Saturday, June 20, 2009

தொடு சுகம்

நாம் வளர்க்கும் பிராணிகளிலேயே நாய்தான் தொடு சுகத்தை ரொம்பவும் விரும்பும். நாம் வெளியூர் போய்விட்டு வீட்டுக்குள் நுழைந்ததுமே பாய்ந்து வந்து நம்மபேரில் விழுந்து கட்டிப்பிடிடா என்னை என்று சொல்லுவதுபோல இருக்கும் அதன் ஆரவாரம்.

பொதுவாக தொடுசுகத்தை விரும்பாத அந்தச் சுகத்துக்கு ஏங்காத உயிர் ராசிகளே கி்டையாது மனிதராசி உட்பட.

முதல்முதலில் இது இவனுக்குக் கிடைப்பது பெற்ற தாயிடமிருந்துதான் . இது கிடைக்காத அதிஷ்டங்கெட்ட(அனாதை)ப்பிள்ளைகளை நான் கவனித்திருக்கிறேன். அவைகள் கட்டுக்கடங்காத சுழிசேட்டைகள் செய்துகொண்டே இருக்கும்.

இது பெறுகிறவர்க்கும் இன்பம் தருகிறவர்க்கும் இன்பம்.

இந்தச் சுகம் தாயிடம் முளைவிட்டு தந்தையிடம் வேர்விட்டுசகோதரர்களிடம் இலைவிட்டு நண்பரிடம் மொட்டடாகி காதலரிடம் பூவாகி..என்று வளர்ந்துகொண்டே போகும் . உணர்ச்சி வசப்படும் போதெல்லாம் இந்தத் தொடுதல் நிகழ்ந்துகொண்டே இருக்கும் அவை எந்தவகை உணர்ச்சியானாலும் சரி.

தொடுதலினுடைய கிளைவிடுதல் என்பது பலவகைகள் ஆரம்பத் தொடுதல் தடவுதல் உராய்தல் அழுத்துதல் அமுத்துதல் நிமிட்டுதல் செல்லத்திறுக்கல்கள் நுள்ளுதல் தட்டுதல் இப்படி இன்னும் இன்னும் இதன் ஆக உச்சம் தழுவல் ஆறத் தழுவுதல்.

-கி.ராஜநாராயணன்-

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails