வரும் என்று அவர்கள் சும்மாயிருக்கிறார்களோ என்னவோ!
மதத்திலும் போலி அறிவியல் புகுந்து விளையாடுகிறது. புராணங்களிலும் மத நூல்களிலும் சொல்லப்பட்டிருக்கிற அதிசய சம்பவங்கள் உண்மையிலேயே நடைபெற்றன என வாதிக்கிற பல நூல்கள் சில பிரபலமான வெளியீட்டார்களால் வெளியிடப்பட்டு அமோகமாக விற்றுள்ளன. தேவர்களும் அசுரர்களும் வேறு கோள்களிலிருந்து பூமிக்கு வந்து அற்புதங்களை நிகழ்த்திக் காட்டிவிட்டுத் திரும்பிப் போனதாக அந்த நூல்கள் நிரூபிக்க முயல்கின்றன. பிரமிடுகளிலும் மயன் கோயில்களிலும் விண்வெளிக் கலங்கள், வேற்றுக்கோள் மனிதர்கள் ஆகிய வடிவங்கள் பொறிக்கப்பட்டிருப்பதாக அவை சான்று காட்டுகின்றன.
1951-ஆம் ஆண்டில் ரான் ஹப்பர்ட் என்பவர் தாயின் கர்ப்பத்தில் தோன்றிய நாளிலிருந்தே மனிதக் கரு தன் தாயின் குரலை அடையாளம் கண்டு நினைவில் வைத்துக்கொள்ளும் என்று ஒரு கருத்தை வெளியிட்டார். அதை நம்பி ஏராளமானவர்கள் தாம் தாயின் கருப்பைக்குள்ளிருந்தபோது பெற்ற அனுபவங்களை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வர உதவும் ஆழ்மனச் சிந்தனைப் பயிற்சிகளைக் கற்றுத்தர அவர் நடத்திய வகுப்புகளில் நிறையக் கட்டணம் செலுத்திச் சேர்ந்தனர்.
பல பத்திரிகைகள் இத்தகைய கருத்துகளை முன் வைக்கும் கட்டுரைகளை வெளியிட்டுத் தமது விற்பனையைக் கூட்டிக்கொள்ள முனைவதுண்டு. எல்லா நாடுகளிலும் இத்தகைய இதழ்கள் உண்டு. பல ஆண்டுகளுக்கு முன்னால் உலகெங்கும், பறக்கும் தட்டுகளைப் பற்றிச் செய்திகள் பரவியபோது தமிழ்நாட்டிலும் சில கிராமங்களில் பறக்கும் தட்டுகள் வந்திறங்கியதாகச் சில தமிழ்ப் பத்திரிகைகள் கொட்டை எழுத்துகளில் செய்திகளைத் தந்தன.
இல்லற சுகத்தைப் பற்றிய "அறிவியல்' கட்டுரைகளை விவரமாக வெளியிடும் "மஞ்சள்' பத்திரிகைகளும் உண்டு. அவற்றைப் படித்துவிட்டுப் பாமர மக்கள் தவறான சிகிச்சைகளை மேற்கொண்டு, "இருப்பதையும் இழந்த' சம்பவங்களும் நிறைய உண்டு. மருத்துவர்களும் உளவியலாரும் எளிதாகத் தீர்க்கக்கூடிய சிறு பிரச்னைகளை இத்தகைய கட்டுரைகள் ஊதிப் பெரிதாக்கி மக்களைக் குழப்பி அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கும்.
விஞ்ஞானிகள் பல விதம். சிலர் மகா மேதைகள். சிலர் மகா மூடர்கள், சிலர் இரண்டுக்கும் நடுவிலிருப்பவர்கள். ஏதாவது ஒரு துறையில் பாண்டித்தியம் பெற்றுப் புகழும் பெற்றுவிட்டால் மற்ற எல்லா விஷயங்களுமே தமக்கு அத்துபடி என்ற மனப் பிரமை பிடித்தவர்களும் உண்டு.
அரிஸ்டாட்டல் நல்ல உயிரியல் அறிஞர். திமிங்கிலம் ஒரு பாலூட்டி விலங்கு என்பதை அவர்தான் கண்டுபிடித்தார். ஆனால், அவர் எழுதி வைத்துவிட்டுப்போன பல அபத்தமான வானியல் கருத்துகள் காரணமாகக் கலிலியோ, புரூனோ, கோப்பர் நிக்கஸ் ஆகியோர் துன்பம் அனுபவித்தார்கள். டார்வினின் கருத்துகளைத் தீவிரமாக எதிர்த்த பூசாரிகளில் பல சிறந்த அறிஞர்களும் இருந்தார்கள்.
இத்தகைய அறிஞர்களில் பலர் சுவையாக எழுதவும் பேசவும் வல்லவர்கள். மேலோட்டமாகப் பார்க்கிறபோது அவர்கள் வெளியிடும் அறிவியல் கருத்துகள் சரியானவையாகக் கூடத் தெரியும். அவற்றை ஆழ்ந்து பரிசீலித்தால்தான் நன்கு நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகள் சாதுரியமாகத் திரிக்கப்பட்டு அல்லது விஸ்தரிக்கப்பட்டு எழுதப்பட்ட விஷயம் விளங்கும். அந்த அறிஞர் உண்மையிலேயே அறிவியலும் பயின்றவராயிருந்துவிட்டால் அவருடைய கூற்றுகளில் குற்றம் கண்டுபிடிப்பது மிகவும் கஷ்டம்.
இன்று காலம் மாறிவிட்டது. மதங்களின் பிடிப்பு தளர்ந்து வருகிறது. மதவாதிகளும் பழமைவாதிகளும் மிகவும் அடக்கி வாசிக்கிறார்கள். உலகம் முழுவதிலுமுள்ள விஞ்ஞானிகள் ஒருவரோடொருவர் கணப்பொழுதில் தொடர்புகொண்டு கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்ள முடிகிறது. புரளிகளும் பொய்களும் உடனுக்குடன் தோலுரிக்கப்பட்டு விடுகின்றன. இருந்தாலும் அதையும் மீறி ஏமாறும் பாமர மக்கள் இருக்கவே செய்கிறார்கள். சூனியத்திலிருந்து தங்கச் சங்கிலிகளை வரவழைத்து ஒரு சாமியார் கொடுத்தால் அதைக் கை நீட்டிச் சந்தோஷமாக வாங்கிக் கொள்கிறவர்கள் இருக்கிறார்கள்.
மூலிகைகளிலிருந்து பெட்ரோல் உற்பத்தி செய்ய முடியும் என்று ஒருவர் சொன்னால் அதற்கான தொழிற்சாலைகளை நிறுவக் கோடிக்கணக்கில் பணம் செலவழிக்க முன் வருகிறவர்களும் உண்டு. இன்றளவும் தொலைக்காட்சிகளில் தனவசீகர தாயத்து, கவசம் என்றெல்லாம் விளம்பரம் செய்து அவற்றை வீட்டில் வைத்துப் பூசித்தால் பணம் வந்து கொட்டும் என்று வாக்குறுதி அளிப்பதை நம்பி எவ்வளவோ பேர் பணம் அனுப்பி ஏமாறுகிறார்கள்.
பல போலி விஞ்ஞானிகள் மதம் சார்ந்த நம்பிக்கைகளுக்கு அறிவியல் அடிப்படைகளை முனைந்து கண்டுபிடிப்பார்கள். அது முடியாதபோது கற்பனை செய்து அறிவியல் ஆதாரத்தை உருவாக்குவதும் உண்டு.
பல்லாண்டு காலமாக ஆன்மிகப் பாரம்பரியத்தில் ஊறிப் போனதன் காரணமாகப் பலர் அறிவியல் படித்திருந்தாலும் மதச்சடங்குகளைப் புறக்கணிக்கத் துணிவதில்லை.
ஓர் ஆசிரியர் பள்ளியில் மாணவர்களுக்குச் சூரிய கிரகணம் என்பது சந்திரனின் நிழல் பூமியின் மேல் விழுவதாலும் சந்திர கிரகணம் என்பது பூமியின் நிழல் சந்திரன் மேல் விழுவதாலும் ஏற்படுகிறது என விளக்கி விட்டு வீடு திரும்பியதும் சூரியனையும் சந்திரனையும் ராகு, கேது என்ற பாம்புகள் விழுங்கியதால் ஏற்பட்ட தோஷங்களை நிவர்த்தி செய்ய மந்திரங்களை ஓதித் தர்ப்பணம் செய்து தலை முழுகுகிறார். உண்மையான தெய்வ பக்தி நல்லதுதான். அது சடங்குகளில் புதையுண்டு போகும்போது உண்மையான தத்துவங்களும் புதைக்கப்பட்டு விடுகின்றன.
சூரியனின் கரும்புள்ளிகள் தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சிகளைக் குலைக்க முடிகிறது உண்மையென்றால் செவ்வாயும் வியாழனும் உங்களுக்குத் திருமணம் நடைபெறாமல் தடுக்கின்றன என்று சொல்வதில் என்ன தவறு என்று ஒரு பிரபல சோதிடர் என்னிடம் வாதிட்டார்.
அண்மையில்கூட ஒருவர் வானிலை முன்னறிவிப்புக்குக் கோள்களின் நிலைகள் உதவும் என்று கூறி ரமணனுக்குப் போட்டியாக மழை முன்னறிவிப்புச் செய்ய ஆரம்பித்திருக்கிறார். அத்துடன் நில்லாமல் பூகம்பம், வெள்ளம் போன்ற உற்பாதங்கள் தோன்றப் போவதையும் கோள்களின் சஞ்சாரத்தின் மூலம் முன்னறிவிப்புச் செய்ய முடியும் என்றும் அவர் சொல்கிறார். அவர் சொன்னதையெல்லாம் பட்டியலிட்டு வைத்துக்கொண்டு அவர் சொன்னபடியெல்லாம் நடந்ததா என்று சரிபார்க்க யாரும் முனையவில்லை. அதுவே அவருடைய துணிச்சலான கூற்றுகளுக்கு ஊக்கமளித்திருக்கலாம்.
மேலை நாட்டவர் எதை எழுதினாலும் அதை வேதவாக்காக ஏற்பவர்கள் நம்மவர்களில் உண்டு. இம்மானுவல் வெலிகோவஸ்கி என்பவர் ""உலகங்களின் மோதல்'' என்று ஒரு நூலை 1950-இல் எழுதி வெளியிட்டு ஏராளமாகப் பணம் சம்பாதித்துவிட்டார். ரீடர்ஸ் டைஜஸ்டில் கூட அந்த நூல் சுருக்கிப் பிரசுரிக்கப்பட்டது. அதில் அவர் புராணங்களில் கூறப்பட்டிருக்கிற பல சம்பவங்கள் உண்மையில் நடந்தவை என்று விவரித்து மதப்பூசாரிகளின் பேராதரவைப் பெற்றார்.
வியாழனிலிருந்து ஒரு பெரிய துண்டு பூமியின் மேல் மோதுவதைப்போல நெருங்கி வந்தபோது பூமியின் சுழற்சி கிட்டத்தட்ட நின்றுவிட்டது எனவும் ஜோஷுவா என்பவர் சூரியனையும் சந்திரனையும் அசையாமல் நிற்கச் செய்ததாகப் புராணங்களில் கூறப்பட்டிருக்கிற சம்பவம் அப்போதுதான் நடந்தது எனவும் வெலிகோவஸ்கி கூறியிருக்கிறார். நம் நாட்டில்கூட நளாயினி சூரியனை உதிக்கவிடாமல் தடுத்த கதையுண்டு!
கிரேக்கப் புராணங்கள், செவ்வாய் இரண்டு குதிரைகள் பூட்டிய தேரில் பயணம் செய்வதாகக் கூறுகின்றன. கலிவரின் பயணங்கள் என்ற நூலில் ஜோனதன் ஸ்விப்ட் செவ்வாய்க்கு இரண்டு நிலவுகள் உள்ளதாகக் கூறுகிறார். இது வியப்புக்குரியது. ஏனெனில், அதற்கு 152 ஆண்டுகள் கழித்துத்தான் அந்த நிலவுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்தியர்களும் சூரியன் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் வருவதாகக் குறிப்பிடுகிறார்கள்.
சூரிய ஒளியில் ஏழு நிறங்களிருப்பதையே அவர்கள் குறிப்பதாக வாதிடுவோர் உண்டு. இவையெல்லாமே வியாழனின் துண்டு பூமியை ஒட்டிப் பறந்தபோது அப்போதிருந்த மக்கள் கண்ணால் கண்டு பதிவு செய்து வைத்த பின்னர், புராணங்களாகப் பரிணமித்தன என வெலிகோவஸ்கி கூறுகிறார்.
நல்ல வேளையாக உண்மையான விஞ்ஞானிகள் அவர் சொன்னதையெல்லாம் பொய்யென நிரூபித்து அவருடைய நூல்களை வெளியிடுகிற பதிப்பகங்களையே புறக்கணித்துவிட்டார்கள்.

நன்றி தினமணி

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails